தந்தை பெரியாரின் நினைவுநாள் வானொலி உரை (24.12.2021) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

தந்தை பெரியாரின் நினைவுநாள் வானொலி உரை (24.12.2021)

தமிழ்நாடு அறிந்த கல்வியாளரும், அண்ணா பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக ஒளிவீசியவருமான டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் கவிதை யால் தந்தை பெரியாரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

தன்னலமற்ற தொண்டு - இதுதான் துறவு.

ஓயாது உழைப்பு - இதுதான் தவம்.

நீரெல்லாம் அவன் வியர்வை;

தமிழகத்தின் நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும்

ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று;

நம்மோர் உயர் வெல்லாம் அவன் தந்த பிச்சை அன்றோ?

தடம் சொன்னான்; தமிழர்க்குக் கண்ணும் காதும்

தன்னறிவும் மன வலிவும் தந்தான்;

என்றும் கடன்பட்ட தமிழுலகம் நன்றி சொல்லும்!

காவியங்கள், கலைகள் அவன் பெருமை பேசும்!

"குலோத்துங்கன்" என்ற பெயரில் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தந்தை பெரியாரை பல கோணங்களிலும் படம் பிடித்துள்ளார்.

தந்தை பெரியார் யார் என்பதை மற்றவர்கள் கூறுவதைவிட, தன்னைப் பற்றி தந்தை பெரியார் எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியமானது. இதோ பெரியார் பேசுகிறார் -

"ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து, மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தைகளாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு நான் பார்ப்பனர்களிடமும் மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சியாகும்."

- தந்தை பெரியார், விடுதலை, 01.01.1962

1962இல் இவ்வாறு கூறுகிறார்.

எப்படி இருந்தாலும் அரசியலிலோ, சமுதாயத்திலோ எவ்வளவு மாறுபட்ட அபிப்ராயம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நான் யாருக்கும் விரோதியில்லை. யாவரிடமும் துவேஷமில்லை, மனிதர்கள் எல்லோரும் ஒரே அபிப்ராயம் கொள்ள முடியாது. சரியாகவோ, தப்பாகவோ அபிப்ராயபேதம் ஏற்படுவது மனிதனுக்கு இயற்கையேயாகும்.

ஒருவருக்கொருவர் அபிப்ராய பேதத்தை மதிக்காவிட்டாலும் - ஏற்காவிட்டாலும் வெளியிலெடுத்துச் சொல்ல இடம் கொடுக்க வேண்டியது மானத்திலும் மனிதத் தன்மையிலும் கவலையுடையவனின் கடமையாகும். (குடிஅரசு 19.12.1937)

"எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும், சுயநலமும் எல்லையற்றன. திராவிடச் சமுதாய நலனையே என் சொந்த நலனாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்" என்று 1955இல் சொல்கிறார். (விடுதலை 15.1.1955)

"நீதிதான் சாட்சி; எனக்கு வேறு சாட்சியில்லை" (விடுதலை 20.11.1957)

"ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள். நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும் வளர்ந்து வருகின்றது என்பதற்கு அடையாளம் என்ன என்றால்...

நாட்டில் எல்லாத் துறைகளிலும், சம தருமம், சம ஈவு, சம உடைமை,

சம ஆட்சித் தன்மை,

சம நோக்கு,

சம நுகர்ச்சி,

சம அனுபவம் இருக்க வேண்டும், ஏற்பட வேண்டும்" (விடுதலை 13.1.1965)

56 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு எழுதுகிறார்.

"மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேஷம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் எனது ஆசை." (விடுதலை, 07.08.1938)

1938இல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் ஓர் எரிமலை - புரட்சியாளர் என்று எல்லாம் விமர்சிக்கப்படுபவர். அத்தகைய ஒரு தலைவரிடம் குடி கொண்ட பண்பு நலன்களை அறிந்தால் வியப்பின் விளிம்புக்கே செல்லுவார்கள். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைச் சொல்ல விழைகிறேன்.

தந்தை பெரியாரின் பண்பு நலன்குறித்து தினமணிக் கதிரில் (3.11.1985)  வெ.சுப்ரமணியம் கூறிய தகவல் சுவையானது.

இறைவன் உறையும் திருக்கோவில்களில் குளித்துவிட்டு சட்டை அணியாமல் நெற்றியில் நீறு அல்லது திருநாமத்துடன்தான் சென்று வழிபட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டால் பக்தர்களில் எத்தனை பேர் அதனைக் கடைப்பிடிப்பார்கள் என்பது விவாதத்திற்குரிய விஷயம்.

ஆனால், அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் தானே வடலூரில் தோற்றுவித்த சத்திய ஞான சபைக்குள் புகுந்து வழிபாடு செய்ய கீழ்க்கண்ட நிபந்தனையை அவர் வாழும் காலத்திலேயே புகுத்தி அதை அறிவிப்பாகவும் சபையின் வாயிலில் எழுதச் செய்துள்ளார் -

"கொலை புலை நீத்தவர்கள் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்" என்று.

வள்ளலார் வழிவந்தவர்கள், வள்ளலார் பக்தர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமலே உள்ளே போய் ஜோதி வழிபாடு செய்து வருகிறார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் புலால் உணவை விட்டவர்கள் அல்லர். ஆயினும் உள்ளே சென்று வழிபடத் தயங்கினார்கள் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சபையை தற்செயலாகப் பார்வையிட அழைக்கப்பட்டு வந்த ஒரு தமிழகத் தலைவர் சபை வாயிலில் யாரும் கூறாமலேயே தானாகவே ஊன்றிப் படித்துவிட்டு நான் தகுதி பெற்றவன் இல்லை என்று கூறி உள்ளே வர மறுத்துவிட்டாராம். வெளியிலிருந்தே பார்வையிட்டாராம்.

அவரை அழைத்துச் சென்றவரும் ஞான சபையின் இன்றைய தக்காரும் ஆன தவத்திரு ஊரன் அடிகள் இச்செய்தியை மயிலை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த காந்தி - வள்ளலார் விழாவில் தெரிவித்தார். அவர் சொன்ன பிரமுகர் பெரியார் .வெ.ரா.

வள்ளலாரின் சத்திய ஞான சபை யில் நுழைகிறவர்கள் எத்தனை எத்தனைப் பேர்களோ! பெரியார் போல் நடந்து கொண்டவரைக் காண்பது அரிதினும் அரிதே!

பக்தி என்பது தனிச்சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறியவர் . அதன்படி தனி வாழ்விலும், பொது வாழ்விலும் நடந்து காட்டிய நன்னெறிக்குப் பெயர்தான் பெரியார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிகச் சரியாக செறிவாகச் செதுக்கினார்  பெரியாரை!

"மிக்க பண்பின் குடியிருப்பு" என்ற அந்த வரிக்கு முழு கொள்கலன், முற்றும் பொருந்திய இலக்கணம் தந்தை பெரியார் அன்றோ!

இன்னும் எழுத எத்தனை எத்தனையோ உண்டு. இன்றைக்கு இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ் மண்ணில் செயல்பாட்டில் இருக்கிறதென்றால் அதற்கான அஸ்திவாரம் அவர் போட்டதுதான்.

பெண்ணுரிமைக்காக அவர் பிரச்சாரம் செய்தது போல், எழுதியது போல், போராடியது போல் வேறு ஒருவரைச் சொல்ல முடியுமா? அதனால்தான் 1938இல் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைச் சூட்டினர்.    

(வாழ்க்கைத் துணைநலம், பக்கம் 46)

ஆண்களால் பெண்களுக்கு விடுதலை இல்லை (குடிஅரசு, 12.8.1928) என்று அடித்துச் சொல்லும் இந்த ஆண்தான் ஆயிரம் ஆயிரம் அன்புத் தாயாக மலர்ந்து பெண்ணினத்தின் உரிமை என்ற சேயை இரக்க மழையால் முத்தமிடுகிறார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை அவரது திண்ணைப் பள்ளிக் கூடத்திலேயே பீறிட்டது.

தொண்டறம் என்பது அவரது இளம் பருவத்திலேயே தொற்றிக் கொண்டது.

பிளேக் நோய் ஈரோட்டிலே பரவியது. அந்த நோயால் மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்யக் கூட, அஞ்சி நடுநடுங்கிய நிலையில் பெரியாரின் இளைஞர் பட்டாளம்தான் பிணங்களைத் தோளில் சுமந்து சென்ற அடக்கம் செய்தது.

நகராட்சித் தலைவராக ஈரோட்டில் இருந்தபோது அவரின் நிர்வாகத் திறனும், சீர்திருத்தமும் வெளிப்பட்டன.

காங்கிரசுக்குள் பெரியார் நுழைந்ததுகூட காந்தியாரின் நிர்மாணத் திட்டம் என்னும் சீர்திருத்தத்தின் கவர்ச்சியால்தான்.

காங்கிரசுக்குச் சென்ற சிறிது காலத்திலேயே சென்னை மாநில செயலாளர், தலைவர் பதவிகள் அவரைத் தேடிவந்தன.

காங்கிரசுக்குள்ளே இருந்து கொண்டே ஜாதி - தீண்டாமைப் போரின் தளகர்த்தராகச் செயல்பட்டார். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம் எல்லாம் அவர் தலைமையில் நடந்தவைதான். அவற்றில் வெற்றிக்கொடியை நாட்டினார்.

வேறொரு மாநிலமான கேரளம் சென்று தீண்டாமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார். அதனைப் பாராட்டி தான் 'நவசக்தி' ஏட்டில் தமிழ்த் தென்றல் திரு.வி.. அவர்கள் வைக்கம் வீரர் என்ற பட்டம் சூட்டினார்.

காங்கிரசுக்குள் இருந்து கொண்டே வகுப்புரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். அது நிறைவேறாத நிலையில், வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.

கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடம் பெற வேண்டும் என்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்தார்.

தந்தை பெரியார் நூற்றாண்டை ஒட்டி ஒன்றிய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.

மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து, அன்றைய நாளில் அரசு அலுவலர்கள் அனைவரையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை சார்ந்த அன்பு நெறி, பண்பு நெறி, அறிவு நெறி வழியைக் கடைப்பிடிப்போம் என்று உறுதிமொழி ஏற்கச் செய்தது வரலாற்றில் என்றும் ஒளிவீசும் விண்மீனாகும்.

தந்தை பெரியார் மறைந்தாலும் அவர்தம் தத்துவம் மானுடம் உள்ளவரை வாழும்  - வாழவைக்கும்! வாழ்க் பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

No comments:

Post a Comment