- கவிஞர் கலி.பூங்குன்றன்
எண்ணிப் பார்த்தால்
தலை சுற்றுகிறது!
தந்தை பெரியாருக்குப்பின் - அவர்
தாடி நிழலில் பயணித்த
சிறுவன், மாணவன், மானவீரன்
வீரமணி என்னும் விருட்சவேர் - கை
வீசி நடக்காதிருந்திருந்தால்
கழகத்தின் கம்பீரம்
இயக்கத்தின் பரிணாமம்
'விடுதலை'யின் வேல்வீச்சு
எப்படி இருந்திருக்கும்?
எண்ணிப் பார்ப்போம் ஒரு கணம்!
நினைக்கவே நெஞ்சு
பட படக்கிறது
குருதி ஓட்டம்கூட
கொஞ்ச நேரம் செருமுகிறது
இனமானத் தீயின்
எரிமலை வெப்பமும்
பகுத்தறிவுப் புயற்காற்றின்
பாய்ந்தெழும் திட்பமும்
சமூகநீதிக் கொடியின்
சாதனை உச்சமும்
பெண்ணுரிமைப் பேரிகையின்
பீரங்கி முழக்கமும்
பூணூல் ஆதிக்க
வாலினை நறுக்கிட
புறப்பட்டு நிற்கும்
புத்தாக்க நூல்களும்
கல்வி நிறுவனங்களாம்
கவினுறு சோலைகள்
குலுங்கச் சிரிக்கும்
குளுமையில் குழைத்த
கோல நிலா போன்று
ஏற்றம் பெற்றிருக்குமா?
இளைத்துப் போயிருக்குமா?
எண்ணிப் பார்த்தால்
தலைசுற்றுகிறது
இதய ஓட்டமும்
நிற்கிறது ஒரு கணம்!
அய்யா பெரியாரின்
நெஞ்சில் தைத்த முள்ளினை
அகற்றிய காட்சி யையும்
ஆசிரியர் பார்த்து விட்டார்
அறிவாசான் பிறந்த நாளை
ஆட்சி மன்றம் ஏறிய
அவர் இளவல் மு.க.ஸ்டாலின்
அறிவித்த நேர்த்தியினை
அடடே பார்த்துவிட்டார்
ஆமாம், இளமையாக்கினார்
அவர் இளவல் மு.க.ஸ்டாலின்
சமூகநீதிக்கான சரித்திர
நாயகரின் ஆயுள் நீள்கவே!
அதிசய மனிதர்
ஆசிரியர் பெருந்தகை!
படித்த படிப்பைக்
கூவி விற்கவில்லை
பணத்தின் கத்தையைப்
பையில் நிரப்பவில்லை
கூவிக் கூவி அழைத்ததெல்லாம்
கூடி நிற்கும் மக்களைத்தான்
பேசிப் பேசி பொழிந்ததெல்லாம்
பெரியார் கொள்கைப் பயிரின்
மகசூலைப் பார்த்திடத்தான்!
வாரீர் தோழர்காள்
வாரீர், வாரீர்!
வாழ்த்திட வயது வேண்டாம்
வாய்மைப் போருக்கு ழைக்கும்
வற்றா மனம் போதும்
வருத்தம் பாராது சுமக்கும்-
தோள்கள் நமக்குண்டு
துடிக்கும் புதுரத்த வரவுண்டு
இலட்சிய முனை ஏறும்
ஈட்டி முனைகள் ஈங்குண்டு
இனி என்ன பயம் - அய்யம்?
நூற்றாண்டு விழா மேடையில்
நின்று குரல் கொடுப்பார்
நின்ற சொல்லர்
நீங்கா மனங் கொண்ட
நம் தலைவர் வீரமணி
வாழிய வாழியவே!
No comments:
Post a Comment