தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் - அரசாணை வெளியீடு

சென்னை,டிச.17- தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக தமிழ்நாடு முதலமைச்சர்மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் குறிப் பிட்டுள்ளதாவது,

தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர் வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத் தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற உள்ளக் கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்ன தாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக் கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும், பொது மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதியநீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது.

இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, 1914 ஆம் ஆண்டு முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள்.  மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களுக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தார்கள்.  தமிழறி ஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, 1970 ஆம் ஆண்டு,  மார்ச் திங்கள் 11 ஆம் தேதியன்று  நடந்த அரசு விழாவில் அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பேசும் போது, ''இனி தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். 'நீராருங் கடலுடுத்த' எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார்கள்.

அதன்படியே 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான  மனோன்மணீயம்  நூலில் உள்ள பாயிரத்தில்தமிழ்த் தெய்வ வணக்கம்’’  எனும் தலைப் பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயைப் போற்றும் வகையில் அமைந்த வரிகளை

ஏற்று,  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 23 நவம்பர் 1970ஆம்  ஆண்டு அன்று, முத்தமிழறிஞர் கலைஞர்  அவர்கள் தலைமையில் அமைந்த அன்றைய  தமிழ்நாடு அரசு  தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அவ்வரசாணையைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங் களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலையை ஒட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் அன்னைத் தமிழ் மொழியைப் போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்த வேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

1. மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. 

தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்)  பாடப்படவேண்டும்,

நீராரும்  கடலுடுத்த  நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

 2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள் ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

5. பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

6.            அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment