சென்னையில் 10 மணிநேரத்திற்கு மேல் கனமழை சாலைகளில் வெள்ளம் - போக்குவரத்து கடும் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

சென்னையில் 10 மணிநேரத்திற்கு மேல் கனமழை சாலைகளில் வெள்ளம் - போக்குவரத்து கடும் பாதிப்பு

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

சென்னை, டிச. 31- சென்னையில் நேற்று (30.12.2021) தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழை யால் பல்வேறு இடங்கள் வெள்ளக்கா டா னது. தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முடங்கியது.

வங்கக் கடலில் உள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. நேற்று (30.12.2021) காலை அந்த காற்று சுழற்சி தமிழ்நாடு கடலோரத்துக்கு நெருங்கி வந்தது. அதனால் சென்னை யில் நேற்று காலை 11 மணிக்குப் பிறகு மழை பெய்யத் தொடங்கியது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து, இடை விடாத கனமழையாக தொடர்ந்தது. அதனால், சாலைகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. தொடர்ந்து இடை விடாமல் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் மழை கொட்டியது. இதனால், சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பெரியார் .வெ.ரா. நெடுஞ்சாலை, காமராசர் சாலை, 100அடி சாலை என நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய சில இடங்களில் வாகனப் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதே நிலைதான் சென்னை புறநகர் பகுதியில் காணப் பட்டது.

சென்னையில் நேற்று மாலை 6 மணி வரை பெய்த மழையில் நுங்கம்பாக் கத்தில் 70 மிமீ, எம்ஆர்சி நகரில் 80 மிமீ வரை மழை பதிவானது.

சென்னையில் தொடர் மழை கார ணமாக 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட் டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னையில் நேற்று (30.12.2021) தொடர் மழை பெய்தது. அதை தொடர்ந்து மழைநீர் பெருக்கு காரணமாக கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை,  ஆர்.பி. அய். சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. மேலும் மழைநீர் தேங்கியுள்ளதால் கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை, .வி.ஆர் சாலை - காந்தி, இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம் - ஜவஹர் நகர் 20 அடி சாலை, குளத்தூர் விநாயகபுரம் - ரெட்ஹில்ஸ் ரோடு, 100 அடி சாலை பெரியார் பாதை, நுங்கம்பாக்கம் லேக் வியூ ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரங்கள் ஏதும் விழவில்லை. சாலைகளில் பள்ளம் ஏற்படவில்லை. அதேபோல், பேருந்து போக்குவரத்து மாற்றப்படவில்லை.

சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ராட்சத மோட்டார்கள் மூலம் வெள்ளநீர் அகற்றும் பணி இரவு, பகலாக நடந்து  வருகிறது.

தொடர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

சென்னையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். மயிலாப்பூர் காரனீஸ்வரர் பகோடா தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் லட்சுமணன் (13), சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பெய்த கனமழை காரணமாக வீட்டின் முன் மழைநீர் தேங்கியிருந்தது. தேங்கியிருந்த தண்ணீரில் காலை வைத்தபோது மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரி ழந்தார்.அதேபோல் புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி மீனா என்ற வடமாநில பெண் உயிரிழந்தார். அதே போல் ஓட்டேரியில் அம்மா உணவகம் அருகே நடந்து சென்ற மூதாட்டி தமிழரசி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னையில் நேற்று இரவு 7.45 மணி நிலவரப்படி 20 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அதிகபட்சம £ எம்.ஆர்.சி நகரில் 20 செ.மீ, நுங்கம்பாக்கம் 18 செ.மீ, நந்தனத்தில் 15 செ.மீ, அண்ணா பல்கலைகழகத்தில் 12 செ.மீ, மீனம்பாக்கம் 13 செ.மீ, வான கரத்தில் 10 செ.மீ, சோழிங்கநல்லூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


No comments:

Post a Comment