பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (13) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (13)

"காமராசர் ஆட்சியின் சாதனைகள்" பல பதிப்புகள் (கூடுதல் தகவல் சேர்க்கையோடு) பொது மக்களிடையே தந்தை பெரியார் அவர்களா லும், திராவிடர் கழகத்தாராலும் வெகுவாகப் பரப்பப்பட்டு பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி வந்த நிலையில், சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்களின் 'சுதந்திரா கட்சியை' ஆரம்பித்தார்கள். அது உயர்ஜாதி - பணக்காரர்களுக்கான கட்சி என்ற பிரச்சாரமும், தமிழ்நாட்டில் அதிகம் பரவிய நிலையில், அரசியலில் மிகவும் பக்குவம் பெற்ற ஆச்சாரியார் அவர்களேகூட, தன்னிலை தவறி சற்று தரக்குறைவாக காமராசரைப்பற்றி, (தனித்த முறையில்) 'கருப்புக் காக்கையைக் கல்லால் அடி யுங்கள்' என்று விருதுநகர் அருகே நடைபெற்ற சு.கட்சி மாநாட்டில் பேசி விட்டார்!

அதனால் ஆத்திரப்பட்டு, காமராசர் ஆட் சியை எப்படியும் கவிழ்க்க அல்லது அவரது செல்வாக்கைக் குறைக்க அவர்பற்றி இப்படிக் கூறியதை நாம் சகித்துக் கொள்ள விரும்பவில்லை - திராவிடர் கழகம்.

'விடுதலை' நாளேடும், அதன் மேனாள் ஆசிரி யரும் (குத்தூசி குருசாமி அவர்களும்) ஆச்சாரி யாரைக் கடுமையாகச் சாடி பதில் எழுதி வந்த நிலை பாய்ந்தது.

ஆச்சாரியார் ஆட்சி செய்த இரண்டு (1938,1952) தடவையும், அவர் எப்படி ஓர் ஆரியப் பாது காவலராக, மனுவாதியாக நடந்து கொண்டார் என்ற புள்ளி விவரங்களை பழைய 'குடிஅரசு', 'விடுதலை' மற்றும் சில புத்தகங்களின் மூலம் தொடர்ந்து தேடி, பாயிண்ட் பாயிண்ட்டாகத் தலைப்பிட்டு,  புத்தகத்தினைத் தொகுத்தேன். "ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்" என்பது தான் அதன் தலைப்பு. அடுத்து சில மாதங்களில் தேர்தல் வரவிருந்ததால் (1962) மேடைகளில் பிரச்சாரத்திற்கு இந்த இரண்டு நூல்களும் பெரிதும் பயன்படும் வகையில் எல்லா தகவல்களும் மறுக் கப்பட முடியாத உண்மைத் தகவல்களின் சேகரிப் பாக அந்நூல்கள் அமைந்தன! (நான் தான் தொகுத்தேன்).

அதை அய்யாவிடம் அச்சுக்கு அனுப்புமுன் - சென்னையில் - காட்டினோம்.

அய்யா அவர்கள் பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ந்து பாராட்டி விட்டு ஒன்றை சொன்னார்!

"இந்தப் புத்தகம் வெளி வந்து பார்ப்பனர்களிடம் போய்ச் சேரும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யக் கூடும்! அதனை நாம் சட்டப்படி எதிர் கொள்ள வேண்டி வரலாம்; ஒரு வேளை அப்படி நடந்தால் அந்தப் புத்தகத்தினைத் தொகுத்த  ஆசிரியர் என்பது உன் பெயரில் வர வேண்டாம்; என் பெயரிலேயே வெளியிடு.  அப் போது ஆச்சாரியாருக்குப் பதில் - "ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்" என்பதே சரியாக இருக்கும்!" என்று அய்யா கூறியவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! அய்யாவின் தொலைநோக்கு எந்தச் சிறு விஷயத்திலும் எப்படி உள்ளது என்பதைப் புரிந்து வியந்தேன் - உள்ளுக்குள்.  அந்த நூலும் பல பதிப்புகள் வந்தன!

அய்யாவின் பல சொற்பொழிவுகளிலிருந்து இணைப்புரையாக சில பகுதிகளைச் சேர்த்திருந்தேன்.

பதவி இழந்து, காமராசர் மக்களிடம் செல் வாக்கு மிகுந்த முதல் அமைச்சராக ஆண்டு, பலருடைய 'ஜோசியத்தை' - 'ஆருடத்தை'ப் பொய்யாக்கிவிட்டார்!

"படிக்காத காமராசரால் ஆட்சியை நடத்த முடியுமா?" என்று சவால் விட்டவர்கள் தோற்று மூலையில் முடங்கி விட்ட நிலையில், நண்பர் ஆச்சாரியார் நிலை தடுமாறி விட்டார் எனக் கூறி கம்பராமாயணத்தில் வரும் பாட்டு ஒன்றை அய்யா உதாரணத்திற்கு எடுத்துக் கையாண்டதை எடுத்துப் போட்டிருந்தோம்.

"ஆவியை, சனகன் பெற்ற

      அன்னத்தை, அமிழ்தின் வந்த

தேவியை, பிரிந்த பின்னை,

     திகைத்தனை போலும், செய்கை!" -

"ராமா நீ பெரிய வீரன் என்று வர்ணிக்கும் நிலையில், உன் மனைவியை இழந்து பின் உன் செயல் மிகவும் கீழிறக்கத்திற்குச் சென்று விட் டதே!" என்று வாலி - தன்னை - மறைந்து நின்று கொன்றது பற்றிப் பாடியதாக கம்பரே பாடியிருப் பதை, அரசியல் களத்திற்குப் பொருத்திக் காட்டி அய்யா பேசியதை, எடுத்துப் போட்டேன். அய்யா மகிழ்ந்து பாராட்டினார்.  அவரது இலக்கிய செறிவு கண்டு அனைவரும் வியக்க வேண்டுமல்லவா!

அதை மிகவும் பொருத்தமாகக் கையாண்டு எழுதியதைப் பின்னாளில் படித்த புலவர்கள் பலரும் என்னிடத்தில் "அய்யா, கம்ப இராமா யணத்தைக் கூட இப்படி நுண்மை நுழை புலத் தோடு ஆய்ந்துள்ளது எங்களை அதிர்ச்சிக்குள் ளாக்கியது" என்று பாராட்டினர்.

அவர் தாம் பெரியார்!

'படிக்காத' பெரியார் 'கற்காதது' எதுவுமே இல்லை போலும்!

(தொடரும்)


No comments:

Post a Comment