முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழ்நாடு தலைமைப் பொறியாளர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழ்நாடு தலைமைப் பொறியாளர் ஆய்வு

கோவை, நவ.1 கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணை நீர் திறப்பை அதிகரித்த நிலையில், அணையில் சிறப்புக் கோட்ட மண்டலத் தலைமைப் பொறியாளர் .கிருஷ்ணன் நேற்று (31.10.2021) ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இருப்பினும் அணையின் பலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கேரள அரசு எழுப்பி, நீர்மட்டத்தை உயர்த்துவதில் தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு 2014, 2015 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் மட்டுமே 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அணையில் இருந்து கேரள பகுதிக்கு கடந்த 29-ஆம் தேதி திடீரென தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டு பாசன நீரை கேரள பகுதிக்கு கொண்டு சென்றதால் 5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதல் நாளில் விநாடிக்கு 517 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 974 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மின்சாரம் தயாரித்த பிறகு இந்ததண்ணீர் கடலில் கலந்து வருகிறது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டலை மீறி, தண்ணீரை கேரள பகுதிக்கு திருப்பியதால் 5 மாவட்டங்களுக்கு பாசன நீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் அணைப் பகுதியை சிறப்புக் கோட்ட மண்டலத் தலைமைப் பொறியாளர் .கிருஷ்ணன்  ஆய்வு மேற்கொண்டார். அணையின் செயற்பொறியாளர் ஷாம் இர்வின்,உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி அணை நீரை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்ற கேரள அரசைக் கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்களும், அமைப்புகளும் போரா டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து அய்ந்து மாவட்டவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவின் இச்செயல் தமிழக இறையாண்மையை பாதிப்பதாக உள்ளது. எனவே கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

அய்ந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறுகையில், கேரளாவின் இப்போக்கு முல்லை பெரியாறு அணை குறித்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகளவு நீரை கேரளாவுக்கு கொண்டு செல்வதால், தமிழ்நாடு பெரியளவில் பாதிக்கப்படும். பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளும், சங்கங்களும் போராடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள நீர்வளத் துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சர்கள் ரோஷி அகஸ்டின், பிரசாத் ஆகியோர் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

 

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 

2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, நவ.1 தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்க ளுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் நேற்று  (31.10.2021) கூறியதாவது:

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக நவ.1, 2 தேதிகளில் (இன்றும் நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 3, 4 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நவ.1-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் 3-ம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண் டாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment