கேள்வி: நாட்டில் வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது தந்தை பெரியார் கருத்தின் பிரதிபலிப்பு அல்லவா?
- க. நண்பன், திருவண்ணாமலை.
பதில்: அண்மைக் காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தந்துள்ள பலவித சமூக சட்டங்கள் பற்றிய குறிப்பிடத்தகுந்த தீர்ப்புகள் பெரும்பாலும் பெரியார் தம் முன்னோக்குக் கருத்துகள் - காலத்தை வென்ற தொலைநோக்கையும் பெரிதும் பிரதிபலிக்கிறது.
இது பற்றி தொகுப்பாக ‘சிறப்புத் தொடர் சொற்பொழிவுகள்‘ ஆற்றி, பிறகு ஒரு நூலாகக் கூட ஆக்கும் சிந்தனைக்கு தங்கள் கேள்வி என்னைத் தூண்டுவதாக அமைந்துள்ளது . நன்றி!
கேள்வி: ஜாதி ஒழிப்பு அறப்போரில் (1957) உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் அவர்களுக்கு விழா எடுப்பதோடு, அந்நாளை (நவம்பர் - 26) ஜாதி ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு முன்வருமா?
- ச. சாந்தி, நாமக்கல்.
பதில்: முயற்சிப்போம். முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் வைப்போம் - மொழிப் போர்த் தியாகிகள் நாள் போல, ஜாதி ஒழிப்பு வீரர்கள் நாளையும் அரசு நிகழ்ச்சியாக நடத்தக் கேட்டுக் கொள்வோம். அதற்கு முன் அனைத்துக் கட்சித் தலைவர்கள், முற்போக்கு, சமூகச் சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்களையும் இதற்கென ஒருங்கிணைப் போம்.
கேள்வி: ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் சிலர் தாழ்த்தப்பட்ட இனத்தவர் தவிர என்கிறார்களே, இது எப்படி ஜாதிமறுப்பாகும்?
- தமிழன்பன், மதுரை
பதில்: இது ஆழ்ந்த பரிசீலனைக்கும் - நீண்ட விவாதத்தின் பிறகு கருத்திணக்கமும் ஏற்படவேண்டிய செய்தி. திறந்த கதவுகளை அகலமாகத் திறக்க முயற்சிகள் தொடர்வது நல்லது. அவசியமும் கூட!
கேள்வி: டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சி விரைவில் பா.ஜ.க. வின் நகல் ஆகிவிடும் என்று மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது சரியான பார்வையா?
- சு. ரேவதி, புதுச்சேரி.
பதில்: அறிஞர் ப.சிதம்பரம் அவாகள் சீரிய அரசியல் ஆய்வாளர்; அவரது கணிப்பு சரியானதே! புலியைவிட ஆபத்தானவர் புலிவேஷக்காரன். எப்படியெனில், நெருப்பைக் கண்டால் புலி ஓடிவிடும். புலி வேஷக்காரன் ‘ஓடமாட்டான்‘ என்பார் தந்தை பெரியார். அதைப் பொருத்திப் பாருங்கள்!
கேள்வி: தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை களுக்கான போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் தேர்ச்சி கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் அறிவித்திருப்பது தேனினும் இனிய செய்தி அல்லவா?
- க. இனியவன், இரும்புலியூர்.
பதில்: தேனிசை, தெவிட்டாத தேன்பாகு! வாழ்த்து தலுக்கும் நன்றிக்கும் உரிய நல்ல புதிய ஏற்பாடு! வேலை கிட்டாத நம் இளைஞர்களுக்கு புதுவெள்ளப் பாய்ச்சல், புதிய - அரிய வாய்ப்பு!
கேள்வி: ரோபோக்கள் இனிமேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் வகையில், உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
- கு. கணேஷ், கடப்பாக்கம்.
பதில்: அதை நம்மூரில் ஆயுத பூஜைக்கு வைத்து பூஜை போட்டுக் கொண்டிருக்கும் ‘அறிவுக் கொழுந் துகள்‘ உள்ளார்களே என்ற வேதனை விலாவைக் குடைகிறது!
கேள்வி: ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 -அன்று பாதுகாப்புக் கருதி இந்திய ஒன்றியம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் துறை யினர் ஆங்காங்கே நிறுத்தப்படுவதும், சோதனைகள் செய்வதும் ஜனநாயக நாட்டிற்கும், அறிவார்ந்த சமூகத்திற்கும் அழகா?
- இரா. அலமேலு, செங்குன்றம்.
பதில்: இதுபற்றித் திமுக அரசு நல்ல முடிவை எடுக்கலாம்; எடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்கு இப்படி குற்றச் சாயத்தைப் பூசுவது ஏற்கத்தக்கது அல்ல.
கேள்வி: வெளியில் நடமாடுவதற்கே கரோனா சான்றிதழ் கட்டாயம் என்று புதுச்சேரி அரசு அறி வித்துள்ளது தனிமனித உரிமையை பாதிக்காதா?
- தி. சுதாகரன், புதுவை.
பதில்: என்ன செய்வது? கொடுந்தொற்று பயமும் விளைவுகளும் தான் காரணம் - உயிர் காக்க முன்னுரி மையை வற்புறுத்துகின்றனர். மனித உரிமை பாது காப்புப் பற்றி பேச முடியுமா - அதற்கு முன்?
கேள்வி: கோவில்களில் உள்ள கடவுள் சிலை என்று கருதப்படும் கற்சிலைகளை தொட்டு வணங்கக்கூடாது என்ற தடை தென்னிந்தியாவில் மட்டும்தானா? வட நாட்டிலும் உண்டா?
- பூ. இராணி, அம்பத்தூர்.
பதில்: வடநாட்டில் கிடையாது; காரணம் ஆகமக் கோயில்கள் தென்னாட்டில் மட்டும்தான உள்ளதாம்; எல்லாம் அவாள் சிருஷ்டிதான் - கடவுளே ‘அவாள்‘ சிருஷ்டிதானே!
கேள்வி: டாக்டர் அம்பேத்கர் அவர்களைக் கொ ண்டாடுகின்ற சங்கிகள், தந்தை பெரியார் அவர்களை நெருங்க முடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
- வெ. ஜமுனா, ஆரணி.
பதில்: இமய மலையிடம் நெருங்கலாம்; எரிமலை அருகே நெருங்க முடியாது. எதிரிகளுக்கு அரசியலில் நுழையாத போராட்டக்காரர் - புரட்சியாளர், எரிமலை தானே!
No comments:
Post a Comment