10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது: புதிய ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது: புதிய ஆய்வு

லண்டன், ஜன. 18- கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-இல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.

கரோனா வைரசின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது தொடர்பாக பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் பன்னாட்டு தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வின்படி, பிசிஆர் பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப் பட்ட மாதிரிகளை, ஆர்என்ஏ அடிப்படையில் ஒரு புதிய வகை பரிசோதனை செய்ததில், சில நோயாளிகளுக்கு தொற்று குறிப்பிட்ட காலத்தை தாண்டி நீடித்திருப்பது கண்டறியப்பட்டது. அது, நிலையான 10 நாட்கள்  தனிமைப் படுத்தப்பட்ட காலத்தை விட அதிகமாக இருந்தது.

அதாவது, 10 நாட்களுக்குப் பிறகு, 13 சதவீத நபர்களின் உடலில் கரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருந்தது தெரிய வந்திருக்கிறது.  இது, அவர்கள் இன்னும் நோய்த் தொற்று டன் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சிலருக்கு 68 நாட்கள் வரை இந்த நிலை நீடித்திருக்கிறது. 

இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற எக்ஸிடர் மருத்து வப் பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறுகையில், ‘இது ஒப்பீட்டளவில் சிறிய ஆய்வாக இருந் தாலும், உயிர்ப்புடன் உள்ள வைரஸ் சில சமயங்களில் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கலாம் என்றும், மேலும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றார்.

எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது என்று இந்த ஆய்வு முடிவு அறிவுறுத்துகிறது. 

No comments:

Post a Comment