லத்தியால் அடித்தவர்களுக்கு லட்டு கொடுத்த விவசாயிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 18, 2021

லத்தியால் அடித்தவர்களுக்கு லட்டு கொடுத்த விவசாயிகள்

புதுடில்லியில் ஓராண்டிற்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டம் முடிவிற்கு வந்தது, இந்த போராட்டத்தின் துவக்கத்தில் முதியவர்கள் பெண்கள் சிறுவர்கள் என்று பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறை கடுமையாக தாக்கியது.

 காவல்துறை உயரதிகாரி ஒருவர் காவல்துறையினருக்கு கையில் லத்தியை எடுத்துக்கொள்ளுங்கள், விவசாயிகள் தலையில் இருந்து ரத்தம் வரும் வரை விடாதீர்கள். ஒருவருக்கு விழும் அடியைப் பார்த்து 100 பேர் பயந்துஓடவேண்டும், அடிவாங்குவது முதியவரா இளையவரா என்று எல்லாம் பார்க்கக் கூடாது என்று பேசிய காட்சிப்பதிவு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

 அதற்கு ஏற்ப டில்லியில் 70 வயது விவசாயி ஒருவரை காவல்துறை கடுமையாக அடித்து விரட்ட முற்பட்டது, ஆனால் அந்த விவசாயி காவல்துறையினரின் அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு ரத்தம் வழியும் முகத்தோடு அஞ்சி ஓடாமல்  அங்கேயே நின்றார்.

 சுமார் 40க்கும் மேற்பட்ட முதியவிவசாயிகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் அஞ்சி ஓடாமல் போராட்டக்களத்திலேயே நின்றனர். காயமடைந்தவர்களுக்கு தன்னார்வல மருத்துவர்கள் போராட்டக் களத்திலேயே வந்து சிகிச்சை அளித்தனர்.   இந்த நிலையில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டம் ரத்து தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதே போல் விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறுவது மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை போன்ற கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசு குழு அமைத்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை திரும்பப்பெற்றனர். போராட்டத்தைத் திரும்பபெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விவசாயிகள் தங்களை துன்புறுத்திய காவலர்களுக்கு லட்டுகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி ஊடகங்களில் வெளியாகி உள்ளது,  அதில்லத்தியால் அடித்த காவலர்களுக்கு லட்டுக் கொடுத்து வாழ்த்திய விவசாயிகள்என்று தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ளது

No comments:

Post a Comment