ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை
சென்னை, டிச.1 தந்தை பெரியார் அவர்கள் அரசமைப் புச் சட்டத்தைக் கொளுத்தியது - அரசமைப்புச் சட் டத்தை அவமதிக்க அல்ல; நம்மை அவமதிப்பதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம்
ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள்
26.11.2021 அன்று காணொலிமூலம் நடைபெற்ற ‘‘ஜாதி - தீண்டாமை ஒழிப்பு- ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள்’’ கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்க அல்ல; நம்மை அவமதிப்பதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே!
அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தவேண்டும் என்று தந்தை பெரியார் கொளுத்தியது, அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்க அல்ல. நம்மை அவமதிப்பதிலிருந்து காப்பாற்றிக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்துகொள்ளவே என்ற கருத்தைச் சொன்னார்கள்.
இதில் விசித்திரமான போக்கு என்னவென்றால்,
சட்ட நாள் கொண்டாடுகிறார்கள்; யார் மனுதர்மம் தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக இருக்கவேண்டும் என்று சொன்னார்களோ, அவர்கள் இன்றைக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏதோ பாதுகாப்பதுபோன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய மனுதர்ம அம்சங்களுக்கு விடை கொடுத்து, மனிதநேய அம் சங்கள் மட்டுமே கொண்டிருப்பவையாக அது இருக்க வேண்டும்; சமதர்மம் போன்றவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாம் போராட்டக் களத்தில் நின்று, அவற்றைக் காப்பாற்றிக் கொண்டிருக்கவேண்டிய நிலைகள் இருக்கின்றன.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஒரு வேடிக் கையான, முரண்பாடு போன்றுகூட தோன்றியிருக்கும். அதைத்தான் பேராசிரியர் சுப.வீ. அவர்களும் விளக்கிச் சொன்னார்.
மாற்றம் என்பதுதான் மாறாதது
எந்த மதம் இந்த ஜாதியைப் பாதுகாக்கிறது; வருணாசிரம தர்மம், சனாதன தர்மம் என்பது மாற்றப்பட முடியாதது - மாறாதது என்கிறார்கள்.
புத்தருடைய கருத்து, பிறகு காரல் மார்க்ஸ் வரையில் எல்லா அறிஞர்களும் சொன்ன கருத்து, மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதாகும்.
ஆனால், சனாதனம் என்பது மாறக்கூடாதது. அது தான், ஜாதி, வருணாசிரமதர்மத்தை நிலைநாட்டியிருப் பது என்ற அடிப்படையில் வருகின்றபொழுது,
அடுத்த கேள்வியை பெரியார் கேட்டார்,
இப்படி இவர்கள் காப்பாற்றுகின்ற மதம், ஜாதியோடு இருக்கவேண்டும்; ஜாதியை ஒழிக்கக்கூடாது என்று கூறுகின்ற சனாதன மதம் இருக்கிறதே, அதுபோன்ற ஒரு மதம் உலகத்தில் வேறு எங்கு இருக்கிறது?
ஒரு மனிதன், இன்னொரு மனிதனை தொடக்கூடாது என்று சொன்னது மட்டுமல்ல, அவன் இறந்துபோன பிறகுகூட, பிணமான பிறகுகூட, சவ ஊர்வலத்தில்கூட சமத்துவம் இருக்கக்கூடாது. சுடுகாட்டில், இடுகாட்டில் கூட அந்த சம வாய்ப்பைக் கொடுக்கக்கூடாது என்பதற்காக - பேதம் உள்ள நிலை - சமரசம் உலாவக் கூடிய இடம் அல்ல அது - பேதம் நிலைநாட்டப்படக் கூடிய இடமாக இன்றைக்கு ஜாதி அதை மாற்றிக் காட்டியிருக்கிறதல்லவா?
எரிப்பு முறை என்பது போராட்ட முறைகளில் ஒன்று
இதை ஒழிக்கவேண்டாமா? என்று கேட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியார் கேட்ட நான்கு கேள்வியும்தான், அரச மைப்புச் சட்ட எரிப்புக்கு அன்றைக்கு அடையாளம்.
எரிப்பு என்பது இருக்கிறதே, அது போராட்ட முறை. அந்நியத் துணிகளை நாங்கள் எரிக்கிறோம் என்று அன்றைக்குக் எரித்துக் காட்டினார்கள்.
ஏன்?
எரித்தால் உடனே அந்நியத் துணியே வராது என்றா அதற்குப் பொருள்? அல்ல. கவனத்தை ஈர்ப்பதற்காக.
அதுபோல, இந்தக் கவனத்தை ஈர்ப்பதற்காக - அதுவும் குறிப்பாக இங்கே அழகாகச் சொன்னார்கள்.
சில பேர் சிண்டு முடிவாய் போற்றி, போற்றி, போற்றி என்று சொல்வதுபோல,
ஆகா, அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத் தையே இவர்கள் கொளுத்தினார்கள் - பெரியார் கொளுத்தினார் என்று முரண்பாடு போன்று காட்டலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் மூக்கறுபட்டு போனார்கள்.
அம்பேத்கர் அவர்களே, தெளிவாக அதற்குப் பதில் சொன்னார் என்பதை, எழுச்சித் தமிழர் உள்பட நண் பர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டினார்கள்.
‘‘என்னை ஒரு வாடகைக் குதிரையாகவே பயன்படுத்தினார்கள்''
தனஞ்செய்கீர் அவர்கள் எழுதிய புத்தகத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது.
‘‘என்னை ஒரு வாடகைக் குதிரையாக நீங்கள் பயன்படுத்தினீர்கள். நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன் என்று என்னைப் பார்த்துச் சொன்னீர்களே, என்னை சுதந்திரமாக எழுத விட்டீர்களா?'' என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கேட்டார்கள்.
நண்பர்களே, இந்த இடத்தில் வழக்குரைஞர்கள் உள்பட, சட்டம் பயின்றவர்கள் உள்பட தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பகுதிகளில், சுய முரண்பாடு உள்ளடக்கமாக இருக்கிறது பல இடங்களில்.
அதற்குக் காரணம், அம்பேத்கருடைய பதில் - அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்றத்திலேயே அதைப் பதிய வைத்திருக்கிறார்.
என்னை எங்கே நீங்கள் சுதந்திரமாக செயல் படவிட்டீர்கள்? என்று கேட்டார்.
காரணம் என்ன?
எப்படி அவர் சுதந்திரமாக செயல்படாமல் இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
இன்றைய இளைய தலைமுறையினர் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும்.
பெரியாருடைய நுண்ணோக்கு, பெரியாருடைய தெளிவான சிந்தனை - நோய்நாடி, நோய் முதல்நாடக் கூடிய அறிவியல்பூர்வமான அணுகுமுறை எப்படிப் பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆறு பேரில் நான்கு பேர் பார்ப்பனர்கள்!
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினர்கள் ஆறு பேர்.
தலைவர், டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்
அதற்கடுத்து ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர் பார்ப்பனர்கள்,
அதைத்தான் அரசமைப்புச் சட்ட எரிப்பிற்கு முன்பு, ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களுக்கு விளங்குமாறு பெரியார் உரையாற்றினார்.
மேற்சொன்ன ஆறு பேரில் ஒருவர் இஸ்லாமியர்.
கே.எம்.முன்ஷி,
முகம்மது சாதுல்லா,
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்,
என்.கோபாலசாமி அய்யங்கார்,
டி.டி.கிருஷ்ணமாச்சாரி
எனவே, வரைவுக் குழு என்று வரும்பொழுதும், அதனுடைய நிர்ணய சபை என்று வரும்பொழுதும், பெரும்பான்மையை வைத்து முடிவு செய்வார்கள், வாக்கெடுப்பில்.
அப்படி வருகின்றபொழுது, அடிப்படையில் முக வுரை போன்ற இடங்களில், பீடிகை போன்ற இடங்களில் எல்லாம் அருமையான கருத்துகளை, சுதந்திரமாக தனக்கு இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி அம்பேத்கர் உள்ளே நுழைத்துவிட்டார்.
உதாரணமாக நண்பர்களே, இதோ இந்திய அரச மைப்புச் சட்டத்தின் The Preamble என்று சொல்லக் கூடிய முகவுரையில்,
பல நேரங்களில் வழக்குரைஞர்கள் படித்திருப்பார்கள்; ஆனால், இந்தக் கோணத்தில் சிந்தித்திருப்பார்களா என்பது கேள்விக் குறி.
அரசமைப்புச் சட்ட முகவுரையில்...
எனவே, மீண்டும் இந்த நேரத்தை, இந்தக் கருத்தரங் கத்தை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அருள்கூர்ந்து சிந்தியுங்கள். கருத்தரங்கம் முடிந்ததும் அதனை எடுத்துப் படியுங்கள்.
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political;
LIBERTY of thought, expression, belief, faith and worship;
EQUALITY of status and of opportunity;
and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
என்று அவர்கள் பின்னாளில் மாற்றினார்கள். இதில் மிக முக்கியமாக LIBERTY, EQUALITY, FRATERNITY.
இதில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இருக் கிறது. இந்த சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கருத் துகள் போன்றவையெல்லாம் வந்த பிற்பாடு, எப்படி ஜாதி என்ற வார்த்தை 18 இடங்களில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கின்ற வாய்ப்புகள் வந்திருக்க வேண்டும்?
அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றையும்விட, மனுதர்மத்தைப் பாதுகாக்கின்ற ஏற்பாட்டையும் அவர்கள் பத்திரமாக செய்துகொண்டார்கள் கடைசியில், இதே அரசமைப்புச் சட்டத்தில்.
தொடக்கத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
முடியும்பொழுது, மிகப்பெரிய ஓட்டை - முரண்பாடு.
இதற்கு முன் நாடாளுமன்றத்தில் நம்முடைய டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் அழகாகச் சொன்னார்.
அரசமைப்புச் சட்டத்தில் கடைசியாக வரும்பொழுது, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட சட்டங்களைத் தவிர, ஏற்கெனவே இருந்த சட்டங்கள் எல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டம் வந்த பிறகு, காலாவதியாகிவிட்டன. ஆனால், சில சட்டங்கள் அப்படியே நீடிக்கும் என்று சொல்லப்பட்டது.
சில சட்டங்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், அந்தக் குறிப்பிட்ட ஆர்டிக்கல் என்பதைப் பயன் படுத்தித்தான், 'இந்து லா' என்ற சட்டம். அந்த 'இந்து லா' என்பது காப்பாற்றப்பட்டு, அதற்கு உயிரூட்டப்பட்டு இருக்கிறது.
அதில் மனுதர்மப் பாம்பு நுழைந்திருக்கிறது; பட மெடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றது; ஜாதி இருக்கிறது - அதுதான் இன்னமும் அந்த வாய்ப்பைப் பெற்றி ருக்கிறது.
எங்கெங்கெல்லாம் ஜாதிப் பாம்பு உள்ளே நுழைந்திருக்கின்றது என்பதை
தந்தை பெரியார் சுட்டிக்காட்டியுள்ளார்!
இன்னொரு பக்கத்தில், மதச் சுதந்திரம் என்ற பெயராலே, பல விஷயங்களில் தலையிடக் கூடாது என்ற பெயராலே, மிகத் தெளிவாக அவர்கள் தங் களுடைய ஜாதி அமைப்பை, சூத்திரத்தன்மை, உயர் ஜாதி என்ற தன்மையை அவர்கள் வைத்திருக்கிறார்கள் - எங்கெங்கெல்லாம் ஜாதிப் பாம்பு உள்ளே நுழைந் திருக்கின்றது என்பதை - அரசமைப்புச் சட்டத்தில், அந்தப் பிரிவுகளை எடுத்து தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார் அந்த சிறிய தாளில்.
அய்யாவினுடைய சிந்தனை, இங்கே உரையாற்றும்பொழுது வழக்குரைஞர் குமாரதேவன் சொன்னார், நான் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் என்று - ஒரு சிறு திருத்தம் - அன்றைய காலகட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவன் நான்.
என்னைப் போன்ற சட்டக்கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு உண்டு!
அந்தச் சட்டக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருக்கின்றபொழுது, அய்யா அவர்கள் அரசமைப்புச் சட்டப் பகுதிகளை ஆய்வு செய் யும்பொழுது என்னை அழைத்தார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்டார்.
அந்த நேரத்தில், அதனைத் தயாரிக்கக்கூடிய பொறுப்பு எங்களைப் போன்றவர்களுக்கு இருந் தது. மேனாள் விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்களுடைய பங்களிப்பு அதில் உண்டு. என்னைப் போன்ற சட்டக்கல்லூரி மாணவர்களின் கருத்துகளையும் அய்யா அவர்கள் கேட்டு, அதில் இணைத்திருக்கிறார்.
எனவே, அந்தக் கை அகல கடுதாசியில் என்னென்ன பிரிவுகள் இருந்தது என்பதை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்வோம்.
அதில், இந்த மனுதர்ம அம்சங்கள் எல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு, இவை கொண்ட பகுதிகளைத்தான் எரித்து, ஜாதி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவா என்று சொல்கிறோம். எரிக்கப் போகிறோம் என்று சொல்லி, அவகாசம் கொடுக்கிறார், அவர்கள் பதில் சொல்வதற்கு. அந்த அவகாசம் கொடுத்து அது முடிந்த பிறகும், அதற்கான பதில் இல்லை.
மனமில்லை - காரணம்,
அவர் எம் இனமில்லை
நீங்கள் ஜாதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வாருங் கள், நான் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கமாட் டேன் என்கிற உத்திரவாதத்தைக் கொடுக்கிறேன் என்றார் தந்தை பெரியார்.
அரசமைப்புச் சட்டத்தை அவர்கள் காப்பாற்று பவர்களாக இருந்தால் அவர்கள் என்ன செய்தி ருக்கவேண்டும்?
சுதந்திர நாட்டில் ஜாதி கூடாது;
உயர்ஜாதிக்காரன் - தாழ்ந்த ஜாதிக்காரன்
தொடக் கூடியவன் - தொடக்கூடாதவன்
படிக்கக் கூடியவன் - படிக்கக் கூடாதவன்
நெருங்கக்கூடியவன் - நெருங்கக் கூடாதவன்
பார்க்கக் கூடியவன் - பார்க்கக் கூடாதவன்
என்றெல்லாம் இருக்கக் கூடாதல்லவா?
அதை செய்வதற்கு வாய்ப்பளித்தார்களே தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும். அதைப் பயன்படுத்திக் கொள்ள இவர்களால் முடிந்ததா?
மனம் இருந்தால் மார்க்கமுண்டு -
மனமில்லை - காரணம், அவர் எம் இனமில்லை.
அப்படிப்பட்ட ஓர் அருமையான சூழலில், அங்கே நுழைந்திருந்த ஆபத்தை பெரியார் சுட்டிக்காட்டினார்.
அரசமைப்புச் சட்டத்தை 103 முறை திருத்தியிருக் கிறார்கள் - எப்படி திருத்தப்பட்டது என்று அருமையான கேள்வியை கேட்டார் வழக்குரைஞர் குமாரதேவன்.
அரசமைப்புச் சட்டம் வந்து இன்னும் நூறாண்டுகள் ஆகவில்லை. ஆனால், அதற்குள் 103 முறை அதனைத் திருத்தியிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் எரிக்கிறார்; நீங்கள் திருத்துகிறீர்கள் - இதில் என்ன வேறுபாடு?
இதைத்தான் அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில் பேசுகின்றபொழுது சொன்னார், ‘‘தந்தை பெரியார் எரிக்கிறார்; நீங்கள் திருத்துகிறீர்கள். இதில் என்ன வேறுபாடு இருக்கிறது’’ என்று கேட்டார்.
இதற்குப் பதில் சொன்னதுண்டா?
பெரியாருடைய நோக்கம் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதல்ல; ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பது தான். அதற்கு வழிமுறை முறையாகத்தான் இதைக் கையாளுகிறார்.
அந்நிய நாட்டுத் துணியை நாங்கள் எரிக்கிறோம் என்பதற்கு என்ன காரணம் சொன்னார்கள்; இது ஒரு பிரச்சார முறை - எரிப்பது என்பது உலகத்தில் அங்கீ கரிக்கப்பட்ட ஒரு போராட்ட முறை.
அரசமைப்புச் சட்டத்தை எரிக்கப் போகிறோம் என்று தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தவுடன், அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, கடுமையான தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
இளைஞர்களே, தெரிந்துகொள்ளுங்கள் இந்த இயக் கம் எப்படிப்பட்டது? பெரியார் எப்படிப்பட்ட தலைவர்? பெரியாரிடம் கற்றுக்கொண்டிருக்கின்ற நாங்கள் - பெரியாரிடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற, பெறவேண் டிய நீங்கள் அதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று அதற்கு முன்புவரை இல்லை
அரசமைப்புச் சட்டத்தை எரித்தால் என்ன தண் டனை என்று அதற்கு முன்புவரை இல்லை. கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்கள் சொன்னது போல.
அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு டில்லி உத்தரவு போடுகிறது. தேசிய கவுரவத்தைப் பாதுகாப் போம் என்றார்கள்.
தேசிய கவுரவம் ஜாதி ஒழிப்பில் இல்லையா?
உண்மையான தேசிய கவுரவம் எல்லா மனிதர்களும் சமம் இங்கே என்று சொல்வதில்தானே இருக்க முடியும். ஆனால், அப்படியில்லையே!
அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததா?
இல்லையே!
எவ்வளவு வேதனையோடு கேட்டார் தந்தை பெரி யார்; வலியோடு கேட்டார். வலி இருக்கின்றவர் களுக்கு மருந்துதான் தேவையே தவிர, அச்சுறுத்தல் அல்ல.
உன்னை அடிப்பேன்; நீ வலிக்கிறது என்று சொன் னாலும், அடிப்பேன் என்றால், அந்த வலியைப் பொறுத் துக் கொள்ள முடியுமா? அவனுடைய வலிதானே அதிகமாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment