தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தமிழ்நாடு அரசு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் செங்கற்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது,
சமீபத்தில் இதில் கலந்து கொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினி என்பவரை கோயில் ஊழியர்கள் தரக்குறைவாகப் பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தமிழ்நாடு அரசு சமத்துவம் மிக்க திட்டங்களை கொண்டு வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் இதனை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் பரபரப்புக் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை உலவ விட்டனர்
இந்த நிலையில் சனியன்று தலசயனப் பெருமாள் கோயிலில் அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நரிக்குறவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அப்போது கோவில் ஊழியர்கள் தரக்குறைவாகப் பேசியதால் அவமதிப்புக்கு உள்ளான நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது அருகில் அழைத்தார்.
''அன்னதானம் என்பது அனைவருக்கும் சமமானது. வாருங்கள் என் அருகில் அமர்ந்து சாப்பிடுங்கள்'' என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அந்தப் பெண்ணிடம் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனை வருக்கும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நரிக்குறவர் பெண்ணை தனது அருகில் அமர வைத்து சாப்பிட்ட அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு "நெட் டிசன்கள்" பாராட்டுத் தெரிவித்தனர். சமூக நீதியை வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்தி விடாமல், அதனை தி.மு.க. அரசு செயல் அளவிலும் செய்து வருகிறது என்று அவர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். நரிக்குறவர்களுடன் அமர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவு உண்ணும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திமுக அரசைப் பொறுத்தவரை சமூகநீதியில் நம்பிக்கை கொண்ட அரசாகும். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், தந்தை பெரியார் சிந்தனை களை உள்ளடக்கிய உறுதிமொழிஎடுக்கும் நாளாகவும் அறிவித்தது வேடிக்கைக்காக அல்ல- மேம்போக்காகவும் அதனைக் கருதிவிடவும் கூடாது - மிகவும் பொருத்தமான முடிவாகும்.
தந்தை பெரியாரின் கொள்கைகளுள் விழுமிய மானவை ஒன்று ஜாதி ஒழிப்பு, இரண்டு பெண்ணடிமை ஒழிப்பே!
நரிக்குறவர் சமுதாயம் என்கிறபோது அவர்கள் சொந்த வீடுகள் இல்லாமல் நாடோடிகளாக அலைந்து திரியும் அவல வாழ்க்கை! கல்வி என்றால் என்ன என்ற வாசனையே அறியாதவர்கள். ஏதோ ஓரிரண்டு பேர் விரல் விட்டு எண்ணிக்கையில் படித்திருக்கலாம்.
சமபந்தி என்று அறிவித்த பிறகு சம நீதிக் கண் ணோட்டம் இன்றி இந்த அதிகாரிகள் நடந்து கொண்டது வெட்கக் கேடு! அத்தகையவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் தன் அருகில் நரிக்குறவப் பெண்ணை அமர வைத்து உணவருந்தியது - சிறப்பானது - பாராட்டத்தக்கது. எடுத்துக்காட்டானது! ஆட்சி மாறினாலும் சில அதிகாரிகள் மனமாற்றம் அடைய வில்லை என்று தெரிகிறது. அதற்கொரு முடிவு தேவை.
No comments:
Post a Comment