இருப்பும் மொழியும் மனிதனின்
இன அடையாளத்தைக் காட்டும்.
காலமும் கருத்தும் அவன் வளர்ச்சியின்
அடையாளத்தைக் காட்டும்.
எதிர்ப்படும்
முரண்பாடும் போராட்டமும் அவன்
இயக்க நெறியைக் காட்டும்.
வயது வாழ்த்தத் தக்கதா இல்லையா
என்பதை இவ்வளர்ச்சிப் பரிமாணமே
காட்டும்.
நயனொடு நன்றி புரிந்த வாழ்க்கை
ஆசிரியர் அய்யா கி.வீரமணி வாழ்க்கை.
இதன் பயன் அறிந்து
பண்பு பாராட்டவே இக்கருத்தரங்கம்.
இடைவெளிகளில்கூடத்
திசைமாறாத பறவை வீரமணி.
திசை தெரிவதன்முன்பே
சிறகோய்ந்துவிடும்
பறவைகள் பூமியைவிட்டதும் இல்லை;
வானத்தைத் தொட்டதும் இல்லை.
சிறகுகள் முளைக்கும் முன்பே
திசைகளைத் தீர்மானித்த பறவை
இவர்.
தனக்கான வானத்தை ஒரு நட்சத்திரம்
தேர்ந்தெடுத்ததே போல்
கைவாள் ஒன்று
கரிகாற்பெருவளத்தான் இடுப்பைத்
தானே தேர்ந்தெடுத்தது போல்
தந்தை பெரியாரைத்
தன் தலைவராக இளமையிலேயே
தேர்ந்தெடுத்தவர் ஆசிரியர் வீரமணி.
12ஆம் அகவையில்
முகவைத் திராவிடர் கழக மாநாட்டில்
முழங்கிய மழலை இடி இவர்.
17ஆம் அகவைக்குள்
327 நிகழ்வுகளில் முத்திரை பதித்து
வாலிபத் திராவிட நாயகனாக
வலம் வந்தவர்.
பயணம் செய்தது
23422 கிலோமீட்டர் தூரம்.
கொள்கைக்கும்
நடைமுறைக்கும் இடையே இப்படித்
தூரம் இருந்ததில்லை.
தொடக்கப்பள்ளி
மாணவன் படிப்பதற்கு
ஒரு பல்கலைக்கழகத்தைத்
தானே தேர்ந்தெடுத்ததுபோல்
ஆசிரியர் வீரமணி
தனக்குரிய தலைவரை ஒரே முடிவாகத்
தொட்டில் பருவத்தை
ஒட்டிய பருவத்திலேயே
தேர்ந்தெடுத்தார்.
அந்தத் தலைவர் முரண்களின்
மொத்தத் தொகுப்பு
எதிர்மறைச் சிந்தனைகள்
ஒன்றுபட்ட கூடாரம்.
அவர் எதிர்க்காதது ஏதும் இல்லை
ஜாதியை, சமயத்தை எதிர்த்தார்.
பழைமைகளை மரபுகளை எதிர்த்தார்.
புராணங்களை இதிகாசங்களை எதிர்த்தார்.
புனிதர்களை, புலவர்களை எதிர்த்தார்.
மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்.
முட்டுக்கட்டைச் சமுதாயத்தை,
சடங்குகளை எதிர்த்தார்.
படிப்பை, படித்தவர்களை எதிர்த்தார்.
எல்லாவற்றையும் ஏன் எதிர்த்தார்?
எல்லாமே மக்கள் நலனுக்கும்
முன்னேற்றத்திற்கும்
சமத்துவத்துக்கும்
சுயமரியாதைக்கும் விடுதலைக்கும்
எதிராக இருந்ததனால் எதிர்த்தார்.
இருளுக்குப் பகையாக இருந்தார்;
ஒளியைக் காப்பாற்றவேண்டுமே
என்பதற்காக பொய்ம்மைகளின் கழுத்துக்குப்
பூமாலை கொண்டுபோவாரை
எதிர்த்துப் போராடினார்.
உண்மைகளைப் புதைக்கக்
கல்லறை கட்டுவோரை
எதிர்த்துப் போராடினார்.
இப்படி ஓர் எதிர்ப்புநிலை ஆளுமையை,
இளமை எப்படித் தனக்குரிய தலைமையாக
அடையாளம் கண்டது?
கண்டது!
ஆசிரிய அய்யா வீரமணி வடிவத்தில்!
தந்தைபெரியார் பின்னால் போவதைக்
குடும்பத்தில் யார் அனுமதிப்பார்கள்?
எதற்கும் ஒத்துவராத
தகராறுபிடித்த ஆசாமி
ஈ.வெ. இராமசாமி என்பதுதான்
அன்றைய மதிப்பீடு.
குடும்பத்தில்
ஒரு சுயமரியாதைக்காரன் இருந்தால்
வெடிக்கும் மனிதவெடிகுண்டு
வீட்டில் இருப்பதாக
அஞ்சிய காலம் அது.
அப்படி இருந்த நாள்களில்
எப்படி வீரமணி
பெரியார் மடியில் போய்
அமர்ந்தார்! வளர்ந்தார்!
பிருந்தாவனக் கனவுகள் அல்ல
பெரியார் கருத்துகள்;
பிரளயத்தின் உரையாடலும்
உறவாடலுமாகும்.
சிறிய வயதிலேயே
பெரியாரியம் மூட்டிய தணல்
கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது
வீரமணியிடம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
எண்ணெய்க் கொப்பரைகளைக் கவிழ்த்தது
அந்த வாலிபத் தணல்மேல்.
தன்னை ஓர் அழிவு வேலைக்காரன் என்று
அறிவித்துக்கொண்டவர்
பெரியார்.
புரட்சி என்பது ஒரு மாலைநேரத் தேநீர்
விருந்தல்ல என்ற மாவோ கருத்துக்கு
நெருக்கமானவர் அவர்.
தாய்மடியில் வளர்ந்தது
கால் காலம்கூட இல்லை.
காயங்கள் மடியில் வளர்ந்ததே
முக்கால் முழுக்காலம்.
தந்தைபெரியார் கனவுகளைத் தோண்டியெடுக்க
வந்தவர் அல்லர்.
ஆகாத நனவுகளை
அடித்து நொறுக்கித் தள்ள வந்தவர்.
அவர் கைகளில் இருந்த
கடலூர்க் கடப்பாரை அய்யா வீரமணி!
பெரியாரைப் பரிசுகள் சந்தித்ததில்லை.
ஆனால் தண்டனைகள் சந்திக்காமல்
இருந்ததில்லை. மாலை கிடைக்கும் என்று
மேடை ஏறியதில்லை பெரியார்;
கற்களை வீசினார்கள்,
இயக்கத்துக்கு அடித்தளம்போட
அவற்றைப் பயன்படுத்தினார்.
கட்டைகளைத் தூக்கி அடித்தார்கள்,
கதவுக்கும் கூரைக்கும்
தேவைப்படலாம் என்று திரட்டிக்கொண்டார்.
கணக்குக்கேட்பார் அய்யா என்று
எத்தனை கற்கள்
எத்தனை கட்டைகள் என்று
எண்ணி வைத்தார் இளைய வீரமணி.
நீதிமன்றத்தில் வழக்காடும்போதே
எவ்வளவு தண்டனை கொடுத்தால்
நீதிபதி அய்யாவுக்குத் திருப்தி
ஏற்படுமோ அந்த அளவு தண்டனை
கொடுங்கள் என்று கேட்ட
இரண்டாம் சாக்கரட்டீசு அவர்.
ஆசிரியர் வீரமணியைச்
சென்னைப்பாலம் ஒன்றின்மீது
காவலர்கள் நடத்தியே சிறைக்குக்
கொண்டுபோனதைக் கண்கலங்கக்
காலமும் நானும் கண்டதுண்டு.
நெருக்கடிக்காலத்தில்
மிசாக் கைதியாகி 258 நாட்கள்
சிறைப்பறவையாக அடைபட்டுக்கிடந்தார்.
தமிழகத்தின் வரலாற்றுப் பாத்திரங்களைச்
சிம்மாசனங்கள் தயாரிக்கவில்லை;
சிறைக்கூடங்களே தயாரித்தன.
இன்று அரசியல் காரணங்களுக்காக,
திராவிடம் என்னும்
அடைமொழிகொண்ட கட்சிகளை
அழிக்கத் துடிக்கிறார்கள்.
ஆட்சியிலிருந்து
அகற்றமுடியாதவர்கள்
திராவிடம் என்றசொல்லை
அகராதியிலிருந்தேனும் அகற்றிவிட
ஆத்திரப்படுகின்றனர்.
தந்தைபெரியார் இயக்கம் பலவாகப் பிரியலாம்;
ஆனால் தந்தை பெரியாரைவிட்டு ஒரு நாளும்
அது பிரியாது.
இது
ஒரு சமூக நீதி இயக்கம்.
தந்தைக்குப்பின்
இயக்கத் தலைமை தாங்கித்
தளராமல்
தடைகளுக்கு அஞ்சாமல்
நடத்திவரும் ஆசிரியர்க்கு
அகவை 89.
ஓயாமல் இயங்குகிறார்
விடுதலையோடும், எண்ணற்ற
வெளியீடுகளோடும்.
கண்சிவக்கும் தருணங்களோடும்
களமாடும் வலிமையோடும்.
இவர்
குரலும் விரலும் இவருக்கு
உரியவை அல்ல.
பகலும் இரவும்போல உலகில் அனைவருக்கும்
சொந்தம்.
சளிபிடித்ததென்றும்
காய்ச்சல் வந்தென்றும் இயக்கத்தைப்
படுக்கவைத்துத்
தைலம் தடவாத தலைவர்
ஆசிரியர் வீரமணி.
பகுத்தறிவு சுயசிந்தனை ஆகியவற்றை
மந்திரமாக ஓதித்
தாயத்துக்கட்டாமல்
விவாத நாடகங்களை
வீதிதோறும் படைத்து
அறிவில் அனல்பற்றவைத்த இயக்கம்
திராவிட இயக்கம்.
இளமையிலேயே
தனக்குரிய தலைவனைத் தேர்ந்தெடுத்த
அவர் இன்றும்
ஓர் இளமாணாக்கன்போல்
இடையறாமல் படிக்கிறார்
எழுதுகிறார் பேசுகிறார் இயங்குகிறார்.
கடந்துபோன வயதுகளை
யாரும் திரும்பிவருமாறு
அழைக்க முடியாது
ஆசிரியர் வீரமணி தவிர.
அவருக்கு நம்
அகம் கனிந்த ஆசை வாழ்த்துகள்.
அவரோடு
வாழ்க்கைப் பயணம் செய்யும்
அவருடைய
அன்புத் துணைவியார்
மோகனா அம்மையாருக்கும்
மனம் மலர்ந்த மல்லிகை வாழ்த்துகள்.
கூடவே
பகுத்தறிவுக்கும்
சுயமரியாதைக்கும் வணக்கம்.
அப்படியே
தமிழுக்கும் தமிழர்களுக்கும்
வணக்கம்.
(சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடத்தப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கில் (2.12.2021, மாலை 6 மணி) கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களால் வாசிக்கப்பட்ட கவிதை)
No comments:
Post a Comment