யாழ்ச்செல்வன்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுவுடமைத் தத்துவத்தின் மூலம் உலகம் முழுதும் நம் ஊரே என்றும், மக்கள் எல்லாம் நம் உறவே என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு கொடையளித்துச் சென்றவன் தமிழன். அந்த தமிழ் நிலத்தில், யார் தமிழன் என் பதை அடையாளம் காண்பதில் பலருக்கு இன்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது! பிறந்த இடத்தின் அடிப்படையில் தமிழனை வரையறுக்க பல்வேறு அமைப்புகள் இன்று முயற்சி செய்துக்கொண்டுள்ளன. இந்த கருத்தியலை சற்றே நீட்டித்துப் பார்த்தால் அது பிறப்பின் அடிப்படையில் தமிழனை வரையறுப்பதையும் ஏற்றுக்கொள்ளும் என்பதில் அய்யமில்லை. அதாவது இது மீண்டும் தமிழனை சனாதன அடிப்படை யில் கூறுபோட எதிர்காலத்தில் உதவும்.
தமிழகத்தை ஆளுவதற்குத் தாங்கள் மட்டுமே தகுதிப் படைத்தவர்கள் என்று, சிலர் பிறந்த இடத்தின் அடிப்படையில் உரிமை கோருகின்றார்கள். இது உண்மை யில் அவர்களுக்கு பல்வேறு சித்தாந்தங் களின் புரிதல் இல்லாமையையும், மேலும் அவர்களால் புதிய கருத்தியல்களை முன் னிறுத்துவதற்கு ஏற்பட்டிருக்கும் வறட்சி யினையும் எடுத்துக்காட்டுகின்றது. இவர் கள் தங்களை கோட்பாடுகளின் அடிப்படை யில் முன்னிலைப் படுத்துவதற்கு இயலா மல், தமிழகத்தின் மாபெரும் ஆளுமை களைப் பின்னிலைப் படுத்துவது மிகவும் வியப்புக்குரியதாகும்.
இவ்வுலகம் மாபெரும் சமூக, பொரு ளாதார, அரசியல், அறிவியல் கருத்தியல் களின் அடிப்படையிலே இயங்குகின்றது. அந்தக் கருத்தியல்களை உருவாக்கி, உள் வாங்கி உலகிற்கு அளித்த பேராளுமை களை, இவ்வுலகம் இடம், மொழி, தேசம், இனம், பிறப்பு என எதன் அடிப்படையிலும் கட்டிப் போடமுடியவில்லை.
மனித இனம் தழைக்க முன்னிறுத் தப்பட்ட சிந்தாந்தங்களே காலத்தை கடந்து மக்களை வழிகாட்டி செல்கின்றது. அந்த சித்தாத்தங்களை வழங்கியவர்கள் இவ்வு லகின் பொதுகாற்றுவெளியில் கரைந்த வர்கள். எல்லை கடந்து மனித இனம் அதை உள்வாங்கி சுவாசித்து தழைத்துக் கொண்டு உள்ளது. அந்த ஆளுமைகள் எந்தக் கருத்தியலுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்தார்கள் என்றும் எந்த அடிமைத்தனத்தை உடைத்தெறிந்தார்கள் என்றும் எந்த புதிய கொள்கைகளை மனித இனம் தழைக்க வழங்கினார்கள் என்பதற் காகவுமே போற்றப்படுகிறார்கள்.
ஆனால் இன்று சிலர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெய லலிதா போன்றவர்கள் தமிழர்கள் இல்லை யென்றும் அவர்கள் இருந்த இடத்திற்கு உண்மையான தமிழன் வரவேண்டும் என்று கூறுகின்றார்கள். இதற்கான கார ணம், அவர்கள் உண்மையான தமிழ் குடியில் / இடத்தில் பிறக்கவில்லை என்ற ஒரு கருத்தியலை மக்களின் முன் நிறுத்து கின்றார்கள். இந்த தலைவர்கள் அனை வருமே தமிழ், தமிழன், தமிழ் நாடு வளம் பெறப் போராடியவர்களே! இவர்கள் அனைவரும் தமிழனின் சமூக, பொரு ளாதார, அரசியல், அறிவியல் வளர்ச்சிக் காகவும் எழுச்சிக்காகவும் தங்களை தமிழகத்தின் பொதுவாழ்வில் கரைத்துக் கொண்டவர்களே. இவர்கள் யாவருக்கும் தாங்கள் தமிழர்கள் என்ற கருத்தியலில் என்றும் அய்யம் ஏற்பட்டதில்லை. இதில் இவர்களுடைய பெற்றோர்களோ, முன்னோர்களோ இன்றைய தமிழகத்தின் எல்லைக்கு அப்பால் பிறந்ததினால், காவேரி நதி நீர் கர்நாடகத்திற்கு சொந்தம் என்றோ, பெரியாறு நதி நீர் கேரளத்திற்கு சொந்தம் என்றோ எண்ணியதுக் கூட கிடையாது. ஆனால் இவர்களெல்லாம் தமிழன் அல்ல என்று கூறும் அளவிற்குச் சில அரசியல் குழுக்கள் கூச்சலிடுகின்றன.
தமிழ்நாடு தமிழருக்கே என்ற கருத்தி யல் மோதல்கள் தமிழகத்தில் ஒரு நூற் றாண்டிற்கு மேற்பட்டது ஆகும்.1938 தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தார். ம.பொ.சிவஞானம் 1946இல், தமிழகத்துக்குத் தன்னுரிமை கோரினார். 1961 செப்டம்பரில் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, மொழிவழித் தேசிய இனங் கள் ஒவ்வொன்றுக்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம் வேண்டும் என்று வாதாடினார். தென் மொழிக் கழகம் சார்பில் தமிழக விடுதலை உரிமை நாள் அறிவித்த பாவலரேறு பெருஞ்சித்தரனார் 1966 இல் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்.
இவர்களின் வேண்டுதல்கள் எல்லாம் தமிழ், தமிழன், தமிழ் நாடு வளம் காண வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்தது. இந்த கருத்தியல்கள் அனைத் துமே பொதுநலம் சார்ந்தவைகள். இவர்கள் யாவருக்கும் தமிழன் யார் என்பதிலோ அல்லது தமிழனை வரையறை செய்வ திலோ எந்த குழப்பமும் ஏற்பட்டதில்லை. ஏனெனில் இங்கே அவர்களின் கோரிக் கைகள் தன்னலம் சார்ந்தது இல்லை. ஆனால் இப்போது கூப்பாடு போடும் குழுக்களோ பசுத்தோல் போர்த்திய புலி களாய், தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு கால மறுமலர்ச்சியை மறைத்து மக்களைத் திசை திருப்பப் பார்ப்பது வியப்பாக உள்ளது.
இவர்களின் எண்ணப்படி சிந்தித்தால், காந்தி குஜராத்தியாகவுமே, அம்பேத்கர் மராத்தியராகவுமே அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காந்தியின் அஹிம்சை நெறி 20-21ஆம் நூற்றாண்டுகளில், எத் தனையோ நாடுகளில் மக்களின் அடிமை தளைகளை உடைத்தெறிந்து, சுதந்திர காற்றை சுவாசிக்க கற்றுக்கொடுத்துக் கொண்டுள்ளது. அம்பேகரினால் வரைய றுக்கப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டம், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதினால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு மட்டுமோ, இல்லை மஹாராஷ் டிராவில் பிறந்ததினால் மராத்திகளுக்கு மட்டுமோ சொந்தமாக இருக்கவில்லை. இந்த மாபெரும் தலைவர் களை பிறப்பு அல்லது பிறப்பிடத்தின் அடிப்படையில் இவ்வுலகம் அடையாளம் காணவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலா கத் தமிழகத்தில் புரையோடிக் கிடந்த சமூக அநீதிகளின் ஆணிவேரை அடி யோடு பெயர்த்த வைரக் கடப்பாரை பெரியார். 17ஆம் நூற்றாண்டின், இத்தாலியின் மறு மலர்ச்சி இயக்கம் போல், 20ஆம் நூற்றாண் டில், தமிழ் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பகுத்தறிவாளன். பெண்ணடிமை, தீண்டாமை, மூடநம்பிக்கை போன்ற வற்றால் சுரண்டப்பட்டுக்கொண் டிருந்த தமிழனை தலைநிமிர செய்த பேராளுமை. கார்ல் மார்க்சின் கம்யூனிசம் போல, பெரியாரின் சமூக, பெண் விடுதலையும், மனித நேயமும். அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ பெரியார் பிறந்திருந் தால், அவர் வாழ்ந்த காலத்திலேயே இவ் வுலகம் இன்னும் ஓர் நூற்றாண்டு சமூக நீதியில் முன்னோக்கி சென்றிருக்கும். அவரது சிந்தனைகளும், சமூக கருத்தியல் களும் மனித நேயம் செழிக்க வழங்கப் பட்டவை. தான் வாழ்ந்த காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்னோக்கி சிந்தித்தவர். ஒவ்வொரு பெண்ணும் ஆணும் மதத்தின், ஜாதியின், குடும்பத்தின்,இடத்தின் பெய ராலோ அறியப்படாமல், அவர்களது சிந்த னைகளாலும், செயல்களாலும் அறியப்பட வேண்டும் என்று சுயமரியாதை உலகிற்க்கு எடுத்தியம்பிய மாபெரும் ஆசான். பெரியார், தமிழ் நாட்டில் பிறந்ததினால் இன்னும் அவர் உலகிற்கு சரியாக அறியப் படவில்லை. தமிழ் இனம், மொழி, பண்பாடு, தமிழ் நாடு காக்க அவரை விட இந்த மூவாயிரம் ஆண்டுகளில் சிறந்த எவர் ஒருவரும் தோன்றவில்லை.அவரை இன்று தமிழனா, இல்லையா என்று ஏதோ சில குழுக்கள் பிதற்றுவது, சிந்தை இல்லாத வர்களின் விந்தையே.
ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனநாயகத்தை வரையறுத்தவர். கறுப்பர் களுக்கு, வெள்ளையின மக்களிடையே தன்மானம் பெற்றுத்தந்தவர். அனைவ ராலும் அமெரிக்காவின் அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டவர். அவரின் வெற்றிக்கு காரணம் அவர் முன்னிறுத்தியே கொள்கை களே ஆகும். அவர்களது முன்னோர்கள் அயர்லாந்திலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறினார்கள் என்ப தற்காக, அமெ ரிக்கா அவரை கொண்டாட மறுத்தோ, அல்லது அவர் அமெரிக்கர் இல்லை என்றோ ஒருபோதும் சிந்தித்தது இல்லை. புதிய கான்செர்வ்டி கட்சியை வடிவமைத்து, 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பிரதமர் ஆனவர் பெஞ்சமின் டிஸ்ரேலி. அவரது முன்னோர்கள் ஸ்பெயினில் பிறந் தார்கள் என்பதற்காகவோ அல்லது அவர் (யூதர்கள் வகுப்பில் பிறந்திருந்தாலும்) கத் தோலிக்க மதத்தை சாராதவர் என்பதற்கா கவோ அவரை மக்கள் ஒதுக்கிவிடவில்லை.
இன்று உலகம் முதலாளித்துவம், பொது வுடைமை கொள்கைகளின் அடிப்படை யில் இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக் கின்றது. இந்த கருத்தியல்களை உலகுக்கு அளித்தவர்கள் ஆடம் ஸ்மித் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். இதனைடிப்படையில் மக்களாட்சியும், கம்யூனிசமும் உலகை இயக்குகின்றன. ஆனால் இவர்கள் இங் கிலாந்திலும், ஜெர்மனியிலும் பிறந்தார்கள் என்பதற்காக இவர்களது கொள்கைகளை மற்ற நாடுகள் பின்பற்றவில்லையா? இவர் களை, உலகம் பிறந்த இடத்தினாலோ, மொழியாலோ, தேசத்தினாலோ கட்டி போடவில்லை.
அயர்லாந்தின் குளிர்பிரதேசத்தில் குட் ஜெப்பர்ட் என்ற ஊரில் பிறந்து, இடையன் குடியில் சுட்டெரிக்கும் வெயிலிலும், தகிக் கும் மணல்வெளிகளிலும் நடந்து, அனல் வீசுகின்ற கடல்காற்றில் தனது 58 வருடங் களை கழித்த கால்டுவெலை தமிழன் என்று கொண்டாடுவதில் பெரு மையா? இல்லை ஒதுக்கித் தள்ளுவதில் மகிமையா? அவர் இல்லையென்றால் தமிழுக்குத்தான் ஒப்பீட்டு இலக்கணம் கிடைத்திருக்குமா? பேய்களின் மொழி என்று பேசப்பட்டு வந்த தமிழ்தான் தன் னிலை அறிந்திருக்குமா? தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் என்றும், சமஸ்கிருதத்தின் வேரிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் திராவிடக் கருத் தியலை இமயத்தில் ஏற்றி இம் மண்ணில் புதைந்துபோனவர். இதன் மூலம் முகில் கிழித்து வெளிப்படும் நிலவென அய்ரோப் பாவில், தமிழ் இனத்தின் மீதி ருந்த காரி ருளை போக்கியவர்.
இத்தாலியில் பிறந்து, இங்கு வாழ்ந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமா முனிவரை என்னவென்று சொல்ல முடியும்! இன்னும் எத்தனையோ தமிழ் ஆசான்கள், ஆளுமைகள்.
கர்நாடகாவில், குடகு மலையில் தோன்றுவதினால், காவிரியின் மீது தமிழன் உரிமை கொண்டாட வில்லையா? இல்லை கேரளாவில் தோன்றும் பெரியாறு நதிதான் கேரளவிற்கே சொந்தம் என்று நாம் ஒதுக்கிவிட முடியுமா? இங்கே தோன்றிய இடங்களை வைத்து நாம் சொந்தம் கொண் டாடாமல் இருக்க முடியாது! அந்நதிகள் தமிழகத்தையும், தமிழனையும் வளம் கொழிக்க வைப்பதால், அதன் மீதுள்ள உரிமையை நம்மால் எப்போதுமே விட்டுக் கொடுக்க முடியவில்லை.
தமிழன் யார் என்பது பிறப்பின் அடிப் படையிலோ, பிறந்த இடத்தின் அடிப் படையிலோ,ஜாதியின் அடிப்படையிலோ, தாய்மொழியின் அடிப்படையிலோ இருக்க முடியாது, இருக்கக் கூடாது; அப்படி வரையறுப்பது பல்லாயிரம் ஆண்டு தமிழ்ப் பண்பாட்டுக்கே இழுக்கு. கண் காணாத இடத்தில் பிறந்து கடல் கடந்து வந்து தமிழ் மொழியின் மேல் காதல் கொண்டு தாங்கள் வந்த கடமையையும் மறந்து தங்கள் வாழ்வையே தமிழுக்காக ஈந்த பெருந்தகைகள் பலருண்டு. அவர் களைத் தமிழர் அல்ல என்று கூறுவது நமக்குத்தான் இழுக்கு. அல்லது இதே தமிழ் மண்ணில் தோன்றி, தாய்மொழி வேறாக இருந்தாலும் தமிழுக்கு அளவில்லாத் தொண்டு செய்த நல்லோர்களும் பல ருண்டு. அவர்களைத்தான் தமிழர் அல்ல என்று கூற முடியுமா? அல்லது இலக்கணக் கொத்து என்ற நூலில் அதன் ஆசிரியர், தமிழிலேயே “அய்ந்தெழுத்தால் ஒரு பாடை யென்று அறையவும் நாணுவர் அறிவுடை யோரே” என்று தமிழை இகழ்ந்தாரே அவ ரைத்தான் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எனில் தமிழர் என்போர் யார்?
தமிழ் மொழியின் சிறப்பையும், தொன்மையையும் கொண்டே தமிழன் என்பவன் யார் என வரையறுக்க வேண்டும். தமிழின் தொன்மையையும் சிறப்பையும் அதன் உயர் தனிச் செம்மொழி நிலையையும் மறுக்கும் யாரும் தமிழர் என்று ஏற்க முடியாது.
தேவபாஷை என்றும், நீச பாஷை என்றும், எம்மொழியையும்விட தமிழ் தாழ்ந்தது என்று கூறுவோரும் தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் நலம் கருதுவோர் அல்ல.
இதற்கு மாறானவர்கள் அவர் எங்கு பிறப்பினும் எம்மொழி பேசினும், தமிழர் என்று கருதுவோமாக.
பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரது தகுதியை, திறமையை, பண்பை முடிவு செய்யும் இழிசெயலைத் தமிழ் ஒருபோதும் ஏற்காது. எனவே, பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவரைத் தமிழர் என்று கூறுவது தமிழ் மொழிக்கே எதிரானதாகும்.
தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் தமிழ் நாட்டின் வளமைக்காகவும் பாடு பட்டவர்களும், பாடுபடுகின்றவர்களும், பாடுபடபோகின்றவர்களும் தமிழர்களே! அரசியல் ஆதாயங்களுக்காக தமிழனை ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாது. அடையாளங்கள் கருத்தியலின் அடிப் படையில் மட்டுமே அமையட்டும்.
No comments:
Post a Comment