செங்கம் பெண்ணின் செறிவான துணிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 11, 2021

செங்கம் பெண்ணின் செறிவான துணிவு!

'குடிகாரனை மணக்க மாட்டேன்'

மணமகள் துணிச்சல் முடிவு

தர்மபுரி, டிச.11- தர்மபுரி மாவட்டம், தொட்டபட காண்ட அள்ளி சரவணன், தி.மலை மாவட்டம், செங்கம் லட்சுமி ஆகியோருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக் கோட்டை, வஜ்ஜிரபள்ளம் ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை 6-7.30 மணிக்குள் திருமணம் நடக்கவிருந்தது. மணப் பெண், குடும்பத்தினர், உறவினர்கள் கோயிலில் காத்திருந்தனர். ஆனால், மணமகன் சரவணன் தரப்பினர் வரவில்லை

இதனால் மணமகன் சரவணன் வீட்டுக்கு, பெண்வீட்டார் சென்றனர். அங்கு, மாப்பிள்ளை கோலத்தில் இருக்க வேண்டிய சரவணன், மது மயக்கத்தில் இருந்ததைக் கண்டு மணப் பெண் லட்சுமி அதிர்ந்தார். 'குடிகாரனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம்' என்று மணப்பெண் லட்சுமி அழுதார். சரவணன் செயலால் அதிர்ந்த பெண் வீட்டார், திருமணத்துக்காக தாங்கள் செலவிட்டத் தொகையைக் கேட்டு, மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையே, அரை குறை போதையில் இருந்த சரவணன், 'இனி குடிக்கமாட்டேன், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று காவல் நிலையத்தில்  வைத்து, மணமகள் லட்சுமியிடம் கெஞ்சினார். ஆனால், மணமகள் லட்சுமி, பிடிவாதமாக மறுக்கவே, மாப்பிள்ளையாக வேண்டிய சரவணன், தொங்கிப் போன முகத்துடன், வீடு திரும்பினார். கடைசி நேரத்தில், குடிகாரனிடம் இருந்து தங்கள் மகள் வாழ்க்கை தப்பிய நிம்மதியில் பெண் வீட்டார், செங்கம் புறப்பட்டனர்.

திருச்சி 'தினமலர்' 11.12.2021

மேலே கண்ட செய்திக்காக செங்கம் பெண்ணின் செழுமையான - துணிவான அறிவிப்புக்காக அவரையும், அவரது பெற்றோரையும் நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

தந்தை பெரியாரின் பெண்ணியப் புரட்சி - உரிமைக்காக தயங்காது குரல் கொடுங்கள் என்ற சுயமரியாதை முழக்கம் நாளும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பயன்தரத் தவறுவதில்லை. அதற்குச் சரியான எடுத்துக்காட்டே நேற்றைய திருமண மறுப்பு.

சுயமரியாதை இயக்கம் தொடங்கும்முன் - பல ஆண்டுகளுக்கு முன், மணமகனும் - மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் கிடையாது; பிடித்ததா? பிடிக்கவில்லையா? என்று அவர்கள் கருத்தைக் கேட்காமல், மண மேடையிலும் சரியாக உற்றுக்கூட பார்க்காது 'தாலி கட்டும் நேரத்தில்' ஓரப் பார்வை தவிர்த்து ஒழுங்காகப் பார்க்கும் ஒரே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

மணமகன் பற்றி - ஜாதி பற்றி மட்டும் - 'நம்ம ஜாதியா?' என்றுதான் பார்ப்பார்களே தவிர, ஒழுக்கம் உள்ளவனா? என்பதுபற்றியெல்லாம்  சிறிதும் கவலைப்படாது, 'கடமை முடிந்தது' என்று எவனையாவதுப் பிடித்து 'கட்டி வைப் பார்கள்.'

ஆனால் இப்போது....?

பெரியார் யுகப் புரட்சியால் மணமகளின் தெளிவும், உறுதியும் மிக்க இரண்டு முக்கிய முடிவுகளுக்காக அந்த மணப்பெண்ணை எவ்வளவு  பாராட்டினாலும் தகும்!

1. குடிகாரனை கணவனாக ஏற்க மாட்டேன் என்பதில் தெளிவான முடிவு.

2. மீண்டும் 'இனிமேல் நான் குடிக்க மாட்டேன்' என்ற வாக்குறுதி... (அது பெரும்பாலும் சாத்திய மில்லாத பொய் வாக்குறுதியாகவே இருக்கும்.)

கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது!

"நாளை முதல் குடிக்க மாட்டேன்

இது சத்தியமடித் தங்கம்!"

அது மாதிரி "அந்த சத்தியத்தை காவல் நிலையத்தில் ஏற்க மறுத்த பெண்ணின் உறுதி மிகவும் வியக்கத்தக்கது; மற்றவர் பின்பற்றத் தக்கது."

"பெண்ணே பெண்ணே துணிவு கொள்!

நீ மண்ணல்ல; மனிதம் - மறவாதே!"

No comments:

Post a Comment