ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது

புதுடில்லி, ஜன.2 தொடர்ந்து 6ஆவது மாதமாக டிசம்பரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

நமது நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6ஆவது மாதமாக டிசம்பரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடக் கடந்த டிசம்பரில் வருவாய் 13 சதவீதம் அதிகமாகும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:- டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 780 கோடி வசூலாகியுள்ளது. இதில் ஒன்றிய ஜிஎஸ்டி வரி ரூ.22 ஆயிரத்து 578 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.28 ஆயிரத்து 658 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.69 ஆயிரத்து 155 கோடியாகும்.

இதில் செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 389 கோடி கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மருத்துவமனைகளை தயார் செய்ய மாநிலங்களுக்கு

ஒன்றிய அரசு வலியுறுத்தல்

புதுடில்லி, ஜன.2 கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் கரோனா 2ஆவது அலையில் டெல்டா வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தென்பட்டது. இது கவலைக்குரிய திரிபு என அடுத்த 2 நாளில் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.

கடந்த மாதம் 2ஆம் தேதி இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அன்றைய தினத்தில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் நாட்டில் 23 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டெல்டா வைரஸ் இடத்தை ஒமைக்ரான் வைரஸ் பிடிக்கத்தொடங்கி உள்ளது என ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்காலிக மருத்துவமனை அமையுங்கள்

கரோனா  தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதார உள்கட்டமைப்பு விரைவில் அழுத்தத்துக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதால் ஆக்சிஜன் கிடைப்பதைக் கண்காணிக்குமாறும் மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டை மீண்டும் மிரட்டும் கரோனா-

பாதிப்பு 1500 அய் நெருங்கியது

சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில் நேற்றைய (1.1.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் மேலும் 1,489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,49,534 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் கரோனாவுக்கு 2,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை   36,784- ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்புடன் 8,340- பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 611 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை  24 லட்சத்து 04 ஆயிரத்து 410 பேர்  மொத்தம் குணம் அடைந்துள்ளனர்

No comments:

Post a Comment