- கவிப்பேரரசு வைரமுத்து
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் படைத்துத் தொகுத்திருக்கும் இந்த வாழ்வியல் சிந்தனைகள் வாழும் தலைமுறைக்கும் வருகின்ற தலைமுறைக்கும் வாய்த்த பேரறிவுப் பெட்டகமாகும்.
இந்நூலின் உள்ளடக்கம் என்பது பரந்துபட்டது; ஒரு வட்டத்துக்குள் நில்லாதது; ஆனால், பகுத்தறிவின் கண்கொண்டு உலகு பார்ப்பது.
ஒரு நூல் என்பது ஏதுக்கு?
ஒரு படைப்பாளன் தன் கலைத் திறனையும் கட்டுரை வண்மையையும் காட்டுதற்கன்று. மண் பயனுறுவதற்கு; மானுடம் மேம்படுவதற்கு; அறிவின் வழியும் அன்பின் வழியும் வாழ்வை வழி நடத்துவதற்கு. இந்தக் குறிக்கோள்களை இந்த நூலில் உள்ள அத்துணை கட்டுரைகளும் நிறைவேற்றுகின்றன.
மெய்ப்பயன் தாராத எள்ளளவு எழுத்தும் இந்தத் தொகுதிகளில் இல்லை. உடல் குறித்தும், உள்ளம் குறித்தும், மருத்துவம் குறித்தும், மானுடம் குறித்தும், இலக்கியம் குறித்தும், இயக்கம் குறித்தும், தொழில்நுட்பத்தின் நன்மை குறித்தும், தீமை குறித்தும், வெந்நீர் குறித்தும், தேநீர் குறித்தும், அய்யா குறித்தும், அண்ணா குறித்தும், கலைஞர் குறித்தும், கவிதை குறித்தும், உலகியல் குறித்தும், உலக அறிவு குறித்தும், இத்தொகுப்புகள் தொடாத துறையில்லை; தொட்டதில் குறையில்லை.
தனது பகுத்தறிவு, பட்டறிவு, நூலறிவு, நுண்ணறிவு, கலையறிவு, கல்வியறிவு, பேருலகு சுற்றிய பேரறிவு எல்லாவற்றையும் திரட்டி, பருகுங்கள் தமிழர்களே என்று வாரி வழங்கியிருக்கிறார் பகுத்தறிவுப் பேராசான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது போல் 'யான் பெற்ற அறிவு பெறுக இத்தமிழ் உலகம்' என்று கொட்டிக் குவித்திருக்கிறார்.
வாழ்வைச் செம்மை செய்யும் உண்மைகளால் வாழ்வியல் வழிகாட்டியாகிறார் ஆசிரியர்.
இவர் திராவிடர் கழகத் தலைவராயிற்றே என்று சற்றே தள்ளிச் செல்கிறவர்களையும் தழுவிக்கொண்டு அன்போடு அறிவூட்டுகின்றன இந்த வாழ்வியல் சிந்தனைகள்.
ஆசிரியர் மீது எனக்கு எப்போதும் மதிப்பும் வியப்பும் உண்டு. மதிப்பு ஏனெனில், இழந்த பெரியாரைச் சொல்லாலும் செயலாலும் தொடர்ச்சியான உழைப்பாலும் பாடுபட்டு ஈடுகட்டும் அஞ்சாத பெருவாழ்வு. வியப்பு ஏனெனில், அவரது ஓயாத் தொண்டு; உற்சாக உழைப்பு; அன்றாட விறுவிறுப்பு; அணில் வாலின் சுறுசுறுப்பு; எதற்கும் ஆதாரம் காட்டும் அகன்ற அறிவு; நீண்டு கொண்டே வரும் நினைவாற்றல்; தன் உடலை வென்று ஓடிக் கொண்டேயிருக்கும் ஓட்டம்; தன் மனத்தை வென்று களத்தில் நிற்கும் வீரம்; வீழாத பகுத்தறிவு; தாழாத தன்மானம்.
இவர் ஒரு தீராத திராவிடர் நூலகம். அந்த நூலகத்தின் ஒரு சிறுபகுதிதான் இந்த வாழ்வியல் சிந்தனைகள் என்ற வற்றாத நூல்.
ஒரு பருந்துப் பார்வையில் இந்த நூலை நான் கடந்த போது, நான் கண்டு தெளிந்தவை பல. நம்பிக்கையூட்டுதல், நல்வழிகாட்டுதல், அன்பு பேணுதல், அறிவையே தொழுதல், சக மானுடர் மீது சகோதரநேசம், எழுத்தறிவு குறைந்தவர்க்கும் புரியும் எளிய நடை என்று பயனுள்ள நிலைப்பாட்டில் பயணம் செய்கிறது இந்நூல்.
ஒரே ஓர் எடுத்துக்காட்டுச் சொல்வது உகந்தது.
பிரேசில் எழுத்தாளர் பாலோ கொய்லோ எழுதிய ‘The Alchemist’ என்னும் நூல் வெளிவந்த போது - மூன்று வாரத்தில் ஒரு பிரதி விற்றதாம். இரண்டாம் பிரதி விற்க 6 மாதம் ஆயிற்றாம். தளரவில்லை பாலோ கொய்லோ. சகிப்புத் தன்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை என்ற மூன்றும் கொண்டு நூலை அவர் முட்டித் தள்ள - காலப் போக்கில் 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 23 கோடிப் படிகள் விற்பனை ஆயிற்றாம். இந்தப் பெருமையைச் சொல்லிச் சொல்லி தொய்ந்து கிடந்த மனங்களைத் தூக்கி நிறுத்துகிறார் ஆசிரியர் கி.வீரமணி. இதுபோன்ற செய்திகள் இந்நூலில் குவிந்து கிடக்கின்றன.
நூல் வாசிப்பு குறித்து ஆசிரியரின் அறிவுத் தாகம் அடங்காதது. அண்மையில் இந்த உலகத்தின் பார்வையைத் தன்மீது திருப்பியவர் வரலாற்றுப் பேராசிரியர் யுவல் நோவா ஹராரி. அவர் எழுதிய 'சேப்பியன்ஸ்' என்னும் மனித குலத்தின் வரலாற்று நூலையும், "21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்" என்னும் நூலையும் தமிழர்களுக்கு ஆசையோடு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
உலகப் பேராசிரியரை அறிமுகப்படுத்திய கையோடு உள்ளூர்ப் பேராசிரியரையும் அறிமுகப்படுத்துகிறார். ஆய்வறிஞர் தொ.பரமசிவனை, 'தமிழ் ஆராய்ச்சி உலகின் தன்னேரில்லாத பேராசிரியர்' என்று பெருமை செய்கிறார்.
இதில் நான் பெரிதும் நெகிழ்ந்தது கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் தமிழ் அடையாளமாக விளங்கிய தா.பாண்டியன் எழுதிய 'நினைத்துப் பார்க்கிறேன்' என்னும் நூலை அவர் மேற்கோள்காட்டிய மேம்பாட்டைத்தான். சிவப்புச் சிந்தனை உலகத்தில் நான் பெரிதும் மதிக்கும் தா.பாண்டியன் அவர்களை உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடியிருக்கும் ஆசிரியருக்கு நன்றி.
இவ்வண்ணம் உலக அறிவையும் உள்ளூர் அறிவையும் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்த் தேடித்தேடித் திளைப்பதற்கும், திரட்டியதைப் பந்தி வைப்பதற்கும் பேரறிவும் பெருவிருப்பமும் வேண்டும்; இரண்டும் வாய்த்திருக்கின்றன அருமை ஆசிரியருக்கு.
இந்தப் பகுத்தறிவுப் பெருமகனைப் பாராட்டிப் பாராட்டி நாம் பாதுகாக்க வேண்டும். ஆசிரியர் கி.வீரமணி வாராது போல் வந்த மாமணி.
மறைந்த பிறகும் அண்ணாவாய் வாழ்வதற்குக் கலைஞர் கிடைத்தார்; பெரியாராய் வாழ்வதற்கு ஆசிரியர் கி.வீரமணி கிடைத்தார். இந்த இரண்டு பெருமக்களும் பெரியார் - அண்ணா நீட்சிக்குக் கிடைத்த பெருங்கொடைகள். இந்த இருபெரும் தலைவர்களும் தத்தம் தலைவர்களை நிரப்பப் பிறந்தவர்கள்.
ஆசிரியர் கி.வீரமணி இல்லையென்றால் பெரியார் இவ்வளவு நீளமாக நினைக்கப்பட்டிருப்பாரா என்கிற கேள்விதான் கி.வீரமணி அவர்களின் கீர்த்தி.
திராவிடப் பேரியக்கப் பெருவரலாற்றில் ஒரு பங்குதாரராகவும், பல நேரங்களில் பாத்திரமாகவும் விளங்குகிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரைத் தட்டிப் பார்த்தால் திராவிட இயக்கத்தின் வரலாற்று ஓசை கேட்கும். சற்றொப்ப ஒரு நூற்றாண்டுச் சம்பவங்கள் உருண்டோடி வரும். அவர் தாங்கும் தழும்புகளையும், வரலாற்று வடுக்களையும், ஆறாத காயங்களையும், அணையாத நெருப்பையும் அவரது கருப்புச் சட்டை காக்கிறது.
அவர் நீண்டகாலம் நின்று நிலவ வேண்டும். பகுத்தறிவும் தன்மானமும் அவர்க்கு இரு கண்கள். இயக்கம் அவரது உடல்; பெரியார் அவர் உயிர். அவர் வாழ்வியல் சிந்தனைகள் தொடர்வதற்கு அவர் வாழ்வு தொடரவேண்டும்; அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
No comments:
Post a Comment