கரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், திறன்பேசி வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
பழங்குடி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி, அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறார் ஆசிரியை மகாலட்சுமி. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள அரசவெளி கிராமத்தில், பழங்குடியின குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மகாலட்சுமி, சாதாரண குடும்பத்தில் பிறந்து, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கல்வி கற்றவர்.
விழித்திறன் குறைபாடு கொண்ட தந்தை, மனநலம் பாதித்த தாயுடன் வாழும் அவருக்கு, அக்கா ரமணி மற்றும் பலரது உதவியால்தான் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது.
பன்னிரண்டாம் வகுப்பை முடித்து மருத்துவம் படிக்கும் ஆர்வத்தோடு இருந்தவருக்கு, மூன்று மதிப்பெண்களில் அந்த வாய்ப்பு பறிபோனாலும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைத்தது.
பயிற்சி முடிந்து, 2006ஆம் ஆண்டு ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
அவர் பணியில் சேர்ந்தபோது, பழங்குடியின குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி அழுக்கும், குப்பைகளும் நிறைந்து, கட்டுமானப் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது.
அந்தப் பள்ளியில் ஒரு மாணவர் கூட அப்போது இல்லை. மதிய உணவு நேரத்தில் பள்ளிக்கு வந்த குழந்தைகள், உணவை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்கள். வருகைப் பதிவேட்டை எடுத்துப் பார்த்த மகாலட்சுமி, நிறைய மாணவர்களின் பெயர்கள் அதில் இருப்பதைக் கவனித்தார்.
பாழடைந்த அந்தக் கட்டடம் பள்ளிக்கூடமாக மாற வேண்டுமானால், மாணவர்கள் அங்கு கல்வி கற்க வர வேண்டும் என்பதை உணர்ந்தார்.
வாழ்வாதாரத்துக்கான எந்த வேலையையும் செய்ய முடியாமல் சிரமப்படும் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள், மிளகு பறிப்பதற்காக ஆண்டில் நான்கு மாதங்கள் கேரளாவுக்குச் செல்வார்கள். இவ்வாறு செல்பவர்களில் பலர், தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அவர்களுக்கு அந்த நான்கு மாத வருமானம்தான் ஆண்டு முழுவதும் வாழ்வை நடத்துவதற்கான ஆதாரம். இந்தச் சூழ்நிலையில் அவர்களால் தங்களது குழந்தைகளின் கல்வி குறித்து அக்கறைகொள்ள முடியவில்லை.
இதை புரிந்துக் கொண்ட மகாலட்சுமி, ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கோரிக்கை வைத்தார். மகாலட்சுமியின் இடைவிடாத முயற்சியாலும், குழந்தைகளிடம் அவர் காட்டிய அக்கறையாலும், அந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
பள்ளிக்கு வரும் மாணவர்களை அவர்களுக்கான முழு சுதந்திரத்தோடு செயல்பட அனுமதித்ததோடு, அவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தினார் மகாலட்சுமி. குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, அவர்களுக்கு முடிவெட்டிவிடுவது என அவர் கவனித்துக்கொள்ளத் தொடங்கிய பின்பு குழந்தைகள் பள்ளிக்கூடத்தை இன்னொரு வீடாக நினைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு வருடகாலம் தொடர்ச்சியான அவரது அர்ப்பணிப்புமிக்க செயல்களின் பலனாக மாணவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது. நாம் இந்த சமூகத்துக்கு ஒரு நன்மையை விதைத்தால், அதன் பலன் பன்மடங்காகப் பெருகி வரும் என்பதற்கு அடையாளமாக அவரைக் குறித்தும், அந்தப் பள்ளியைக் குறித்தும் செய்திகள் வேகமாக வெளிஉலகத்துக்கு பரவத் தொடங்கியது.
இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தாலும், பள்ளியின் கட்டமைப்பு சரியான முறையில் இல்லை. எனவே, என்னுடைய நண்பர்களிடம் பள்ளியின் நிலை குறித்து எடுத்துக்கூறி நிதியுதவி பெற்றேன். அதனுடன் என்னுடைய சம்பளத்தையும் சேர்த்து சிறிது சிறிதாக பள்ளியின் தரத்தை உயர்த்தினேன்.
கரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், திறன்பேசி வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன்.
எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
கரோனா காலத்தில் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடந்தன. அதையும் என்னால் இயன்ற அளவு தடுத்து நிறுத்தினேன் எனக் கூறுகிறார் ஆசிரியை மகாலட்சுமி.
No comments:
Post a Comment