தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜன.12 தமிழ்நாட்டில் நேற்று  (11.1.2022) தொற்று பாதிப்பு 13,990- ஆக பதிவான நிலையில் இன்று 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  மேலும்  20 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  36,886 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பைக் கண்டறிய  1,35,672- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 75,083- ஆக உயர்ந்துள்ளது.   கடந்த 1 ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 1,489- அக இருந்த நிலையில்,  தற்போது தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை:

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜன.12 தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17 ஆம் தேதி விடுமுறையை  ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால், 14.1.2022 முதல் 18.1.2022 வரை  தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் விழாவை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு  அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16.1.2022 அன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப முடியாத நிலை இருந்தது. தற்போது 17.1.2022 அன்றும் (திங்கள் கிழமை) விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால், பொங்கல் கொண்டாட சென்றவர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

சென்னை மாநகராட்சிமண்டலம் வாரியாக பெண்களுக்கு

50 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பாணை ரத்து

சென்னை, ஜன.12 சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம்  இடஒதுக்கீடு என்ற சட்டம் 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 200 வார்டுகளில் 100-க்குப்பதிலாக 105 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. நேற்று (11.1.2022) நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, மண்டலம் அடிப்படையில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்தவர், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்றால், எண்ணிக்கையில் பாதியாக இருக்க வேண்டும். அதையும் தாண்டியிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதனால் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதியோர்களுக்கு இல்லம் தேடி

பூஸ்டர் டோஸ் செலுத்த ஏற்பாடு

சென்னை, ஜன.12 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

60 வயதை கடந்த 1 டோஸ் செலுத்தாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் செலுத்த காலம் கடந்தவர்களுக்கும் இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, தடுப்பூசி செலுத்த 1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இல்லங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உயர்கல்விக்கான

சேவை மய்யங்கள் துவக்கம்

திருச்சி, ஜன. 12 பன்னாட்டு கல்விச் சேவைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான அய்டிபி, திருச்சி உட்பட இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 23 புதிய கல்வி மய்யங்களை துவங்கியுள்ளது.  இதன் மூலம் அய்டிபி தற்போது  இந்தியாவில் 60 நகரங்களில் 67 அலுவலகங்களைக் கொண்டுள்ளதுடன், இந்தியா முழுவதும் 24 மெய்நிகர் அலுவலகங்களைக் கொண்டுள்ளது, இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் அய்டிபியின் ஆலோசகர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் வெளிநாட்டுப் கல்வி கனவுகளை நிறைவேற்ற அய்டிபி உறுதிபூண்டுள்ளது. மேலும் அவர்களின் லட்சியத்தை நனவாக்க, மாநிலத் தலைநகரங்கள் மற்றும் நாட்டில் உள்ள 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு தங்களது சேவையை  விரிவுபடுத்துவதன் மூலம் இதை சாத்தியப்படுத்த முனைகிறது என இந்நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குநர் பியூஷ்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment