முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 1, 2021

முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு...

 உச்சநீதிமன்றத்தின் மூவர் கொண்ட ஒரு அமர்வு (ஜஸ்டீஸ் எல்.நாகேஸ்வரராவ், ஜஸ்டீஸ் சஞ்சீவ் கண்ணா, ஜஸ்டீஸ் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அருமையான தீர்ப்பை 2021 நவம்பர் 26ஆம் தேதியன்று வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1991ஆம் ஆண்டு ஒரு பெண் உட்பட 3 பேர் ஜாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் - மேல் முறையீட்டு வழக்காக விசாரிக்கப்பட்டதில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பினை, ஜாதி ஒழிப்புப் போராளிகளும், முற்போக்காளர்களும் நிச்சயம் வரவேற்றுப் பாராட்டும் வகையில் சிறந்த தீர்ப்பாக (Landmark Judgement) அது அமைந்துள்ளது.

அத்துடன் ஒன்றிய அரசும், மாநில அரசும் உடனடியாக ஜாதி ஆணவக் கொலை வழக்கிலிருந்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதியினரைப் பாதுகாப்பது பற்றியும், ஜாதி பஞ்சாயத்து நடத்தி, ஜாதி வெறியுடன் நடந்து கொள்பவர்களை எப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதையும் மிகவும் துல்லியமான, வழிகாட்டும் நெறிகளையே வகுத்துச் சொல்லியுள்ள தீர்ப்பாக அமைந்து வரலாறு படைத்துள்ளது.

முந்தைய தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் பலவற்றைச் செய்யச் சொல்லியும் முந்தைய அரசுகள் செய்யவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் ஜாதி வெறியின் மூலம் ஆணவக் கொலைகள் நடைபெறலாமா?' என்று நெற்றியடி கேள்வியாகக் கேட்டதோடு, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் கூற்றையும் ஜாதி ஒழிப்பு, ஜாதி மறுப்பு (கலப்பு திருமணங்கள்) திருமணங்கள்தான் ஒரே வழி என்று கூறியுள்ளதோடு, தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிய, இருவரது மணவாழ்க்கையில் மூன்றாவது நபர் பிரவேசிக்க உரிமை இல்லை என்றும், அதுஅகம்பாவம்' என்று தத்துவார்த்த ரீதியில் கூறிய கருத்தின் எதிரொலியாய் கேள்வியாக்கிக் (பெரியார் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும்கூட) கேட்டுள்ளனர்!

இளம் தம்பதியினர் வாழ்வில் ஜாதி பஞ்சாயத்து செய்வோருக்குக் குறுக்கிட எந்த உரிமையும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, அப்படித் தலையிட்டு, ஜாதி வெறியைக் கிளப்பியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் நெறிகள் இரண்டு வகையாகும்.

(1) தடுப்பது எப்படி (2) அதை மீறி ஆணவக் கொலை நடந்தால் குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை தருவது எப்படி என்பதையெல்லாம் கூறி, உச்சநீதிமன்றம் இதுபற்றி சில வழக்குகளில் முன்பே ஆணை பிறப்பித்துள்ள நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படாமல் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்ட அத்தீர்ப்புத் தவறவில்லை.

மனுவாதியின் ஆட்சி நடைபெறும் நிலையில் இந்தத் தீர்ப்பை எந்த அளவுக்கு மதித்து, ஒன்றிய அரசு செயல்படுத்தும் என்பது கேள்விக்குறியாக இருப்பினும், மக்களிடையே இதை வைத்து தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு அனைத்து ஜாதி ஒழிப்பு கருத்தாளர்களும், முற்போக்காளர்களும் போராட்டத்தை முடுக்கி விடவேண்டும்.

தமிழ்நாட்டில் இன்றுள்ள திராவிடர் ஆட்சியின் மூலக் கொள்கையேபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவக் கொள்கையானபடியால், நமது முதல் அமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட உள்துறை, காவல் துறை, தலைமைப் பொறுப்பு அதிகாரிகளை அழைத்து - இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்களுக்கு, செயல்வடிவம் தந்து, ஆணவக் கொலைகள் எங்கும் நிகழாத வண்ணம் 'தடுப்பணைகளைக் கட்டுவதோடு', மீறி நடந்தால் வழக்குகளை பிறழ் சாட்சியங்கள் மூலமோ அல்லது வழக்குகளைத் திட்டமிட்டே ஓட்டையுள்ளவைகளாக்கி ஜாதி வெறியர்களைக் காப்பாற்ற முயலும் முயற்சிகள் அதிகார வர்க்கத்தினர் தலைதூக்கினால் முளையிலேயே கிள்ளி எறியவுமான ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்த முன்வரவேண்டும்.

இதற்கு முன் ராஜஸ்தான் மாநில அரசு இது பற்றி தனிச்சட்டம் ஒன்றை (2017ஆம் ஆண்டில்) இயற்றியுள்ளதையும் சுட்டிக் காட்டியதோடு,

இந்த ஜாதிப் பஞ்சாயத்து, ஆணவக் கொலைகளைத் தடுப்பது பற்றி சட்டக் கமிஷன் அதன் 243ஆம் அறிக்கையில்:

"In order to implement the recommendations of the Law Commission in its 242nd Report, the State of Rajasthan has enacted the Prohibition of Interference with the Freedom of Matrimonial Aliances in the Name of Honour and Tradition Act, 2019 on the same lines" என்று 41ஆவது பாராவில் கூறியிருக்கிறார்கள்.

முந்தைய இரண்டு வழக்குகளில்கூட தமிழ்நாடு மாநிலம் Vs  ஆறுமுகம் (சேர்வை), சக்திவாஹினி Vs  யூனியன் ஆப் இண் டியா வழக்கிலும் கூறப்பட்டுள்ளதை மாநில அரசுகள் இனியும் காலதாமதம் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு செயலில் உடனே இறங்க வேண்டியது அவசர அவசியம்!


 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

1.12.2021 


No comments:

Post a Comment