எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ஆம்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பான அறிவிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் தகுதியானவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 24ஆம்தேதி (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து வருகிற 27ஆம்தேதி (வியாழக்கிழமை) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ச்சியாக 28ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 29ஆம்தேதி (சனிக்கிழமை) அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடத்தப்பட இருக்கிறது.
அதையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 30ஆம்தேதி (ஞாயிற்றுகிழமை) முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு கரோனா தொற்றை கருத்தில் கொண்டு இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.
முதல்முறையாக மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு போல இணையவழியில் நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுதொடர்பான முழு விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும், தரவரிசை பட்டியல் வெளியிடும்போதும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அகில
இந்திய ஒதுக்கீட்டுக்கு 1,053 இடங்கள் போக, மாநில ஒதுக்கீட்டு இடங்களான 1,163 இடங்களுக்கு கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு இணையம் மூலமாக நடக்க உள்ளது.
அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு பதிவு செய்வதற்கு அவகாசம் வழங்கப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து விருப்ப இடங்களை தேர்வு செய்வது போன்ற நடைமுறைகள் நடக்கும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment