படித்தவர் பகிர்கிறார் - ஒரு வரலாற்று ஆவணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 18, 2021

படித்தவர் பகிர்கிறார் - ஒரு வரலாற்று ஆவணம்

பொ.நாகராஜன் சென்னை.

 கீதையின் மறுபக்கம் -  ஆசிரியர் கி. வீரமணி - 

திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 416 - நன்கொடை ரூ.90/

*  இந்தியாவில், பார்ப்பனர்களின் சூழ்ச்சியாலும் அவர்கள் ஆதரவு அரசர்களாலும் புத்த மதம் வீழ்ச்சியடைந்தது. ஆனால் ஏற்கெனவே சாங்கிய கொள்கை கொண்ட பல ஆசிரியர்களால், அன்றைய மக்களிடையே பொருள்முதல்வாதப் பாதை உருவாக்கப்பட்டிருந்தது.

* மநு, வாத்ஸ்யாயனார், பராசரர் போன்றோர் அந்த பாதையை மாற்ற முயற்சித்தும் முடியாமல் போனது. அதனால், சாங்கிய கோட்பாடுகளை கொண்ட அறிவாளிகளை தங்கள்பால் ஈர்ப்பதற்காக, பார்ப்பனர்கள் தங்கள் புனித நூல்களில் திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்ய துவங்கினார்கள்!

* புத்த, சமண, சாங்கிய கொள்கைகளை கொண்ட அறிஞர்கள், இந்தியர்களின் இழிநிலைக்கு தீர்வு பார்ப்பன எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களை திருப்திப் படுத்தும் வகையில் புதிய கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டுமென பார்ப்பனர்கள் தீர்மானித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று கட்டாயம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டது. அந்த கட்டாயத்தில் பிறந்ததுதான் பகவத் கீதை!

* பகவத்கீதை - இந்துக்களின் வேதமாக கருதப்படும் நூல் ! உலகின் எல்லா உயிர்களையும் தாமே படைத்ததாகவும் தாமே அழிப்பதாகவும் பறைசாற்றும் பகவான் அருளியதாக கூறப்படும் நூல் ! கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே ...என ஒருபூர்ஷ்வாவைப் போல அறிவிக்கும் நூல்! “எனது உண்மையான சுய உருவத்தை பக்தியொன்றினால் தான் அறிய முடியும். அவ்வாறு அறிந்தவனே விரைவில் என்னுடன் ஒன்றுபடுகிறான் “..என ஆசை வார்த்தைகள் கூறும் நூல் !

* உண்மையில், பகவத்கீதை பிராமணர்களையும் பிராமணீயத்தையும் போற்றுவதற்காகவும், வர்ணாசிரமத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதே அவர்களின் தர்மமும் - கர்மமும் ஆகும் என மூளைச்சலவை செய்வதற்காகவே படைக்கப்பட்ட நூல் !

* மொத்தத்தில் இது, முப்புரி நூலை புனிதமாக்க -  புனித நூலாக படைக்கப் பட்டது!

* கீதையின் மறுபக்கம் நூலை ஆசிரியர் கி.வீரமணி, நீண்ட ஆய்வுக்குப் பிறகு கீதையின் பல்வேறு படைப்புகளை படித்து, யாரும் முயற்சி செய்ய முன்வராத ஆய்வை மேற்கொண்டு இந்த நூலை, 1998 பிப்ரவரியில் முதன்முறையாக வெளியிட்டார். அதன் பின்னர் இந்த நூல் பல பதிப்புகளை கண்டு, உலகெங்குமுள்ள தமிழர்களால் வாசிக்கப்பட்டு, பலரால் பேசப்பட்டு, தற்போது மக்கள் பதிப்பாக வலம் வருகின்றது. பெரியாரின் பகுத்தறிவு கொள்கைக்கு இது உரமாக அமைந்துள்ளது.

* இந்த நூலிலுள்ள தொகுப்புகளின் தலைப்புகள், ஆசிரியர் வீரமணியின் ஆய்வையும் உழைப்பையும் ஆதாரங் களையும் அவைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அவரது ஆர்வத்தையும் விளக்குகிறது-

1) பாரதம் நடந்த கதையா ?

2) கீதையின் காலம்.

3) அவதாரப் புரட்டு.

4) கிருஷ்ணன் - எத்தனை கிருஷ்ணனடா!

5) வர்ணப் படைப்பு.

6) வர்ணக்காப்பே கீதையின் நோக்கம்.

7) கலப்பு மணத்திற்கு கீதை எதிர்ப்பு.

8) கீதையும் - ஆத்மாவும்.

9) கீதையில் கர்மா - தர்மா.

10) கீதை ஒரு கொலை நூல்தான்.

11) தமிழிலக்கியத்தில் கீதையின் இடம்.

12) கீதையும் - அறிவியலும்.

13) ஒன்றுபட்ட இந்தியா - கிருஷ்ணனாலா?

14) கிருஷ்ணன் - ஒரு கபட வேடதாரி.

15) முரண்பட்ட பண்பாடுகள்.

16) நியாயமான கேள்விகள்.

17) கீதையின் முரண்பாடுகள்.

18) கீதை பற்றி விவேகானந்தர்.

19) விநோதக் கருத்துக்கள்.

20) கீதை போதனையாளர்களுக்கு.

21) கொல்லைப்புற வழியில் பார்ப்பனியப் புகுத்தல்.

22) கீதை கூறும் கர்மயோகம் ஏற்புடையதா?

23) ஆத்மாவும் அறிவியலும்.

24) ஆத்மன் - யான் - ஆத்மா எனும் பொருளற்றவை.

25) ஆத்மா !

26) பின்னிணைப்புகள் (எட்டு தலைப்புகள்)

* கீதை சொல்வது என்ன ?

சாதுர் வர்ணம் மயாசிருஷ்டம் கர்ம விபாகச தஸ்ம கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தார - மவ்யயம் “... (அத்யாயம் 4 - சுலோகம் 13)

* நான்கு வருணங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை! அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும்! அதனை மாற்றி செயல்பட வைக்க அந்த  வர்ணதர்மம் - அதாவது ஜாதியையும் அதன் அடுக்குகளையும் உண்டாக்கியவன் பகவானே அல்லது கடவுளே என்பதை கீதை உலகுக்கு சொல்கிறது! அதனால் தான் கீதை பிராமணர்களையும் பிராமணீயத்தையும் காப்பதற்காகவே படைக்கப்பட்டது என ஆசிரியர் வீரமணி இந்த நூலில் பல இடங்களில் தெரிவிக்கின்றார்!

* வர்ணாசிரமக் கோட்பாட்டினை அப்படியே அப்பட்டமாக பாதுகாக்கும் அரணாக கீதை அமைந்துள்ள காரணத்தினால் தான் அதற்கு இத்தனை மவுசு, மரியாதை, பிரச்சாரம், பாதுகாப்பு, புகழ் எல்லாமே !

* கீதையை தலையில் வைத்து கொண்டாடும் இந்த நாட்டில், ஜாதியை ஒழித்துவிட முடியுமா ? இந்த கீதையைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க ஆர்எஸ்எஸ்ஸும் அதன் பரிவாரங்களும் மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. கீதையை படித்து பார்க்காதவனும் கீதைக்காக வக்காலத்து வாங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை !

* வர்ணாசிரமக் கொள்கையை பாதுகாக்கும் கீதையின் மறுபக்கத்தை ஆதாரங்களோடு வெளிக்கொணர்ந்த அய்யா ஆசிரியர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவரது 89ஆவது  பிறந்த நாள் (02.12.2021) கொண்டாடப்படும் வேளையில், அவரது இந்த நூலின் அறிமுகவுரையையே அவருக்கும் பகுத்தறிவுவாதிகளுக்கும் பிறந்த நாள் பரிசாக வழங்குகிறேன் !

No comments:

Post a Comment