மூன்றாம் நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

மூன்றாம் நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிகள்

சென்னை, டிச.17  பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர்  மன்றம்  மற்றும்  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்  பெரியார் சிந்தனை உயராய்வு  மய்யத்துடன் இணைந்து  நடத்தும் பெரியாரியல்  பயிற்சி வகுப்பு  [சிறப்பு நோக்கு: பகுத்தறிவு] காணொலி

வாயிலாக 12.12.2021 அன்று மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது

பொதுச் செயலாளர்   வி.மோகன் வகுப்பு தொடக்கத்தை அறிவித்து நிகழ்வுகளை பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தமிழ் பிரபாகரன் அவர்களை ஒருங்கிணைக்க கேட்டுக்கொண்டார். தமிழ் பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையுடன்  பயிற்றுநர் மானமிகு வழக்குரைஞர் சே.மெ. மதிவதனியை பயிற்சியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார் .

7.05  மணிக்கு  வகுப்பினை   வழக்குரைஞர்  மதிவதனி அரசமைப்புச்  சட்டத்திலிருந்து தொடங்கினார்.  சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை விளக்கி சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றி எடுத்துரைத்தார்.

பெண்ணிய சிந்தனைகள்...

பெண்ணிய சிந்தனைகளை பலவகைகளில், பலரது  நிலையிலிருந்து எடுத்துக்காட்டி  அவற்றுக்கும் தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகளும் உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்கினார்.

பெண்ணிய சிந்தனைகளை  12 வகைகள்  இருந்தபோதிலும், இவற்றிலிருந்து  முற்றிலும் மாறுபட்டது   பெரியாரின்  பெண்ணிய சிந்தனை என்பதை வெளிப்படுத்தினார்.

பெண்களை  புனிதப்படுத்துதல்  எனும் நிலையை  எடுத்துக் கூறியவர் பெரியார்  பெண்களுக்கு கர்ப்பப்பையை  எடுக்க வேண்டும்  என்று பேசியது ஏன்? என்பதை அழகாக எடுத்துரைத்தார்.

குழந்தையை வளர்க்கும் முறை தாய்க்கு மட்டும் தான் உண்டு  என பெண்களுக்கு மட்டுமே  திணிக்கப்பட்டது ஆண்களுக்கு  இல்லை என்பது ஆணாதிக்க சிந்தனையே என்பதை வெளிப்படுத்தினார்.

உலக  நுகர்வு  கலாச்சாரம் பெண்களின் உடலை சந்தைப் படுத்துகிறது என்பதை அழகாக விளக்கி,  இதிலிருந்து  இருந்து பெண்கள் எப்படி விடுபட வேண்டும் என்பதை எடுத்துரைத்தவர்,பெரியாரின் செங்கல்பட்டு மாவட்டத்  தீர்மானம்,                                                                                  1930 இல்  பெண்ணுரிமை, பெண்ணடிமை பற்றி பெரியார் பேசியது, பற்றி  எல்லாம் தெளிவாக விளக்கினார்.கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை, அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்பதையும், கற்பு என்பதற்கு  பதில்  ஒழுக்கம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார்.பெண் விடுதலையை ஒரு ஆண்  தன் மனைவியை  வைத்துப் பார்க்காமல் மகள் ,தாய், சகோதரி  என்று  நினைத்து  பாருங்கள் என்று அய்யா அவர்கள் சொன்னதை எடுத்துரைத்தார்.“ மண்ணும் பெண்ணும் ஒன்றுஎன ஒப்பிடுவது தவறு என்பதை வலியுறுத்தி பேசினார்.

National policy commission ,Universal declaration for human rights  1948இல் தீர்மானம் நிறைவேற்றும் நிலையில் பெரியார் இது பற்றி 1920களிலேயே சிந்திக்கிறார்... பேசுகிறார்...எழுதுகிறார்... 1928 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுகிறார் என்பதை சுட்டிக்காட்டினார்.

விதவைத் திருமணம்

விதவைத் திருமணத்தை ஆதரித்து பேசுகிறார், சொத்துரிமையில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்பதை 1928 செங்கல்பட்டு  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஆனால் 1995இல் தான் உலக பெண்கள் மாநாட்டில் சொத்துரிமை பற்றி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது என்பதை விளக்கிய அவர் பெரியார் எவ்வளவு முன்னோக்கிய பார்வை கொண்ட சிந்தனையாளர் என்பதையும் கூறினார்.

1940இல்  அவர் எழுதியபெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகம் இன்றைக்கும்  படிக்கும்போது   புதுப்புது  பொருளில் விளக்கம் தருகிறது. 80 ஆண்டுகளுக்கு பின்  இன்றைய  நிலையிலும் அது மறுமுறை , மறுமுறை படிக்கத் தோன்றுகிறது ...புது புது கோணங்களில் சிந்திக்க தூண்டுகிறது, புதிய எண்ணங்களை  நமக்கு  ஏற்படுத்துகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறினார்.

பாலியல் வன்கொடுமைகள்

பள்ளியில் படிக்கும்  மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைக்கு அக்கொடுமை பற்றி  வெளியில் சொன்னால் பள்ளிக்கு அனுப்பாத ஒரு நிலை இன்றும்  இருப்பதை சுட்டிக்காட்டி, அதனாலேயே  பலர் அந்த வன்முறையை வெளியில் சொல்லாமல் விட்டு விடுகிறார்கள் என்பதையும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னார்.

பெண்களை சந்தைப் பொருளாக...

ஊடகங்கள்  பெண்களை  திட்டமிட்டு அடிமைப்படுத்த நிகழ்ச்சிகளை எப்படி  செய்து கொண்டிருக்கிறது   என்பதை வெளிப்படுத்திய  பயிற்றுநர் விளம்பரங்களில் கூட ஆண்களையும் பெண்களையும் வித்தியாசப்படுத்தி பெண்களை சந்தைப் பொருளாக  மட்டுமே காட்டும் கேவலமான நிலைமை இருக்கிறது  என்பதை தெளிவு படுத்தினார்.

இவை அனைத்திற்கும் காரணம்,  மய்யப்புள்ளி  மதங்களே என்று எடுத்துச் சொன்னவர், பெண்களும் தங்களுடைய சிந்தனைகளை மாற்ற வேண்டும் என்றும், பெரியாரை நிறைய படிக்க வேண்டும் என்றும், வரதட்சணை  போதும், சொத்துரிமை எனக்கு  எதற்கு? எனக் கேட்கும் பெண்கள் இருக்கும் நிலை இன்றும் இருக்கிறது  என்பதையும், வரதட்சணை மற்றும் சொத்துரிமையால் நிகழும் கொடுமைகளை களைந்திட பெரியார் என்ற ஆயுதமே தீர்வு  என்றும்,“பெண்ணடிமையை பற்றி, பெண் விடுதலையைப் பற்றி  பெண்கள் படிப்பதை விட  ஆண்கள்  படிக்க  வேண்டும்  அதுவும் ஜீவகாருண்யம் உள்ளவர்கள் படிக்க வேண்டும் .......”என தலைவர் தந்தை பெரியார்  கூறியது குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து  கேள்வி  பதில் நிகழ்ச்சியில் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் பயிற்சியாளர்களை கேள்வி கேட்க அழைத்தார்.

பயிற்சியாளர் அம்சவள்ளி அவர்கள்உடை அணிவதில் உள்ள அடக்குமுறை  பெண்ணடிமையை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்ற வினாவுக்கு  விடை அளித்தார்.

பயிற்சியாளர்  சீனிவாசன் வினாவானபெண்கள் திருமணமான பின்னும் அவர்களின் விடுதலை பெறுவதற்கும் தயாராக  இல்லை என்றும் ஆண்களையே  சார்ந்து இருக்கிறார்கள். இவர்களை  எப்படி மாற்றுவது  என்ற வினாவுக்கும் விடை அளித்தார்.

பயிற்சியாளர்  கார்த்திக் சண்முகம்   திருமணமான பெண்  ஆண் வீட்டிற்கு அனுப்பப் படுகிறார்.....  ஆணை   பெண் வீட்டிற்கு  அனுப்புவது இல்லை ஏன்?’  என்ற வினாவிற்கு விடையளித்தார்.

பயிற்சியாளர் வேண்மாள் பணிக்குச் செல்லும் பெண்கள்  ஊதியம் பெறுகிறார்கள். ஆனாலும் கூட ஏடிஎம் கார்டு ஆணிடம் தான் உள்ளது. இதை என்ன செய்வது?  என்ற  வினாவுக்கு பெண்களுக்கான பொருளாதார விடுதலை  இன்னும் முழுமையாக சேரவில்லை என்பதையும், தனது கூட்ட நிகழ்வுகளை  நினைவு படுத்தி அதில் நடந்த நிகழ்வு ஒன்றைக் கூறினார்.

பெண் விடுதலைப் பற்றி...

பயிற்சியாளர்  ராதாகிருஷ்ணன் அவர்கள் கேட்ட கேள்வியில்  பெரியாருக்குப் பின் பெண் விடுதலை பற்றி தீவிரமாக யாரும் பேசுவதில்லைஎன்ற  கேள்விக்கு  தெளிவாக விளக்கம் அளித்து அய்யாவுக்கு, பின் அம்மா அவர்களின் பணியை, அதன்பின் ஆசிரியர் அவர்களின் பணியை ,போராட்டங்களை,செயல்பாடுகளை  அடுக்கடுக்காக  எடுத்துரைத்தார்.

பயிற்சியாளர்  இளந்தளிர்  என்ற சிறுமிபெண்களை  ஏன் பலவீனமாக கருதுகிறார்கள்என்று வினாவிற்கு அந்த சிறுமிக்கு புரியும் வகையில் எடுத்து வைத்தார்.

பயிற்சியாளர் செல்வராணி  பெண் விடுதலையில் பள்ளி ஆசிரியர்கள் பங்கு என்ன?’ என்ற வினாவுக்கு ஆசிரியர்கள், படித்தவர்கள்  மன நிலை மாறினால் பெண் விடுதலை விரைவில் நிகழும் விடை யளித்தார்.

குழந்தைத் திருமணம்

பயிற்சியாளர் மாதேஷ்  என்பவர் குழந்தை திருமணம் பற்றி கேட்டதற்கும் பயிற்சியாளர் யாழ் சுபா அவர்களின் பெண்  விடுதலை பற்றி  கேட்ட வினாக்களுக்கும்  விடையளித்து 8. 15  நிறைவு  செய்தார். பொதுச் செயலாளர் அடுத்த நாள் நிகழ்வானசகுனம்,சடங்கு,பேய்,பில்லி, சூனியம்என்னும் பொருளில்  மருத்துவர் கவுதமன் அவர்கள் பயிற்றுநராக இருந்து வகுப்பினை நடத்துவார்கள் என்றும், நாளைய நிகழ்வினை மாநில துணைத் தலைவர் பேரா. சுலோச்சனா அவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்றும் அறிவித்தார்.  இறுதியாக பேரா. சுலோச்சனா நன்றி கூறிட 3 ஆம் நாள் வகுப்பு முடிவுற்றது.


No comments:

Post a Comment