சமூகநீதியின் வெற்றி வீரர் ஆசிரியர் அய்யா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

சமூகநீதியின் வெற்றி வீரர் ஆசிரியர் அய்யா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொண்டறமே வாழ்வாகக் கொண்டு சமுதாய சீர்திருத்தப் பெரும்பணியினைத் தனது 10 வயது முதல் சளைக்காமல் மேற்கொண்டு இன்று 89-ஆவது அகவை காணும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகளையும் வணக்கங்களையும் உரித்தாக்குகின்றேன்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதைக் கொள்கை வழியில், தான் ஏற்றுக்கொண்ட சமூகநீதி எனும் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான போராளியாகவே ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் தன் பொதுவாழ்வின் பெரும்பகுதியைக் கடந்திருக்கிறார். சமூகநீதிக்கான முன்கள வீரராக நின்று, திராவிட இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் சமூகநீதி என்பதே முதன்மைக் கொள்கை. அது நூற்றாண்டு கடந்த அரசியல் வடிவத்தைப் பெற்று, அனைத்துத்தரப்பு மக்களுக்குமான சமூக விடுதலைக்கான பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னமும் அதன் இலக்கும் பயணமும் முடிவடையவில்லை. காலத்திற்கேற்ற வேகத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சமூகநீதிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தலைமையேற்று நடத்திய சமூகநீதிப் பயணத்தை இன்று வழிநடத்தி வரும் மூத்த தலைவர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள். தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்ட சமூகநீதியை இந்திய அளவில் எடுத்துச் சென்றதில் அவருடைய பணி போற்றுதலுக்குரியது.

மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி 1980களின் தொடக்கத்திலிருந்து அவர் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவே, 1989ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த தேசிய முன்னணி அரசில் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் ஒன்றிய அரசுப் பணிகளில் இந்தியாவின் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 27% இடஒதுக்கீடு எனும் மகத்தான சமூகநீதி. தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் தத்துவம், இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாறிய அந்தத் தருணத்திற்கு அடித்தளமிட்டதில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.

இடஒதுக்கீட்டை நிலைநாட்டுவதற் காகத் தன் ஆட்சியே போனாலும் கவலைப்படாமல் அதனை முன்னெடுத்த பிரதமர் வி.பி.சிங் அவர்கள் சமூகநீதிக் காவலர்' எனப் போற்றப்படுகிறார்.

இட ஒதுக்கீட்டினை நிலைநாட்டவும், அதற்கு ஏற்படுத்தப்படும் இடையூறு களைத் தகர்த்திடவும், இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து பாதுகாத்திடவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அளப்பரிய தொண்டாற்றி வருபவர் ஆசிரியர் அய்யா அவர்கள். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு புகுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து தலைவர் கலைஞர் அவர்களுடன் இணைந்து களம் கண்டவர். தேர்தல் அரசியல் களம் கற்றுத் தந்த பாடத்தின் மூலமாக, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் வலிமையை ஆட்சியில் இருந்தவர்களுக்கு உணரவைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தவர்.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்ந்து தலைவர் கலைஞர் அவர்களின் 1989-1991 ஆட்சிக்காலத்தில் 69% விழுக்காட்டினை எட்டியது. பின்னர் வந்த ஆட்சியில், உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் அதற்கு நெருக்கடி ஏற்பட்டபோது, சட்டரீதியாகக் காப்பாற்றும் போராட்டத்தில் அன்றைய ஆட்சியாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, 69% இட ஒதுக்கீட்டினைக் காப்பாற்றி, அரசியல் சட்டத்தின்வழி பாதுகாப்பு கிடைத்திடச் செய்து, சமூகநீதி காத்த வீரர் நம் ஆசிரியர் அய்யா அவர்கள்.

ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் கைகளில் இருப்பது தந்தை பெரியார் கொள்கை எனும் நுண்ணாடி (Microscope). அவரின் உற்று நோக்குதலிலிருந்து சமூகநீதிக்கு எதிரான நுண்கிருமிகள் எதுவும் தப்பிக்கவே முடியாது என்பதை இன்றளவும் மேற்கொண்டு வரும் இடஒதுக்கீட்டுக்கான துல்லியமான போராட்டங்களின் வழியே நிலைநாட்டி வருகிறார்.

சமூகநீதிக் கொள்கையை மறைமுகமாகத் தகர்க்க நினைக்கும் நீட் தேர்வு முறை - புதிய கல்விக் கொள்கை - பொருளாதார அளவுகோல்கள் உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் முதல் எதிர்ப்புக் குரல் அவரிடமிருந்தே வெளிப்படும். திராவிட இயக்கங்களாலும் சமூகநீதி ஆதரவு சக்திகளாலும் அது வலிமை பெறும். இன்றளவும் ஆசிரியர் அவர்கள்தான் இந்தப் போராட்டக் களத்தில் எல்லோரையும் முந்தி நிற்கிறார். முழுமையாக நிற்கிறார். எங்கள் அனைவரையும் வழிநடத்துகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரிய இளவலாக - சமூகநீதிக் களத்தில் அவரால் தளபதி என அழைக்கப்பட்டவரான ஆசிரியர் அய்யா அவர்கள், தாய்க் கழகத்தின் தனிப் பெரும்தலைவராகத் திகழ்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - அதன் தலைமையிலான மக்கள் நலன் காக்கும் அரசுக்கும் நல் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார்.

தந்தை பெரியாரின் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக பாதுகாத்து, விடுதலை ஏட்டின் வழியே பகுத்தறிவுக் கொள்கை முழக்கத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி, கல்வி நிலையங்கள் பலவற்றை உருவாக்கி, அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநிறுத்தி, தந்தை பெரியாரின் கொள்கை

களை உலகமயமாக்கும் பெரும்பணியில் இளைஞருக்குரிய முனைப்புடன் செயலாற்றி, சமூகநீதியின் வெற்றி வீரராகத் திகழ்ந்து வரும் ஆசிரியர் அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர

வேண்டும் என நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment