“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 18, 2021

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  - காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப்பகுத்தறிவுப் போராளிஎன்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021) இரவு 8.30க்குத் தொடங்கி 12.05 மணி வரை)

பட்டம் பெற்ற தலைவர் மகிழ்ந்ததைவிட உலகெங்கும் வாழும் தமிழர்கள் - திராவிடர்கள் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், மனித உரிமை விரும்பிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைத்த பட்டமாக, விருதாகக் கருதி மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்தார்கள்.

என்ன காரணம்? தந்தை பெரியார் என்ற மேருமலை தன் மூச்சுக்கு நிரந்தர விடுப்பு அளித்த நிலையில், திராவிடர் கழகம் என்ற அமைப்பு இருக்குமா - துலங்குமா? என்ற நினைப்பில் இருந்தவர்கள்  - இருக்கக் கூடாது - தொலைந்து போகட்டும் என்று தம் இஷ்ட மித்திர தெய்வங்களை எல்லாம் நேர்த்திக் கடன் இருந்து கும்பிட்டுக் கிடந்தவர்கள் ஒரு பக்கம்.

அய்யோ, அய்யாவின் இயக்கம் மரணித்தால் நம் கெதி என்னாவது! நம் மக்களுக்குக் கழிப்பின்றி நமக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம் எது? இனத்தைப் பாதுகாத்திட இறப்பையும், இன்முகத்துடன் ஏந்தி வரவேற்கும் வலிமை மிக்க அளவில் வேறு இயக்கம் ஏது! ஏது?

அரசியல் அபிலாசை என்னும் மயக்கத்தின் வட்டத்திற்குள் சிக்கி வாய்பிழந்து நிற்காமல்நின்ற சொல்லர்என்பதற்கேற்ப இரும்பென உறுதியாகக் களத்தில் நிற்கும் கழகம் எது?

சமூகநீதிக்கு ஊறு என்றால் சாய்ந்து படுக்காமல், சடுதியில் சமர்க்களம் புகும் கழகம் ()து? என்ற எண்ணத்தில் அஞ்சியோர் உண்டு.

தந்தை பெரியார் மறைந்த நிலையிலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கழகம் கலையாது - இணையாது தனித்தன்மையுடன் இயங்கும் செயல்படும்என்று செவிளில் அறைந்தது போல துப்பாக்கியிலிருந்து ரவை புறப்பட்டது போல பதில் கூறிய தலைவர் அன்றோ நம் தலைவர் வீரமணி.

திருச்சியிலே பொதுக்குழு கூடி (6.1.1974) எடுத்த தீர்மானத்தின் சூளுரை என்ன?

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம்!” என்று எடுத்த சூளுரை-

இன்று வரை, ஏன் நாளையும், எதிர் காலத்திலும் உயிர்த்துடிப்போடு நின்றதே - நிற்கிறதே - நிற்குமே!

அய்யாவின் ஓராண்டு நினைவையொட்டி (25.12.1974) ‘இராவணலீலாஎன்னும் இனமான விழாவை நடத்தி இந்தியாவையே திரும்பிப்பார்க்கச் செய்தாரே - தலைவர் அன்னை மணியம்யை£ர்.

அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்ட காலக்கட்டம்,  நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு - கழகத்தின் பொதுச்செயலாளரான ஆசிரியரை மிசா கைதியாக ஓராண்டு சிறைக்கூடத்திலே பூட்டி, கழகத்தை கலகலக்கச் செய்யலாம் என்று காகப்பட்டர் பரம்பரையினர் செய்த சூழ்ச்சியும் சுக்கல் நூறாக ஆக்கப்பட வில்லையா?

தணிக்கை என்ற பெயரால்விடுதலையின் விலா எலும்பைக் குத்தி - குடலைக் கிழித்து மாலையாகச் சூட்டிக்கொள்ளலாம் என்று மார்தட்டினார்களே - அவர்களின் வியூகத்தையும் வீழ்த்திவிடுதலைதன் பெயருக்கேற்ப வீரநடை போடவில்லையா?

நெருக்கடி - தணிக்கையின் பெயரால்விடுதலையைவீழ்த்தலாம் என்ற வீண்கனவைக் கண்டார்களே  - அந்தத் தலைவர் ஆசிரியர்  வீரமணி தலைமை சால் வலிமையால் அளப்பரிய ஆற்றலால் எட்டுப்பக்கத்தில் வண்ண வண்ணமாக எண்ணங்களை சுமந்து உலகத் தமிழர்கள் மத்தியில் வீர உலா நடத்தவில்லையாவிடுதலை’?

சென்னையில் ஒரு பதிப்பு என்றால் தந்தை பெரியாரின் தலைமையகமான திருச்சியில் இன்னொரு பதிப்பையும் விரிவாக்கம் செய்யவில்லையா? மளமளவென வெளியீடுகளை பல மொழிகளிலும் குவித்துக் கொண்டு இருக்கவில்லையா? முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களே இந்த சாதனையை வெகுவாகப் பாராட்ட வில்லையா?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நமது தலைவர் வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால்விடுதலைவார ஏடாக மாறி இருக்குமே! நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது. அதனைத் தடுத்தாட்கொண்டு தந்தை பெரியார் கட்டளையை ஏற்று 59 ஆண்டு காலம் ஆசிரியர் என்ற உலக கின்னஸ் சாதனையை நிகழ்த்திய ஒன்று போதுமே - தலை குனிந்து அவருக்கு நன்றியோடு வணக்கம் செலுத்துகிறோம்!

வருமான வரித்துறையின் மூலம் பெரியார் அறக்கட்டளையை நசுக்கி விடலாம் என்று நரியார்கள் திட்டமிட்ட நிலையில், நீதிமன்றத்தின் (Income tax apppelate tribunal) படிக்கட்டுகளில் ஏறி, நியாயத்தின் - நேர்மையின்  - உண்மையின் ஒளியை விளக்கி, முழுக்க முழுக்க ஆதிக்கக் கம்பி வேலியாக இருந்த அந்த அரணை உடைத்து - “எதிர்காலத்தில் இயக்கத்தை இவர் காப்பார்என்று அய்யா வைத்த நம்பிக்கையை நாணயமாகக் காப்பாற்றிக் கம்பீரமாக வெற்றிப் புன்னகையுடன் வெளிவந்தாரே நமது தலைவர் ஆசிரியர்.

இந்த ஒன்றுக்காக எவ்வளவுப் பாராட்டுகளைக் குவித்தாலும் தகுமே! - தகுமே! நன்றி! நன்றி!!

எண்ணிக்கையில் அகல் விளக்காக இருந்த கல்வி நிறுவனங்கள் இன்று ... சூரியனாக வானளவு வளர்ந்து சுடர் விடவில்லையா?

சமூகநீதியின் சரித்திரம் தான் என்ன? தந்தை பெரியாரின் உழைப்பால் 49 விழுக்காடு தமிழ்நாட்டில் நிலவிய இடஒதுக்கீடு இன்று 69 விழுக்காடாக வலிமையான கூட்டப் பாதுகாப்போடு விண்மீனாக ஜொலிக்கிறதே!  தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசான் தோள் உரத்தின் மீது நின்று சாதித்துக் காட்டிய சாதனைக்கு சொந்தக்காரர் இவர் இல்லையா?

1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - ஒன்றிய அரசின் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பது  - அரை நூற்றாண்டுக்குப் பிறகு அது செயல் மலராகப் பூத்துக் குலுங்குகிறதே! இதற்காக திராவிடர் கழக தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில்  இந்தியத்துணைக் கண்டம் முழுவதும் 42 மாநாடுகள் என்பது சாதாரணமா?, 16 போராட்டங்களை - பிரதமர் வீட்டு முன் மறியல், நாடாளுமன்றத்தின் முன் மறியல் என்று முன்னுதாரணம் இல்லாத வகையில் நடத்திக் காட்டியது யார்?

வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்என்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அகம் மலர்ந்து புகழ்மாலை சூட்டியதை நேரில் கண்டு களித்த கருஞ்சட்டையினர் இன்னும் உண்டே! (1.10.1994)

எதைச் சொல்ல, எதை விட?

உலகத் திராவிட மகளிர் மாநாடு நமது தலைவருக்குப்பகுத்தறிவுப் போராளிஎன்ற பட்டம் அளித்தது - ஏதோ பாராட்ட வேண்டும் என்ற பாவனையால் அல்ல.

எத்தனை எத்தனைப் பெண்கள் விடுதலை மாநாடுகள்! விதவைப் பெண்களுக்கு பூச்சூட்டல் கண்டு உலகப் பூப்பாகமே அதிர்ந்ததே!

அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி நீக்கம் நாட்டையே குலுக்கியது (14.4.2015). வழக்கில் வெற்றியும் கண்டோமே!

இளைஞர்களே, நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் விதவைகள் என்று சொல்லப்படும் பெண்களையே மணமுடிப்பீர்என்ற குரல் கொடுத்ததும், தீர்மானம் நிறைவேற்றியதும் திராவிடர் கழகம் அல்லாமல் வேறு எந்த அமைப்பு? தலைமையக பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிலையம் மூலம் அன்றாடம் புரட்சிகரமாகத் திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளதே!

விதவைப் பெண்கள் தரிசு நிலம் என்று கூறிய காஞ்சி சங்கராச்சாரியாரை எதிர்த்து காஞ்சி மடம் முன் கழக மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கண்டனக் குரலை எழுப்ப வில்லையா?

ஆண்களுக்கான உரிமை பெண்களுக்கும் வேண்டும். செல்வி, திருமதி என்ற சொற்களைத் தூக்கி எறிக! தன் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரை எதற்கு இணைக்க வேண்டும்?

துணைவரை இழந்த பெண்கள் திருமணத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்ற புரட்சித் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன, திராவிடர் கழக மாநாடு அல்லாமல் வேறு எங்கே, எங்கே?

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம், காதல் திருமணம் பெருக வேண்டும்; தக்க வயதடைந்த ஆணும் பெண்ணும் இணைவதில் அடுத்தவர்கள் குறுக்கிட உரிமை ஏது? என்றெல்லாம் புரட்சிக் குரல் கொடுத்தவர்தான் எவர்?

பெண்களே தீக்குண்டத்தில் இறங்கி, கடவுள் மறுப்பை முழங்கி பூமியை அதிரச் செய்யவில்லையா?

கையில் தீச்சட்டி ஏந்திதீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே?’ என்று கருப்புடை தரித்த கழக மகளிர் உரக்கக் கொடுத்த முழக்கம், உறங்கியவர்களையும் திடுதிப்பென எழுந்து ஓடி வந்து பார்க்கச் செய்யவில்லையா?

சட்டப்பேரவை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கிடு என்பதற்காக தலைவர் வீரமணி தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள், கருத்தரங்கங்கள், பேரணிகள், போராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

சேலத்தில் 23, 24.1.1971 நாட்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஒரு முக்கிய தீர்மானம்.

ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாதுஎன்ற தீர்மானத்தைத் திரித்துஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொள்ளலாம்என்று வெளியிட்டஇந்துஏட்டை எதிர்த்து, ஆசிரியர் வீரமணி அவர்கள் வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்தில் வாதாடவில்லையா? இந்து ஏடு மன்னிப்புக் கேட்டதுண்டே!

1938இல் சென்னையில் மகளிர் மாநாடு நடத்திபெரியார்என்ற பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றார்கள்.

இன்று அவரது சீடருக்குப்பகுத்தறிவுப் போராளிஎன்ற பட்டம் தந்து பெருமைப் பெற்றுவிட்டனர்.

தமிழர் தலைவர் தலைமையேற்று இயக்கத்தை எழுச்சியுடன் நடத்துகிறார் என்பதற்கான அத்தாட்சிதான் உலக திராவிடர் மகளிர் மாநாட்டின் புகழ் பூத்த செயல்!

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

இனமானப் பேரொளிஇது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

பாரத் ஜோதிஎன்ற விருதைக் கொடுத்து பாராட்டியது. புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

ஆக்ஸ்போர்டு தமிழ் விருதுவழங்கிக் குதூகலித்தது- ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  பெரியார் ஒளிவழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளைஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

வாழ்நாள் சாதனையாளர்விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

கவுரவ டாக்டர்பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

கருத்துக்கனல்என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கானகலைஞர் விருதினைவழங்கிக் கவுரவித்ததுமுரசொலிஅறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில்தந்தை பெரியார் விருதுவழங்கி உச்சி மோந்தது (2009).

தந்தை பெரியார் சமூகநீதி விருதுவழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில்திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்கு, அறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்ல, அவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

இவற்றையெல்லாம் இயக்கமே உயிர் மூச்சு என்று எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றிப் பாடுபடும் இயக்கத் தொண்டர்களுக்கு அர்ப்பணம் என்று அடக்கமாகவே சொல்லி வந்திருக்கிறார். வாசிங்டனில்வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கி சிறப்பிக்கப்பட்டபோது கூட, இயக்கப் பொறுப்பாளர்களை மேடைக்கு அழைத்து, அந்த விருதினைப் பெற்ற பெரும் பண்பை எங்கே தேடி அலைய முடியும்?

அடக்கமும், நேர்மையும், உழைப்பும் நெருக்கடியான ஒரு  காலகட்டத்தில் நிமிர்ந்த செயல்பாடும்தான் உண்மை மனிதன் என்பதற்கு அடையாளம்.

இந்த அணிகலன்கள் நம் தலைவருக்குப் பஞ்சமே இல்லை.

இன்னொன்றையும் தவறாது சொல்லுவார் - என்மீதுநீங்கள் சாற்றும் புகழுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன்என்றும் கூறுவார்.

1944ஆம் ஆண்டிலேயேஜஸ்டிசைட்ஏடு இவரை அடையாளம் காட்டியது (“Self Respect Bombers).

எந்த ஒரு உரிமையையும் அதற்கான விலையைக் கொடுத்து பெற வேண்டும் என்ற இலக்கணத்துக்கு இலக்கியமும் இவரே, இதுவரை 55 முறை சிறையும்  - கைதும் நடந்துள்ளன.

உடலில் கத்தி படாத இடமில்லை (அறுவைச் சிகிச்சையில்)  - உயிர்க்குக் குறி வைக்கப்பட்டன பல முறை!

நெருப்பாற்றில் அல்ல - கந்தகக் கடலில் நீச்சல்போட்ட நிஜமான மனிதத்துவம் நிரம்பிய நிறைகுடம் இது!

இந்த நிலையில் சுயநலமில்லது வீரமணியைப் போல் எத்தகைய பொருள் ஊதியத்தையும் கருதாமல், பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்” (‘விடுதலை’, 6.6.1964) என்றாரே தந்தை பெரியார்! இதைவிட நமது தலைவர் ஆசிரியருக்கு எத்தனை விருதுகளும், கிரீடங்களும் தாவி வந்தாலும் ஈடாகாதே!

தந்தை பெரியாரே அவரது சீடர் வீரமணியின் தோளைப் பற்றிவிடுதலைஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தாரே அடடே, இந்தப் பேறு யாருக்குக் கிட்டும்?

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” என்ற தன்னம்பிக்கைத் தணலை கழகத்தோழர்களிடம் வழங்கிய தலைவர் மானமிகு வீரமணி.

உலகத்தைப் பெரியார் மயம் ஆக்குவோம்என்ற சூளூரை உன்னதமானது! மத மாச்சரியத்தால் மனித ரத்தம் உடைப்பெடுத்து ஓடும் ஒரு காலகட்டத்தில், மதமற்ற ஓர் உலகு தேவைப்படுகிறது - அது பெரியார் என்ற தத்துவ மாமருந்தின் மூலம் தான் கிடைக்கும் என்பார்.

உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறுதி மூச்சுவரை உழைப்பேன்!” என்று தமது நன்றி அறிவிப்பில் ஓங்கி ஒலித்துள்ளார்.

அந்தப்பயணத்தில் நம்மை நாம் இணைத்துக் கொள்ளும் போது தான் நாமும் பெருமைப்பட முடியும்!

பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றி - பன்னாடுகளிலிருந்து பல மொழி பேசும் மகளிரால் நம் தலைவருக்கு அளிக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் அவர்கள் மழையெனப் பொழிந்த கருத்துக்களை வருணிக்க

வார்த்தைகளுக்குத் தெம்பு இல்லை - இல்லவே இல்லை!

நமது தலைவர் மூலம்பெரியார் உலகம்படைக்கப்பட வேண்டும் என்ற ஆதார கருதி அவர்களது உரையில் மிளிர்ந்தது. நன்றி! நன்றி!

No comments:

Post a Comment