சென்னை, ஜன.2 தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியில் 2006ஆம் ஆண்டை சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஹனிஷ் சாப்ரா, அஜய் யாதவ் (மூத்தவர்), ஜி.லட்சுமி பிரியா, எஸ்.ஜெயந்தி, பி.சங்கர், கே.விவேகானந்தன், ஏ.ஞானசேகரன், டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் நிர்வாக பதவி நிலை உயர்வு பெறுகின்றனர்.
2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கு வந்து தற்போது மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றும் டி.பிரபுசங்கர் (கரூர்), ஏ.அருண் தம்புராஜ் (நாகை), அல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), பி.காயத்ரி கிருஷ்ணன் (திருவாரூர்), ஜெ.மேகநாத ரெட்டி (விருதுநகர்), எஸ்.வினீத் (திருப்பூர்), எஸ்.பி.அம்ரித் (நீலகிரி), ஜெ.யு.சந்திரகலா (விடுப்பில் உள்ளார்), ஷ்ரேயா பி.சிங் (நாமக்கல்), பி.ரமண சரஸ்வதி (அரியலூர்), ஜெ.விஜயாராணி (சென்னை) ஆகியோர் நிர்வாக நிலை உயர்வு பெறுகின்றனர்.
இதேபோல் தமிழ்நாடு அரசுப்பணியில் 2009 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட மொத்தம் 49 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அவர்கள் தற்போதுள்ள பணி மற்றும் பதவியில் நீடித்தாலும், அடுத்ததாக பெறும் பதவிக்கான ஊதியத்தை பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவொற்றியூரில் வீடுகள் இடிந்த பகுதியில் வீடு கட்டி வழங்க முடிவு
திருவொற்றியூர், ஜன.2 திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் 28 வீடுகள் இடிந்த நிலையில், அங்கு உள்ள சிதிலமடைந்த வீடுகள் உட்பட்ட 336 பயனாளிகளுக்கு அதே இடத்தில் வீடு கட்டி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப் பகுதி உள்ளது. அதில் 336 வீடுகள் இருந்தன. அந்தப் பகுதியில் ஒரு குடியிருப்பில் இருந்த 28 வீடுகள், கடந்த 27ஆம் தேதி இடிந்து விழுந்தன. அதை ஒட்டியுள்ள 20 வீடுகளையும் இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் சிதிலமடைந்து இருப்பதால், அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு அதே இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளும் பயனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி,அதே இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்துள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதாரப் படியாக ரூ.24 ஆயிரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வரும் வாரத்தில் வழங்க இருப்பதாக அவ்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பயனாளிகள் தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு, வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இடிந்தபகுதியில் மீட்புப் பணிகளும் முடிவடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி இருந்த பணம், நகை மற்றும் ஆவணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, உரியவர்களிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
மெரினா கடற்கரைக்கு
இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை
சென்னை, ஜன.2 ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று 1,489 பேருக்கு தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தான் கரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மெரினா கடற்கரைக்கு பொழுது கழிக்க ஏராளமானோர் வருவதை தடுக்கும் வகையில் விடுமுறை தினமான இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்குள் செல்ல முயன்றால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்துவார்கள்.
இந்த தடை உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக நடைபாதையில் செல்வதற்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment