2021இல் பெண்கள் சந்தித்ததும் -சாதித்ததும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

2021இல் பெண்கள் சந்தித்ததும் -சாதித்ததும்

ஆண்டு முழுவதையும் கரோனா வைரஸ் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால் முழுமையான இயல்புநிலைக்கு மக்கள் திரும்ப முடியவில்லை. பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பெண்களுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் சில நிகழ்வுகள் நடந்து பொது வெளியில் பேசுபொருளாகின. அந்த வகையில் கடந்த ஆண்டு பெண்ணுலகம் கடந்துவந்த தருணங்கள் சிலவற்றின் தொகுப்பு இது:

ஆணாதிக்கக் கேள்வி

அண்மையில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.., பொதுத்தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கட்டுரைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. முற்காலத்தில் ஆண்கள் குடும்பத் தலைவர்களாகவும் மனைவியர் அவர்களுக்கு அடங்கி நடந்ததால் குழந்தைகள் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டில் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போவதால், ஆண்கள் குடும்பத் தலைவர்களாக இருக்க முடிவதில்லை; பெண்களின் போக்கால் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்கிறார்கள் என்பதுபோல் எழுதப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, அந்தக் கேள்வியை ரத்துசெய்துவிட்டதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான இழப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இளம் தலைமுறையினருக்கு நல்லவற்றைப் போதிக்க வேண்டிய இடத்திலேயே இப்படிப்பட்ட ஆணாதிக்க, பிற்போக்குக் கருத்துகள் இடம்பெறுவது அவமானகர மானது.

இல்லத்தரசியும் உழைப்பாளியே

வீட்டுவேலை செய்து முதுகொடிந்துபோகும் பெண்களின் உழைப்பு புறக்கணிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் புதிய செய்தியல்ல என்ற போதும் பெண்களின் உழைப்பை அங்கீ கரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நம்பிக்கை அளிக்கும்விதத்தில் அமைந்தது.

டில்லியில் 2014இல் நடந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து ஜனவரி 5 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீட்டை ரூ.11.2 லட்சத்திலிருந்து ரூ. 33.2 லட்சமாக உயர்த்தியதுடன் அதை 2014ஆம் ஆண்டிலிருந்து 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டுத் தர வேண்டும் என்று நீதிபதிகள் எம்.வி.ரமணா, சூர்யகாந்த் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஊதியமோ வேறு எந்தவிதமான அங்கீகாரமோ இல்லாத இல்லத்தரசிகளின் உழைப்பையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்கிற இந்தத் தீர்ப்பு, மாற்றத்துக்கான தடம்.

நம்பிக்கை ஒளி

சென்னை வண்ணைநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட மாற்றுப்பாலினத்தவர்கள் 13 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். செவிலியர், வழக்குரைஞர், மருத்துவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், காவலர் என்று பல்வேறு துறைகளில் மாற்றுப்பாலினத்தவர் தடம்பதித்துவருகிற நிலையில் பொது மக்களுடன் உரையாடும் வகையிலான பணியில் இவர்கள் அமர்த்தப்பட்டது வரவேற்பைப் பெற்றது.

மகள்களுக்கும் உரிமை உண்டு

இந்தியச் சமூகத்தில் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை ஆண் வாரிசுகளுக்கே இருந்துவருகிறது. ஆண் வாரிசு இல்லாதவர்கள் இறந்தால்கூட வேறொரு ஆணே இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்படுவாரே அன்றி, மகள்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இதையும் மீறி அரிதினும் அரிதான நிகழ்வுகளாக அவ்வப்போது பெண் வாரிசுகள் தம் பெற்றோரின் இறுதிச் சடங்குகளைச் செய்கின்றனர். மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கை அவருடைய இளைய மகள் தேஜஸ்வினி நிறைவேற்றினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கும் அவருடைய மனைவிக்கும் அவர்களுடைய மகள்கள் கிருத்திகாவும் தாரிணியும் இறுதிச் சடங்கு செய்தனர். அதே விபத்தில் உயிரிழந்த மற்றொரு ராணுவ உயரதிகாரியான ஹர்ஜிந்தர் சிங்குக்கு அவருடைய 12 வயது மகள் ப்ரீத் கவுர் இறுதிச் சடங்கு செய்தார். சமூகத்தின் கற்பிதத்தை மாற்றும் முன்நகர்வுகளாக இவை பேசப்பட்டன.

இனிதாகும் பயணம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்துத் திட்டம் முக்கியமானது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என்கிற அறிவிப்புக்குப் பெருவாரியான வரவேற்பு இருந்தபோதும், போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

 விளையாட்டில் சமத்துவம்

ஒலிம்பிக் வரலாற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கடைப்பிடிக்கப்பட்ட பாலினச் சமத்துவ நடவடிக்கைகள் முக்கியமான மைல் கற்கள். ஒலிம்பிக் கழகத்தின் அறிவிப்பால் பல நாடுகளும் தங்கள் அணியில் பெண்களை அதிக எண்ணிக்கயில் இடம்பெறச் செய்தன. 

விடியலுக்கான முதல் கீற்று

கரூரைச் சேர்ந்த சுஹாஞ்சனா, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவாராக நியமிக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்றவர்களில் திருச்சி செம்பட்டுவைச் சேர்ந்த அங்கையற்கண்ணியும் ஒருவர். உறையூர் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் ஓதுவாராக அவர் நிய மிக்கப்பட்டார். இதன்மூலம் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ஓதுவார் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். அவரைத் தொடர்ந்து சுஹாஞ்சனாவும் ஓதுவாராக நியமிக்கப்பட்டிருப்பது பாலினச் சமத்துவத்தை எய்துவதற்கான முன் நகர்வு.

No comments:

Post a Comment