இந்த ‘விடுதலை' நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண்டில் இது ஒரு பகுதி என்பதைத்தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3000த்துக்குக் குறையாமல் நஷ்ட மாகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பது போல உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.
'விடுதலை' அலுவலகப் பணியும் பொதுத் தொண்டே!
இது ஒரு பொதுத் தொண்டு - செய்ய வேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக இருக்கிறவருக்கு சம்பளமில்லை மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.
ஆசிரியரின் தியாகம்!
நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்றத் தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
(மலேசியாவுக்குச் சென்று கழகப் பிரச்சாரம் செய்து வந்த விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் -' விடுதலை' - 25.2.1968)
No comments:
Post a Comment