மத்தியப் பிரதேசத்தின் அனுபூ மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அமைச்சர் பிசாஹுலால் சிங் பேசியபோது, "தாக்குர், தாகர் போன்ற உயர்ஜாதி மக்கள் தங்கள் வீட்டுப் பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். பெண்களை வெளியே செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை.
அதேசமயம் நமது கிராமத்தில் உள்ள பெண்கள், விளைநிலங்களில் வேலை செய்கின்றனர். வீட்டு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். உயர்ஜாதிப் பெண் களை வீட்டைவிட்டு வெளியே இழுத்து வாருங்கள். அவர்கள் முன்னேற்றத்துக்கு இது உதவாதா?" என்று அவர் பேசியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவருக்கு எச்சரிக்கை விடுத்து அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வெளியிட்ட அறிக்கையில்,
"அமைச்சர் பிசாஹுலால் சிங்கை தொடர்புகொண்டு பேசினேன். அவரது கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். உணர்வுகள் என்னவாக இருந்தாலும், வெளிப்படுத்தும் சொற்களால் செய்தி தவறாக சென்றுவிடக் கூடாது.
ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேச வேண்டும். எந்தவொரு நிலையிலும் இதுபோன்ற கருத்து களைத் தெரிவிக்கக் கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். இதுபோன்ற உணர்வுகளின் வெளிப்பாடு பொதுமக்களுக்கு தவறான செய்தியைக் கொண்டு செல்லும்பட்சத்தில், அதை வெளிப்படுத்தும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு மன்னிப்பே கிடையாது. தாய்க்கும் சகோதரிக்கும் மகளுக்கும் மரியாதை கொடுப்பதே பாஜக வில் முதன்மையான கடமை" என முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சர் பிசாஹுலால் சிங்கின் கருத்துக்காக மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா மன்னிப்பு கோரியதுடன், இது மிகவும் கெட்ட வாய்ப்பான கருத்து என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மன்னிப்பு கோரிய அமைச்சர் பிசாஹுலால் சிங், ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறீராஜ்புத் காணி சேனை அமைப்பினர் அவரது உருவப் படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். அவரது காரை முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெய்வாதன் சிங்கும் அமைச்சரின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிசாஹுலால் சிங் கடந்த ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவி அமைச்ச ரானவர் உயர் ஜாதி பெண்கள் குறித்து தெரிவித்த வார்த்தைகளில் சற்றுத் தடிப்புத் தன்மை காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவர் சொன்ன கருத்தில் என்ன தவறு, குற்றம் இருக்கிறது என்று எவரும் நாவைச் சுழற்றவில்லை.
இதுதான்... ஆம் இதுதான் இந்நாட்டுப் பிரச்சினையும் - திசை திருப்பலும் ஆகும். பிரச்சினையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது ரோஜா செடியை நட்டு விடுவார்கள். மூலக் கருத்து மக்கி மண்ணாகி விடும்.
கிராமத்தில் உள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். வயல்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் உயர் ஜாதி உயர் தட்டுப் பெண்களோ படி தாண்டா விரதத்தை மேற்கொள்கிறார்கள். இதற்குக் காரணம் வெளியில் வருவது, வேலைகளில் ஈடுபடுவது உயர் ஜாதித் தன்மை என்னும் தகுதிக்குக் குறைவானது என்னும் ஜாதி ஆணவ மனப்பான்மையே!
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸின் தலைவரான மோகன் பாகவத்தோ பெண்கள் அனைவர்மீதும் ஒட்டு மொத்தமாக அனைத்துப் பெண்கள்மீதும் சாட்டையைச் சுழற்றுகிறாரே!
பெண்கள் அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பதால் கணவனை மதிப்பதில்லை. அத்தகைய பெண்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசியபோது - இப்பொழுது வாய்ச் சவடால் விடும் பேர் வழிகள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்களாம்? இவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்தின் தத்துவமே எல்லாப் பெண்களையும் இழி நிலையில் சிறை வைப்பதே!
No comments:
Post a Comment