தேவை சிறப்புத் திட்டம் - மாநில அரசுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்புத் தேவை!
பொதுமக்களின் ஒத்துழைப்பு அதைவிட முக்கியம்! முக்கியம்!
கரோனா உள்ளிட்ட தொற்று கடுமையாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்புத் தேவை - பொதுமக்களின் ஒத்துழைப்பு அதைவிடக் கூடுதல் தேவை - அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
நாளைய மறுநாள் (1.1.2022) ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.
உலக சுகாதாரத் தலைவரின் எச்சரிக்கை
வரும் ஆண்டும், மக்களையும், அரசுகளையும் வெகுவாகச் சோதிக்கும் நோய்த் தொற்று - கரோனா (கோவிட்-19), டெல்டா மாற்று நோய் வடிவம் (டெல்டா வேரியண்ட்), ஒமைக்ரான் போன்றவை ‘சுனாமி' போலத் தாக்கும் பேரபாயம்பற்றி உலக சுகாதாரத் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் நேற்று (29.12.2021) எச்சரித்துள்ளது அனைவரது கவனத்திற்கும் உரியது. ஒன்றிய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு 11 சதவிகிதம் கூடுதலாகியுள்ளது என் றும், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாளும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவேக மாகப் பெருகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடித் தடுப்பு - சிகிச்சைக்கான போதிய ஏற்பாடுகளை விரைந்து செய்யவேண்டும்!
அதைவிட அவர் கூறிய மற்றொரு முக்கிய கருத்து, அரசுகளின் ஆழ்ந்த பரிசீலனைக்குரியதாகும், ‘‘உடன டித் தடுப்பு - சிகிச்சைக்கான போதிய ஏற்பாடுகளையும் விரைந்து செய்யவேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அரசு இயந்திரமும் புயல் வேகத்தில் செயல்பட்டு, முன்னெச்சரிக்கையாக பல ஆயத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பிரிவுகளை ஆங்காங்கே ஏற்பாடு செய்து வருவது ஓரளவு நிம்மதியை மக் களுக்குத் தருகிறது!
உலக சுகாதார அமைப்பின் தலைவர் (WHO) கூறி யுள்ள முக்கிய கருத்தையும் முக்கியமாக எடுத்துக் கொண்டு செயலுரு தரப்படல் வேண்டும்!
கரோனா கொடுந்தொற்று, ஒமைக்ரான், டெல்டா மாற்றுரு நோய்களினால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமல்ல; சிகிச்சை அளிக்க இரவு - பகல் பாராமல் உழைக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் முதலியவர்களைத் தாக்குவதோடு, அதிகமான அள வுக்கு, சக்திக்கு மேற்பட்டு உழைத்து, அதன் காரணமாக அவர்களும் நோயினால் தாக்கப்படும் பேரபாயமும் தவிர்க்கப்பட வேண்டியனவாகும்!
எனவே, தற்காலிகமாகவாவது கூடுதல் மருத்து வர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுத் தொழி லாளர் தோழர்களை பணியமர்த்த ஒரு சிறப்புத் திட் டத்தை நமது அரசு உரியவர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக செயல்படுத்துவதும் அவசர அவசியம்!
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வு!
உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளது -பொதுவாக அனைத்து உலக நாடுகளுக்கும்தான் என்றாலும், கூடுதலாகக் கிடைத்துள்ள மற்றொரு கவலை கொள்ளத்தக்க செய்தி:
‘‘இந்தியாவில் அடுத்த சில நாள்களில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக (இங்கிலாந்து) ஆய்வின்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது!
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் சார்பில் உருவாக் கப்பட்டுள்ள கோவிட்-19 இந்தியா டிராக்கர் (Tracker) மென்பொருள் மூலமாக இத்தகவல் கிடைத்துள்ளது!''
அப்பல்கலைக் கழகப் பேராசிரியர் பால்கட்டுமேன் கூறுகையில்,
‘‘இந்தியாவில் அடுத்த சில நாள்களில் கரோனா பரவல் பலமடங்கு அதிகரிக்கும்; இந்த வாரத்திலேயே அது நடக்கலாம். ஆனால், தினசரி பாதிப்பு எந்த எண்ணிக்கையில் இருக்கும் என இப்போது கூறுவது கடினம்'' என்றார்.
ஒரு சிறப்புச் செயல்திட்டத்தை செயல்படுத்தவேண்டும்!
இவற்றை அலட்சியப்படுத்தாமல், வருமுன்னர் காக்க விரைந்த ஒரு சிறப்புச் செயல்திட்டத்தை நமது முதலமைச்சர் முனைப்புடன் ஈடுபட்டு செயல்படுத்த வேண்டும் - விவேகமும், வேகமும் அவருடைய செயல்முறை என்பதால்!
முன்பு, கூடுதல் ஆக்சிஜனை மாநிலத்தில் தயாரிக்க, செங்கற்பட்டில் செயல்படாத ஒன்றிய அரசின் நிறு வனத்தினை ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டு 6 மாதங்களுக்குமேல் ஆகிறது - என்னாவாயிற்று என்பதும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, சுமார் 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் - இன்னமும் அதற்குரிய நிதிபற்றி தெளிவாக - திட்டவட்டமாக ஏதும் அறி விக்கப்படாமல், ‘ஜப்பான் நாட்டிடம் பேசிக்கொண்டே இருக்கிறோம்' என்ற பழைய பதிலேதான் வருகிறது! அடிக்கல் அப்படியே இருக்கிறது!!
மருத்துவ அடிக்கட்டுமானம் தமிழ்நாட்டில் ‘‘திராவிட மாடல் ஆட்சியின்'' தனிப்பெரும் சாதனை யாக நடைபெற்று வருகின்றது. நோய்த் தொற்றுத் தாக்கும் கூடுதல் அபாயத்திலிருந்து மீளுவதற்குப் போதிய புதிய அடிக்கட்டுமான ஏற்பாடுகளை (New Additional infrastructure Facilities) செய்யவேண்டும் - பல புதிய நியமனங்கள் உள்பட.
மருத்துவப் பட்ட மேற்படிப்பில் (Post Graduate) நீட் தேர்வு முடிவினை அறிவிக்க ஏற்படும் தாமதத்தின் காரணமாக, 100 நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவ, செவிலியர்கள் கூடுதலாக மற்றொரு 100 நோயாளி களுக்கும் சிகிச்சை அளிக்க நிர்ப்பந்திக்கப்படுவது தவிர்க்க முடியாதபோது, அது நோயாளிகளை முழு வீச்சுடன் மருத்துவர்கள் கவனித்து சிகிச்சை அளிப்ப தற்கு முடியாத இந்நிலை நிலவுவது ஏதுவானதா? என்பதுபற்றியும் ஒன்றிய அரசு போதிய அவசர கவனம் செலுத்தவேண்டும். மருத்துவக் கட்டுமானத்தைப் பெருக்கவேண்டும்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம், அவசரம்!
இவையெல்லாவற்றிற்கும் மேலாக - முக்கியமாக - மக்களாகிய நமது ஒத்துழைப்பு அவசியம், அவசரம்!
1. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்
2. முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிதல்
3. அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல்
4. தனிநபர் இடைவெளி போன்றவற்றைக் கடைப் பிடித்து ஒத்துழைப்பது அவசியம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
30.12.2021
No comments:
Post a Comment