பா.ஜ.க.வின் விசித்திரமான ஜனநாயகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

பா.ஜ.க.வின் விசித்திரமான ஜனநாயகம்!

 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்களவை தேர்தலில் பெரும்பான்மை யான இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்கிறது. அதன்படி, மக்களவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ஓம்பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், துணைத் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.

அரசமைப்பு சட்டத்தின் 93-ஆவது பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தலைவர் மற்றும், துணைத்தலைவர் பதவி விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுமட்டுமின்றி,  அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி காலியாகும்போது, மற்றொரு உறுப்பினரை தலைவர் அல்லது துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது.  ஆனால், அதை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

 கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அவைத்தலைவர் தேர்தல் மட்டும் நடத்தப் பட்டது. அப்போது,  பா...வை சேர்ந்த ஓம்பிர்லா தேர்ந் தெடுக்கப்பட்டார். இதையடுத்து, துணைத் தலைவராக மக்களவையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவரே  தேர்ந்தெடுக் கப்பட வேண்டும்.

ஆனால், துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால்,  துணைத் தலைவர் தேர்தல் நடத்துவதை ஒன்றிய அரசு வேண்டுமென்றே காலம்தாழ்த்தி  வருகிறது. தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் துணைத்தலைவர் இல்லாமல் மக்களவை நடந்துகொண்டு வருகிறது.

இதற்குக் காரணமாக, மொத்த இடங்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறும் கட்சிதான் அதிகாரபூர்வ எதிர்க் கட்சி தகுதியைப் பெற முடியும் என்ற அரசியல் சாசனத்தை கூறும் பாஜக,  தேர்தலில் எந்தக்கட்சியும் 54 இடங்களில் வெற்றி பெறாததால், எதிர்க்கட்சியின் தகுதியைப் பெற எந்தக் கட்சிகளுக்கும் தகுதியில்லை என்று மறுத்து வருகிறது.

ஆனால், ஒரு நாட்டின் அரசியல் சட்டங்கள் நிறை வேற்றப்படும் நாடாளுமன்றத்தில் துணைத்தலைவர்  என்ற ஒரு பதவி இல்லாமல் தொடர்வது மக்களாட்சி நெறிமுறை இல்லை என்றும், ஏதாவது ஒரு எதிர்க்கட்சிக்கு துணைத் தலைவர் பதவியைக் கொடுப்பதில் தவறு இல்லை. அதற்கும் முன்னுதாரணம் இருப்பதாகவும், துணைத் தலைவர் இல்லாத மக்களவையாக இருக்கக்கூடாது என்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த முறை, பாஜக கூட்டணி கட்சியான  அதிமுகவைச் சேர்ந்த தம்பித்துரை துணைத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்ட நிலையில், தற்போது பாஜக கூட்டணி கட்சி ஏதும் பெரும் பாலான எம்.பி.க்களை கொண்டிருக்கவில்லை என்பதால், துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படாமல்  இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான்,  மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, துணைத் தலைவர் தேர்த லுக்கான பணியை உடனே தொடங்குங்கள் என்று மக்க ளவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவ 29) தொடங்கியது. இதில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்பட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டன. மேலும் பெகாசஸ் உள்பட பல விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சவுத்ரி, மக்களவை  துணைத் தலைவர் நியமனம் தொடர்பான செயல்முறையை உடனே தொடங்குமாறு மக்களவை தலைவர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.  துணைத்தலைவர் இருந்தால், அது  உங்களுக்கு சபையில் அலுவல்களை சுமூகமாக நடத்த உதவும் என்றும் தெரிவித்து உள்ளார்.

2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்த லிலும் பா... 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும், தி.மு.. 24 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 22 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், அய்க்கிய ஜனதா தளம் கட்சி 16 இடங்களிலும், பிஜு ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பா...வைப் பொறுத்தவரை ஜனநாயகத்தில் நம்பிக்கை யில்லாத - ஒரே கட்சி ஆட்சியை விரும்பக் கூடிய குணாம்சம் கொண்டதாகும் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டும் தேவையோ!

No comments:

Post a Comment