தந்தை பெரியார் கேட்ட நான்கு கேள்விகள்
ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்ட நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர்
சென்னை, நவ.30 வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா? என்றும், தந்தை பெரியார் கேட்ட நான்கு கேள்விகளை எடுத்துக் காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம்
ஜாதி ஒழிப்பு -சட்ட எரிப்புப் போராட்ட நாள்
26.11.2021 அன்று காணொலிமூலம் நடைபெற்ற ‘‘ஜாதி - தீண்டாமை ஒழிப்பு- ஜாதி ஒழிப்பு-சட்ட எரிப்புப் போராட்ட நாள்’’ கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமாக இன்றைக்கு நவம்பர் 26 - புதிய அரசமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே வழங்கிக் கொண்டதாகச் சொல்லிக் கொண்டு, நம்மில் மிகப்பெரும்பாலோர் இன்னமும் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள், ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள், ஜாதி காரணமாக இன்னமும் மிகப்பெரிய அள விற்கு அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்களாக இருக்கின்ற நாம் - அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதற்காக, நம்முடைய பங்களிப்பை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இங்கே உரையாற்றிய நம்முடைய பெருமைக்குரிய அருமைத் தோழர்களே,
சிறப்பாக வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் அவர்களே, நோக்க உரையை சிறப்பாக வழங்கிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மான மிகுவாளர்கள், கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அவர் களே, வழக்குரை ஞர் பா.மணியம்மை அவர்களே, வழக் குரைஞர் மதிவதனி அவர்களே, தி.இரா.இரத்தினசாமி அவர்களே, தே.செ.கோபால் அவர்களே, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே,
சகோதரர் மானமிகு டி.கே.எஸ்.இளங்கோவன்
இந்த சிறப்பான கூட்டத்திற்கு நம்முடைய அழைப்பை ஏற்று, அருமையான ஓர் ஆய்வுரையை தெளிவான வகையில் வழங்கி, நமக்கெல்லாம் சிந்த னைக்கு விருந்தளித்திருக்கக் கூடிய திராவிட முன் னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான அன்பிற்குரிய அருமை சகோ தரர் மானமிகு டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி.,
எனக்கு முன்பு சிறப்பாக உரையாற்றிய, மூன்றாவது குழலாக எப்பொழுதும் நம்மோடு இணைந்திருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நமது எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களே,
மானமிகு பேராசிரியர் சுப.வீ.
அதுபோல, நம்முடைய அங்கங்களில் ஒருவராக என்றைக்கும் பங்கேற்கக்கூடிய உரிமையாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப.வீ. அவர்களே,
இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய வழக் குரைஞர் அருமைச் சகோதரர் குமாரதேவன் அவர்களே,
கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இறுதியில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழக அமைப்புச் செயலாளர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே,
இந்தக் காணொலி மூலமாக கருத்துரைகளைப் பகிர்ந்துகொண்டு, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கக்கூடிய பெருமைக்குரிய அருமைத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி என்பது ஒரு வரலாற்றுப்பூர்வமானது என்பதை பல கோணங்களில் எனக்கு முன்பாக உரையாற்றிய அத்துணை நண்பர்களும் மிக அருமையாகச் சுட்டிக்காட்டினார்கள்.
ஜாதிக் கொடுமை எங்கே இருந்தாலும்....
நம்முடைய அறிவாசான் இந்தப் போராட்டங் களையெல்லாம் முன்னெடுத்து, நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்திலே, ஜாதி ஒழிப்பையே முன்னி லைப்படுத்தி, எனக்குக் கட்சியில்லை, கொள்கைதான் உண்டு என்ற அடிப்படையில், காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்ற காலத்தில்,
ஜாதிக் கொடுமை எங்கே இருந்தாலும் - இந்த மண் ணிலே இருந்தால் என்ன? கேரளத்தில் இருந்தால் என்ன? என்று சொல்லி, திருவிதாங்கூர் பகுதியில் உள்ள வைக்கத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தெருக்களில் நடக்கக்கூடாது என்ற கொடுமையை எதிர்த்து, அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காகப் போராடிய அந்த மக்களையெல்லாம் கைது செய்த நேரத்தில், எங்கே அந்தப் போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடுமோ, அனா தையாக்கப்பட்டு விடுமோ என்ற காலகட்டத்திலேதான், அவர்களுடைய கடிதத்தைப் பெற்று, உடனடியாக வைக்கத்திற்கு விரைந்தார் தந்தை பெரியார். ஓராண்டு அந்தப் போராட்டத்தைத் நடத்துவதற்கு அடித்தளம் வகுத்தவர் அவர் - அதனால் வைக்கம் வீரரானார்.
அன்றைக்குத் தொடங்கிய ஜாதி ஒழிப்புப் பணி என்பது - அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், களம் களமாக அவர் நின்றார் - பல களங்களில் வென்றார்கள்.
மிகப்பெரிய அடக்குமுறைகளைத் துணிவோடு சந்திக்கக்கூடிய தெம்பும், துணிவும் உள்ளவர்கள்
அருமைத் தோழர்களே, அதிலே மிக முக்கிய மான ஒரு பகுதி - இங்கே நண்பர்கள் சுட்டிக் காட்டியதைப்போல, இந்தியாவிலேயே இது போன்ற ஒரு போராட்டம் - அமைதியாகவும், அதேநேரத்தில், வன்முறைக்கு இடமில்லாமலும், மிகப்பெரிய அடக்குமுறைகளைத் துணிவோடு சந்திக்கக்கூடிய தெம்பும், துணிவும் உள்ள நம்மு டைய தோழர்களால் நடத்தப்பட்டது.
எளிய மக்களாக இருந்தாலும், அவர்கள் செய்த தியாகம் என்பது, தன்னலமறுப்பு - அது என்றென்றைக் கும், நம்முடைய போற்றுதலுக்கும், பின்பற்றுதலுக்கும் உரியது என்ற அளவில், நிலைநாட்டி இருக்கின்ற நம் முடைய கருப்பு மெழுகுவத்திகள் - அவர்களையெல்லாம் நினைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள், ஏன் ஜாதி ஒழிப்பில் அவர்கள் அக்கறை எடுத்து, தொடக்கத்தில் 1924 ஆம் ஆண்டு தொடங்கி யதை, 1973 ஆம் ஆண்டு அவர்களுடைய இறுதிப் பயணத்திற்கு முன்புகூட, அந்தப் போராட்டக் களத்தில் நின்றார்கள் என்று பார்க்கும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் நான்கு கேள்விகளைக் கேட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் கேட்ட நான்கு கேள்விகள்
அந்தக் கேள்விகளை நான் நினைவூட்டுவதுதான் - இன்றைக்கு மிக முக்கியமான அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்ட நாளாக இருக்கக்கூடிய நவம்பர் 26 - ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு நாளில், தந்தை பெரியார் கேட்ட அந்த நான்கு கேள்விகளுக்கு இன் றைக்கும் பதில் கிடைத்திருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
நம்முடைய கழகத் துணைத் தலைவர் அதிலே ஒரு பகுதியை சுட்டிக்காட்டினார்.
பெரியார் கேட்டார், மாலை நேர பொதுக்கூட்டம் என்ற கல்லூரிப் போன்று நடத்திய அரசியல் வகுப்பிலே கேட்டார்.
‘‘சுதந்திர நாடு என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது என்று சொல்கிறீர்களே,
சுதந்திர நாட்டில், ‘சூத்திரன்' இருக்கலாமா?
‘பிராமணன்' இருக்கலாமா?
‘பார்ப்பான்' இருக்கலாமா?
‘பறையன்' இருக்கலாமா?
மேல்ஜாதிக்காரன் இருக்கலாமா?
கீழ்ஜாதிக்காரன் இருக்கலாமா?
தொடக்கூடியவன்- தொடக்கூடாதவன்
பார்க்கக் கூடியவன் - பார்க்கக் கூடாதவன்
நெருங்கக் கூடியவன் - நெருங்கக்கூடாதவன்
என்றெல்லாம் இருக்கலாமா?
மனிதர்களுக்குள்ளேயே இந்தப் பேதம் இருக்க லாமா?
இது காட்டுமிராண்டித்தனம் அல்லவா?
மனிதத்தை அவமதிக்கின்ற மிகப்பெரிய கொடுமை யல்லவா?’’ என்று கேட்டார்.
வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா?
எனவேதான், உலகத்தில் எந்த நாட்டில் இந்த ஜாதி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
வேறு எந்த நாட்டிலாவது பிறவியை அடிப்படையாகக் கொண்ட ஜாதி உண்டா?
உலகத்திலுள்ள எந்த நாட்டிற்காவது சென்று, இந்தி யாவினுடைய ஜாதி முறையைப்பற்றி சொன்னால், அவர்களுக்கு அது புரியாத புதிராக இருக்கும்.
அவர்களுக்குப் புரிய வைப்பது என்பதே விசித்திர மாக இருக்கும். ஏனென்றால், இப்படி ஒன்று இருக்குமா? என்று கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, அந்தக் கொடுமை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்தக் கேள்விக்கு, சுதந்திரமடைந்து இன்றைக்கு 75 ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறோம் என்று சொல் கின்ற இந்தக் காலகட்டத்தில் பதில் உண்டா?
கொடுமைக்கு மகுடம் வைத்ததுபோன்று இன்னொரு கொடுமை
அதேநேரத்தில், இந்தக் கொடுமையைவிட, இந்தக் கொடுமைக்கு மகுடம் வைத்ததுபோன்று இன்னொரு கொடுமை உண்டு.
இந்த ஜாதி முறையை, இந்த வருணாசிரம பேதத்தை நான்தான் உருவாக்கினேன் என்று கடவுள்கள் சொல் கிறார்கள். கடவுள்களால் உருவாக்கப்பட்டது - அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. எனவே, அதனை எளிதாக நீ அழித்துவிட முடியாது என்கிறார்கள்.
ஒரு பக்கம் பிரம்மா - மனுதர்மத்தில் -
இன்னொரு பக்கம் கீதையில், கிருஷ்ணன்
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் -
நான்கு வருணங்களை நானே உருவாக்கினேன் - அதை நான் நினைத்தாலும் மாற்ற முடியாது என்கின்ற அந்த பகவான் கிருஷ்ணனை அவதாரம் என்று, பகவத் கீதையைப் பெருமையாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றவர்கள் சொல்கிறார்கள்.
எந்த நாட்டிலாவது இந்தக் கொடுமை உண்டா என்று சொல்வதைவிட, இந்தக் கொடுமையை, வணங்கப் படுகின்ற கடவுள்களே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆகவே, அதை கடவுள் என்று சொல்ல முடியுமா?
என்றைக்கோ அதை சொன்னார்கள், அதை ஏன் இன்றைக்கு நீங்கள் சொல்கிறீர்கள்? இப்போது மாறிவிடவில்லையா? என்று கேட்க முடியுமா?
ஜாதியை ஒருபோதும்
ஒழித்துவிடக் கூடாது என்று சொன்னவர் விவேகானந்தர்
விவேகானந்தருக்கு குமரி முனையில் சிலை அமைத்திருக்கின்றீர்களே, பெரிய வீரத் துறவி என்றெல்லாம் சொல்லப்படுகின்ற விவேகானந்தர், ஜாதி என்பதுதான் நம்முடைய நாட்டிற்கு மிகப் பெரிய தேவை - அந்த ஜாதியை ஒருபோதும் ஒழித்துவிடக் கூடாது; அது கடவுளால் உருவாக் கப்பட்டது என்று மிகத் தெளிவாக எழுதியும், பேசியும் இருக்கிறாரா, இல்லையா?
இந்த தகவல் பல பேருக்குத் தெரியாது.
விவேகானந்தர் ஏதோ முற்போக்குச் சிந்தனை முத்திரைக் குத்திக் கொண்டவர் என்று பல பேர் சொல்வார்கள்.
இன்றைய ஆர்.எஸ்.எசுக்கு அவர்தான் கரு கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்.
ஹிந்துத்துவா என்ற தத்துவத்தில் இருக்கக்கூடிய அந்த ஹிந்து மதம் என்கின்ற பார்ப்பனீய மதம், சனாதன மதம், ஆரிய மதம், பிராமணீய மதம் இருக்கிறதே, அந்த மதத்திற்கு அடித்தளமாக இருக்கின்ற வருணாசிரம தர்மம் - அந்த வருணாசிரம தர்மத்திற்கு மிக முக்கியமாக இன்றைக்கும் அடிப்படையை வழங்கிக் கொண்டிருப் பவை எவை?
Vivekananda Complete Works
மிகப்பெரிய அளவிற்கு, ஆதாரத்தோடு சொல்கி றோம், வியப்படைய வேண்டாம் - இது Vivekananda Complete Works என்று விவேகானந்தருடைய அமைப் பில் போடப்பட்டு இருக்கின்ற பல தொகுப்புகள் - Advaita Ashrama என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகமாகும்.
அதிலே இருந்து நான் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன்.
விவேகானந்தர் சொல்கிறார்,
According to Vivekananda, the Indian caste system was one of the greatest social institutions the Lord gave to man.It was true that this great social institution had often been thwarted from performing its legitimate functions by foreign invaders as well as by ignorant and arrogant Brahmins, but despite these limitations it had already worked wonders for the land of Bharata’. It was this institution that was destined to lead Indians towards achieving their goals and aspirations. Going a step further, Vivekananda attributed the downfall of India to a thoughtless rejection of caste. The original idea of caste was premised on the notion of diversity. Creation stopped when there was no diversity-’unity is before creation, diversity is creationthis is how Vivekananda formulated the central axiom about caste.The original idea of caste, he said, was to give an individual the freedom to express his nature, his prakriti. It was not based on custom, privilege or inheritance. This crystallization of caste on the basis of privilege and heredity was a modern-day distortion. His exhortation to his countrymen was to regain the lost glory of this unique institution:
‘‘இந்த ஜாதி முறையே கடவுள் அருளியது; அதில் நீங்கள் கைவைக்காதீர்கள்; அதனை வெறுக்காதீர்கள். ஜாதியைப்பற்றி நீங்கள் கேவலமாகப் பேசியதினால்தான் இந்தியா வீழ்ந்திருக்கிறது.’’
என்ன அற்புதமான வியாக்கியானம்!
இதை அப்படியே பின்பற்றித்தான் ‘‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்'' - ஞானகங்கை என்ற புத்தகத்தைத் தொகுத்த ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் புத்தகத்தில் இருக்கிறது.
ஜாதியை ஒழிப்பதற்கு இன்றைய ஒன்றிய ஆட்சி தயாராக இல்லை
நண்பர்களே, இன்றைக்கு அந்தக் கொள் கையைக் கொண்டிருக்கின்ற ஒன்றிய ஆட்சி, ஜாதியை ஒழிப்பதற்குத் தயாராக இல்லை.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே சட்டம் என்று சொல்லுகின்ற ஒன்றிய ஆட்சியினர், ஒரே ஜாதி என்று ஏன் சொல்லவில்லை?
இந்தக் கேள்விக்குப் பதில் உண்டா?
அதுமட்டுமல்ல, பெரியார், அடுத்த கேள்வி கேட்டார்,
இந்தக் கடவுள்கள் உண்டாக்கிய ஜாதி முறையி னாலே, உயர்ஜாதிக்காரன் மட்டும்தான் படிக்க வேண்டும்; மீறி கீழ்ஜாதிக்காரன் படித்தாலோ, காதால் கேட்டாலோ, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார்களே, அப்படிப்பட்ட மனுதர்ம சட்டங்கள்தான், அரசமைப்புச் சட்டத் திற்குப் பதிலாக வந்திருக்கவேண்டிய ஒன்று என்று சொல்கிறார்களே!
அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டுமாம்
இதே அரசமைப்புச் சட்டம், இதே நாளில், 1949 இல் எழுதி வழங்கப்பட்டபொழுது, ‘ஆர்கனைசர்’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய ஏட்டில், மிகப்பெரிய அளவிற்கு கட்டுரை எழுதப்பட்டது.
‘‘இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது; இது மேலைநாட்டு பாணியில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. அரசமைப்புச் சட்டமாக நம்முடைய பாரம்பரியமான மனுதர்மம் இருக்கவேண்டும்‘‘ என்று எழுதப்படவில்லையா?
எனவே, அவர்களுடைய கோரிக்கை என்ன?
அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டும் என்பது தானே!
இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக மேலை நாட்டுக் கருத்தை சொல்கிறதா? என்றால், இல்லை.
அங்கேதான் முரண்பாட்டை ஆய்ந்துபார்க்க வேண்டும். இந்த இடத்தில் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். எனக்கு முன்பாக உரையாற்றிய நம்முடைய தோழர்கள் மிக அற்புதமாக விளக்கிச் சொன்னார்கள்.
கழகப் பொருளாளரானாலும், பிரச்சார செயலாளர் அவர்களானாலும் நல்ல செய்திகளைச் சொன்னார்கள். பேராசிரியர் சுப.வீ. அவர்களும் சொன்னார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment