சென்னை,ஜன.8- கூட் டுறவு சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன் வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன் வடிவை சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச் சர் இ.பெரியசாமி நேற்று (7.1.2022) அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப் பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு இந்த சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்தும் பல புகார்கள் வரப்பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதில் அதிக அளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது போன்றவை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனவே, கூட்டுறவு சங்கங்களின் நலனை பாது காக்கும் நோக்கில், அவற்றின் நிர்வாகங்களை நெறிப் படுத்தவும் முறையான ஆளுகையை உறுதி செய்யவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், சங்கங்களின் இயக்குநர்கள் குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டு களாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அத்துடன் ஒரு சட்டத்தை மேற்கொள்வதன் மூலம் இந்தியஅரசியலமைப்பின் 9-பி பகுதியின் வகைமுறை களுடன் இசைந்து செய்யப்பட்ட திருத்தங்களுக்கு முந்தைய 1983-ஆம் ஆண்டு கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் இருக்கும் சில வகை முறைகளை மீட்டெடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் இ.பெரியசாமி தாக்கல் செய்த மற்றொரு சட்டமுன்வடிவில், ‘கண்பார்வை குன்றிய நபர்கள், உடல் ஊனம் என்பதால் எழுத முடியாதவர்கள் ஆகியோரை பதிவுபெற்ற கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களாக்கும் வகை யில் உரிய திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment