வைர விழாவை கடந்து பகுத்தறிவு தேர் இழுக்கும் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 17, 2021

வைர விழாவை கடந்து பகுத்தறிவு தேர் இழுக்கும் கி.வீரமணி

திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த தி.மு.. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும் அதே பிடிப்புடன் அதே வீச்சுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் இருக்கிறார்.

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது 89ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் தொடங்கிய இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்றைக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு, வருணாசிரமத்துக்கு எதிரான குரல் என்று செயல்பாட்டில் இருக்கிறார்.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அறிஞர் அண்ணா - "திராவிட முன்னேற்றக் கழகம்" தொடங்கியபோது, அரசியல் வாய்ப்புக்காக தி..வில் இருந்து பலரும் அண்ணாவுடன் சென்றார்கள். பெரியாரின் தளபதிகளில் ஒருவராக அரசியலில் நுழைந்த கி.வீரமணி, அப்படி செல்லாமல் பெரியாரின் தளபதியாகவே இருந்தார். பெரியாருக்குப்பின், இன்றும் அவர் பெரியாரின் தளபதியாகவே தொடர்கிறார். ஆனாலும், தாய்க் கழகத்தில் இருந்து சென்ற தி.மு.. சகோதரர்களுடன் இணக்கமாக இருந்தார். இணக்கமாக இருக்கிறார்.

கடலூர் பழையபட்டினத்தில் கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதிக்கு 3ஆவது மகனாக டிசம்பர் 2, 1933ஆம் ஆண்டு பிறந்தவர் கி.வீரமணி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சாரங்கபாணி. கி.வீரமணியின் பள்ளித் தோழனாக அறிமுகமான முருகேசன்தான் பின்னாளில் தமிழ் நவீன இலக்கியத்தின் கம்பீர முகமான எழுத்தாளர் ஜெயகாந்தன்.

பள்ளியில் படிக்கும்போது திராவிட மணி என்ற ஆசிரியர்தான் சாரங்கபாணி என்ற பெயரை வீரமணி என்று மாற்றினார். ஆசிரியரின் மூலம் அரசியலை அறிமுகம் செய்துகொண்ட கி.வீரமணி திராவிட அரசியல் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கினார். தனது 11ஆவது வயதில் 1944இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

கி.வீரமணி அரசியல் வாய்ப்புக்காக அறிஞர் அண்ணாவுடன் செல்லாமல் பெரியார் உடன் இருந்தார். அதுமட்டுமில்லாமல், அப்போது பெரியாரை ஆதரித்து அண்ணாவை கடுமையாக விமர்சித்துப் பேசியது இன்றும் நினைவுகூரப்படுகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச, எழுத, வாதாடும் திறன்மிக்க கி.வீரமணி 29 வயதில் விடுதலை நாளிதழின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இன்று தி.. சார்பில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளுக்கு அவர்தான் ஆசிரியர். திராவிடர் கழகத்தினரும் தி.மு..வினரும் திராவிட இயக்க ஆதரவாளர்களும் அவரை அன்புடன் ஆசிரியர் என்றே அழைக்கின்றனர்.

பகுத்தறிவு, ஜாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி பெரியாரால் 1944ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிடர் கழகம். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழகத் தேரை வைரவிழா ஆண்டைத் தாண்டி இன்றுவரை இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறார். இதுவே பெரிய சாதனைதான். திராவிடர் கழகத்தை அவருடைய குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து பெரியாரின் வழியில் பயணித்து வந்திருக்கிறார். பெரியாரின் வழியில் பயணிப்பது என்பது அவ்வளவு சுலபமானதில்லை. ஏனென்றால், அது அரசு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை நோக்கம் கொள்ளாத சமூக சீர்திருத்தத்துக்கான பாதை. அது ஒரு கடுமையான பாதை. அதில் தொடர்ந்து பயணிப்பதால் பெரிய அளவில் ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியாது. ஆனால், அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த பாதையில் கி.வீரமணி வெற்றிகரமாகவே பயணித்து வந்துள்ளார். ஆனால், திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த அதே வீரியத்துடன் இருக்கிறதா என்பது விமர்சனத்துக்குட்பட்டதுதான்.

திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த தி.மு.. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும் அதே பிடிப்புடன் அதே வீச்சுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் இருக்கிறார்.

'வீமீ தமிழ்' - 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையத்திலிருந்து

நமது குறிப்பு: கட்டுரைக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் இக்கட்டுரையில் இடம் பெற்ற இரண்டு கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

(1) "திராவிடர் கழகத்தை ஆசிரியர் வீரமணி அவர்களின் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும்..." என்ற வரிக்கு நமது பதில்:

திராவிடர் கழகம் என்பது பணமும், நிலமும், உடைமைகளும் நிறைந்த தனியார் சொத்து என்பது போலவும், அதனைக் குடும்பச் சொத்தாக ஆக்கப்பட்டதாகவும் கூறுவது அடிப்படையில் பிழையாகும்.

திராவிடர் கழகம் என்பது தந்தை பெரியார் கொள்கை, இலட்சியம் இவற்றைப் பிரச்சாரம் செய்வதும், தேவைப்படும் பொழுதெல்லாம் களப் போராட்டங்களை நடத்துவதுமான ஒரு சமூகப் புரட்சி இயக்கமாகும்.

இதனைக் குடும்பச் சொத்தாக ஆக்குவது என்ற பிரச்சினை எங்கே எழுகிறது? திராவிடர் கழகம் என்பது குடும்பம் குடும்பமாக - வாழையடி வாழையாகக் கொள்கைகளை ஏற்று அதன்படி வாழும் நெறிமுறையைக் கொண்டதாகும்.

கொள்கைதான் அதன் சொத்து - இதனை யாரும் தன்வயப்படுத்த முடியாது என்பது கல்லின் மேல் எழுத்து. அதே நேரத்தில் முழுமையாகக் கழகத்திற்குப் பயன்பட ஒருவர் முன்வரும்போது, அவரைப் பயன்படுத்திக் கொள்வதுதான் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகத் துரத்தி விட முடியாது. இயக்கத்திற்குக் கொள்கை சார்ந்து பணியாற்றிட யார் முன் வந்தாலும் இரு கரம் அணைத்து வரவேற்பதுதான் புத்திசாலித்தனமும் இயக்க வளர்ச்சிக்கான அணுகுமுறையுமாகும்.

(2) "திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த அதே வீரியத்துடன் இருக்கிறதா என்பது விமர்சனத்துக்குட்பட்டது தான்" என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

எந்தப் பிரச்சினையில் வீரியம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. பிரச்சாரம் - போராட்டம் என்ற இரு அணுகுமுறைகளைக் கொண்டது திராவிடர் கழகம். தமிழ்நாட்டில் அதிக நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யக்கூடிய தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். தேவையும் அவசியமும் ஏற்படும் பொழுதெல்லாம் களத்தில் நின்று போராடுவதும் அதன் வழமையான ஒன்றாகும்.

குறிப்பாக தந்தை பெரியார் காலத்தில் 49 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு - தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைக் கொள்கை மீது உரமாக நின்று 69 விழுக்காடாக உயர்த்தியதில் அதன் பங்கு அசாதாரணமானது. மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இன்று அகில இந்திய அளவில் கிடைத்துள்ளது என்றால், அதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் நடத்தி வெற்றி கண்டது மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையிலான திராவிடர் கழகம்.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்துக் களத்தில் நின்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் பிரச்சினைக்காக திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி, வெற்றி பெறவில்லையா?

தந்தை பெரியார் பிறந்த நாளினை சமூக நீதி நாளாக அறிவித்தது - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி என்றாலும் - இந்த சாதனைக்கு அருகில் இருந்தது திராவிடர் கழகம் இல்லையா?

உலகம் முழுவதும் தந்தை பெரியார் கொள்கையைப் பரப்பிட பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டதில் திராவிடர் கழகத் தலைவரின் முக்கியப் பங்கு இல்லையா?

4 பக்கங்களாக இருந்த விடுதலை 8 பக்கங்களாகவும், சென்னையில் மட்டும் பதிப்பிக்கப்பட்ட விடுதலை இப்பொழுது கூடுதலாக திருச்சியிலிருந்து வெளிவருவதும் ஏராளமான இயக்க வெளியீடுகள் வந்து கொண்டே இருப்பதும் இயக்கத்தின் வீரியமானவையல்லவா?

எந்த வகையிலும் வீரியம் குறைந்துப் போய் விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் வீரியம் மேலும் ஊக்கமுடன் வீரியமடைந்துள்ளது என்பதுதான் உண்மை.

- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்,

17.12.2021

No comments:

Post a Comment