பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் - ஒரு காப்பகத்தின் விடுதியில் படிப்பக மேசையில் மதநூலை வைத்துள்ளனர், இந்துச் சிறுமிகளுக்கு மாமிச உணவைத் தருகிறார்கள் என்ற புகாரின் பேரில் அன்னை தெரசா நிறுவிய ஓர் அமைப்பின்மீது மதமாற்ற தடைச்சட்டம் பாய்ந்துள்ளது.
அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட "மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி" என்ற அந்த அமைப்பின் மீது, “இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியது” மற்றும் வதோதரா நகரில் நடத்தப்படும் காப்பகத்தில் உள்ள “இளம் பெண்களை கிறிஸ்தவ மதமாற்றம் செய்ய முயன்றது” என்பனவற்றைக்கூறி குஜராத் மத சுதந்திர சட்டம், 2003 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பகமோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
வதோதரா மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரி மயங்க் திரிவேதியின் புகாரின் அடிப்படையில், மகர்புரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் 9.12.2021 அன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவருடன், மகர்புரா பகுதியில் உள்ள "மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி" நிறுவனத்தால் நடத்தப்படும் சிறுமிகளுக்கான இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
திரிவேதி, காப்பகத்திற்குச் சென்ற போது, "கிறிஸ்தவ மதத்திற்கு இளம் பெண்களை மாற்றும்” நோக்கத்துடன், காப்பகத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ மத நூல்களைப் படிக்கவும், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் “கட்டாயப்படுத்தப்படுவதை” கண்டறிந்தார் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் "அங்குள்ள பார்வையாளர் அறையில் மேசையின்மீது பைபிளை வைத்துள்ளது போன்றவை மூலம் சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிப்பது குற்றம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
"மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி" நிர்வாகம் கட்டாய மதமாற்றம் செய்யவில்லை என மறுத்துள்ள நிலையில், புகாரைப் பெற்ற காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
"மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி"யின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் எந்த மத மாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எங்கள் காப்பகத்தில் 24 பெண்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் எங்களுடன் வாழ்கிறார்கள். நாங்கள் ஜெபித்துப் பாடும்போதும், அதை செய்வதைப் பார்க்கும்போதும் அவர்களும் எங்கள் நடைமுறையைப் பின்பற்றக் கூடும்; நாங்கள் யாரையும் வலு கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை அல்லது யாரையும் கிறிஸ்தவ மதத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவும் இல்லை" என்று கூறியுள்ளார்.
"குழந்தைகள் நலக் குழுவின் புகாரின்படி, இந்த அமைப்பு ஒரு இந்துப் பெண்ணை கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி யதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தங்குமிடங்களில் வசிக்கும் இந்து சிறுமிகளுக்கு மாமிச உணவு வழங்கப் படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. திரிவேதியின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு குழு ஆய்வு செய்த பின்னர், அந்த அமைப்பின் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக" காவல்துறை உதவி ஆணையர் எஸ்.பி. குமாவத் தெரிவித்துள்ளார். "குழந்தைகள் நலக் குழுவின் புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை பல துறைகளின் உறுப்பினர்கள் குழு விசாரித்து, அதைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிப்பார்கள்” என்று குமாவத் கூறியுள்ளார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே! இதே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டம் என்ன? பயிற்சி என்ன? இத்தியாதி.. இத்தியாதி நடவடிக்கைகள் என்ன என்று ஆராய, கண்காணிக்கத் தயாரா?
மதத்தின்மீது கழகத்துக்கென்று ஒரு பார்வை உண்டு என்றாலும், கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் இந்தியத் துணைக் கண்டத்தில் கல்விக் கூடங்களும், மருத்துவ மனைகளும் இந்த அளவு பரவியிருக்குமா?
'கல்வியைக் கொடுக்காதே', 'கர்மவினையால் வியாதி' என்று கதைக்கும் இந்து மதப் போதகர்களுக்கு இந்த வகையில் கிறிஸ்தவ நிறுவனங்கள்மீது காழ்ப்பு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே! அதிகாரம் இருக்கும் காரணத்தால் ஆட்டம் போடலாம் - அது நிலைக்காது! மாமிச உணவு கொடுத்தால் மத மாற்றம் என்று சொல்லும் அளவுக்கு சங்பரிவார்களின் வெறுப்புப் புத்தி புரை ஏறி இருக்கிறது என்பது ஒரு தேசிய அவமானமே!
No comments:
Post a Comment