வங்கிகள் தனியார்மயத்தைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

வங்கிகள் தனியார்மயத்தைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

சென்னை,டிச.17- பொதுத் துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று (16.12.2021) தொடங்கியது.

இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகினர். ஒரே நாளில் நாடு முழுவதும் ரூ.37,000 கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப் பட்டுள்ளன.

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிச.16, 17ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக வங்கிஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூடுதல் தொழிலாளர் ஆணையர், நிதித் துறை பிரதிநிதிகள், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் இடையே 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. வங்கிகள் தனியார்மய மசோதாவை தாக்கல் செய்யும் முடிவை திரும்ப பெற்றால், வேலைநிறுத்த முடிவை கைவிடுவதாக வங்கி ஊழியர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பு ஒப்புக்கொள்ளாததால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி, வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. 

இப்போராட்டம் குறித்து, சி.எச்.வெங் கடாச்சலம் கூறியபோது, ‘‘தமிழ்நாட்டில் 80 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 5.5 லட்சம் காசோலைஉட்பட நாடு முழுவதும் ரூ.37,000 கோடி மதிப்பிலான 39 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

 

No comments:

Post a Comment