தந்தை பெரியாரின் 90 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கையான பெண்களுக்கு 50 சதவிகித இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயலாக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார்!
தந்தை பெரியார் அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன் கோரிய கோரிக்கை - 50 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படல் வேண்டும் என்பதை அப்படியே செயலாக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில், 11 மாநகராட்சிகளுக்குப் பெண்களே மேயர்களாக வருவர் என்ற அறிவிப்பு சமூகநீதி - பாலியல் நீதிக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு! முதலமைச்சருக்கும், தமிழ்நாடு தி.மு.க. அரசுக்கும் 'நன்றித் திருவிழா' நடத்திடவேண்டிய மவுனப் புரட்சியின் மற்றொரு மைல்கல் இது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சமூகநீதி என்பது பாலியல் நீதியையும் உள்ளடக்கிய ஒன்றாகும்; பாலியல் நீதி இல்லாத சமூகநீதி என்பது ஆண் ஆதிக்கத்தை அகிலத்தில் பாதுகாக்கும் ஒரு விரும்பத்தகாத ஏற்பாடே!
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 97 ஆண்டுகள் ஆகின்றன!
அறிவுப்புரட்சி - அமைதிப் புரட்சி!
சுயமரியாதை இயக்கம் செய்துள்ள அறிவுப்புரட்சி - அமைதிப் புரட்சி இதுவரை அகிலம் குறிப்பாக தமிழ்நாடு - இந்தியா காணாத ஒன்றாகும்!
அதன் இலட்சியப் பிரகடனமாக, முதல் கொள்கையே 'பேதமற்ற பெருவாழ்வு' அனைவருக்கும்.
பிறவி பேதம் கூடாது; கூடவே கூடாது என்பதே!
உலகில் எந்த நாட்டிலும் காணப்படாத, வெறுக்கத் தகுந்த பேதம் - ஜாதி, வருணபேதம்.
'சுதந்திரம்' பெற்று 75 ஆண்டுகாலத்திற்குப் பின்பும் மாறவில்லை!
பிறப்பினால் ஒருவன் 'உயர்ந்தவன்', மற்றொருவன் 'தாழ்ந்தவன்', 'தொடக்கூடாதவன்', 'நெருங்கக் கூடாத வன்', 'பார்க்கக் கூடாதவன்' என்ற பேதம் இங்கு சகல துறைகளிலும் - 'சுதந்திரம்' பெற்று 75 ஆண்டுகாலத்திற்குப் பின்பும் மாறவில்லை.
இன்னமும் ''பார்ப்பன அக்கிரகாரங்களும்'', ''பறைச் சேரிகளும்'' உள்ளன; அதுவும் கீழ்ஜாதிக்காரர்கள் என்ற உழைப்பின் உருவங்கள் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்; மரணத்திற்குப் பின்பும் அவர்களை எரியூட்டும் சுடு காட்டில் கூட பொது சுடுகாடு இன்னும் பல ஊர்களில் இல்லாதது மட்டுமல்ல; அந்த சவங்களைத் தூக்கிச் சுமந்து செல்லும் பாதைகள் சரியாக இல்லாததால், உயர்ஜாதி எனத் தங்களைப் பீற்றிக் கொள்ளும் மற்ற பல மனித ஜாதி வெறியர்கள் கலவரம் செய்வது பச்சை காட்டுமிராண்டிச் செயல்.
இவற்றை ஒழிக்காமல் சுதந்திரம் என்று ஆடுவது நியாயம்தானா? மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அதன்மீது மகுடாசனம் அமைவதற்குப் பெயர் சுதந்திரம், சுயராஜ்யம் என்றால், சக மனிதர்களும், இதை ஏற்கவியலுமா? என்று கேட்டு சிந்திக்க வைத்தவர் பெரியார்!
பிறவி பேதம் ஒழியவேண்டும் என்று அவர் சொன்ன போது, இதேபோன்று ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவர், ஆண் எஜமான் - பெண் அடிமை என்பதை மிக வேகமாக எதிர்த்து, அவர் தொடங்கிய சமூகப்புரட்சி, துளியும் ரத்தம் சிந்தாத, ஆயுதங்களை எடுக்காத, வன்முறை கலவாத அமைதிப் புரட்சியாகும்.
ஒன்றிய, மாநில அரசின் சட்டங்களும், திட்டங்களுமாகப் பரிமளிக்கின்றன!
சுயமரியாதை இயக்கம் தொடங்கி மூன்று ஆண்டு களுக்குப் பிறகு 1929 இல் முதல் மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்றதில் நிறைவேற்றப்பட்ட பெண்ணுரிமை பற்றிய தீர்மானங்கள் பிற்காலத்திலும் - தற்காலத்திலும் ஒன்றிய, மாநில அர சின் சட்டங்களும், திட்டங்களுமாகப் பரிமளிக்கின்றன!
பெண்களுக்கு சமத்துவமும், சரியான வாழ்வுரிமை யும், சுதந்திரமும் கிடைக்கவேண்டுமெனில் அவர் களுக்குப் படிப்புரிமை, பணியாற்றும் உரிமை, சொத் துரிமை, ஆளும் உரிமை - ஜனநாயக ஆட்சியில் சம பங்கு பெறக்கூடிய உரிமை - அத்துணையும் கிடைக்க வேண்டும் என்றார்!
வேலை வாய்ப்புகளில்கூட இது ஆணுக்குரியது - 'இப்படிப்பட்ட வேலைகள் பெண்களால் பார்க்க முடியாதவை' என்று செயற்கையாகவும், சூழ்ச்சியுடன் ஆண் ஆதிக்க சிந்தனையாளர்களும், சுயநலக்காரர் களும், வேத சனாதன வைதிகர்களும் கூறியபோது, 1929 இல் இராணுவம், காவல்துறை, பாதுகாப்புத் துறை, அறிவியல் துறை - கற்றுக் கொடுக்கும் பணிகள் அத் துணையும் பொதுவாக்கப்பட்டு, பெண்களுக்குரிய பங்கை அவர்கள் விகிதாச்சாரத்திற்கேற்ப ஒதுக்கினால் நாடு பெருத்த வளர்ச்சியைக் காணும் என்றார்.
பெண்கள் தங்களது திறமையை சகல துறைகளிலும் பதிக்கிறார்கள்!
அன்றைக்குக் கேலி பேசியவர்கள், கெக்கொலி கொட்டியவர்கள், ஏளனப் பார்வையும், எரிச்சலோடும் எதிர்த்தவர்கள் இன்று இராணுவம், காவல்துறை உள்பட அனைத்திலும் வாய்ப்பை அள்ளுகின்றனர். பெண்கள் இராணுவ அதிகாரிகளாக வர இருந்தத் தடை அண்மை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு உடைபட்டு, இராணு வத்திலும் உயர்பதவிகளைப் பெற்றுத் தங்களது திறமையை சகல துறைகளிலும் பதிக்கிறார்கள்!
அடுத்து தமிழ்நாட்டில் - ஊராட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில், நகராட்சித் தேர்தல்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படவிருக்கின்ற நிலையில், பல நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்ட - அரசு அறிவிப்புக்குப்பின், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில், 11 மாநகராட்சிகளுக்குப் பெண்களே மேயர்களாக வருவர் என்ற அறிவிப்பு சமூகநீதி - பாலியல் நீதிக்குக் கிடைத்த சரியான வாய்ப்பு.
90 ஆண்டுகளுக்கு முன்பு கோரிய கோரிக்கை - செயலாக்கப்பட்டிருக்கிறது
தந்தை பெரியார் அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன் கோரிய கோரிக்கை - ''50 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படல் வேண்டும்'' என்றார்!
அதை அப்படியே செயலாக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதில்கூட பொது - ஆதிதிராவிடர் - அவற்றிலும் பெண்கள் என்று இப்படி 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதிப் பிரகடனத்திற்கு செயல்வடிவம் கொடுத்துப் புதிய பூபாளத்தை - விடியலைத் தந்துள்ளார்!
பொதுவாக பாலியல் நீதி பின்பற்றப்படுகையில்கூட, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர்ஜாதி பெண்களுக்கே தாரை வார்த்துக் கொடுக்கும் 'தந்திர உபாயங்களும்', 'கண்ணிவெடிகளும்' சமூகநீதி நிலத்தில் நடப்பட்டு, பாலியல் நீதிப்படி (Gender Justice) வழங்கிவிட்டோம் என்று கூறி, ஏமாற்றும் நிலை இன்றும் உள்ளது!
அதற்குத் துளியும் இடம்தராது, பெண்கள் என்றாலும் அதிலும் ஆதிதிராவிடர், ஒடுக்கப்பட்டோர் பெண் களுக்கும் மாநகராட்சிகளில் இடமுண்டு என்று திட்டமாக அறிவித்திருப்பதை எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை!
இது ஒரு யுகப் புரட்சியாகும்!
அனைவரும் வீடு வீடாக இந்த சாதனையின் முக்கியத்துவத்தை விளக்கிடவேண்டும்!
நமது திராவிடர் இயக்க மகளிர், இடதுசாரி மகளிர், பகுத்தறிவாளர் உள்பட அனைவரும் வீடு வீடாக இந்த சாதனையின் முக்கியத்துவத்தை விளக்கி, பெருத்த ஆதரவை இதில் உருவாக்கினால், மற்ற துறைகளிலும் இது தானே நடைமுறைக்கு எளிதில் வர வாய்ப்புண்டு!
மவுனப் புரட்சியின் மற்றொரு மைல்கல் இது!
முதலமைச்சருக்கும், தமிழ்நாடு தி.மு.க. அரசுக்கும் 'நன்றித் திருவிழா' நடத்திட வேண்டிய மவுனப் புரட்சியின் மற்றொரு மைல்கல் இது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.1.2022
No comments:
Post a Comment