பாலியல் சீண்டலுக்கு தீர்வுதான் என்ன? - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

பாலியல் சீண்டலுக்கு தீர்வுதான் என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் வசிக்கும் தனது மகனை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுவனிடம் 20 ரூபாயைக் கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஒருவர் வாய்வழி உறவில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் புகாரளித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2018ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார் ஓஜா “குற்றவாளி சிறுவனிடம் தகாத முறையில் பாலியல் செய்கையில் ஈடுபட்டிருந்தாலும், முறையான உறுப்பில் வன்புணர்வு செய்யாததால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போக்சோ சட்ட விதிகளின் படி தவறானது” என்று குறிப்பிட்டது வேடிக்கையானது.

10 வயது சிறுவனை பாலியல் சீண்டல் என்ற பெயரில் அவனது வாய் வழியாக வன்புணர்வு செய்த  குற்றவாளிக்கு தவறான போக்சோ சட்ட விதிகளின் படி 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி அவரது தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் தண்டனை குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த பரபரப்பான தீர்ப்பு நாடு முழுவதும் அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 கடந்த ஏப்ரல் மாதம் நாக்பூர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் சிறுமியின் ஆடையின் மேலே தொட்டு சீண்டியது பாலியல்வன்கொடுமை குற்றச் சாட்டின் கீழ் வராது என்று கூறியிருந்தார். 

 இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு பெண் நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, ஆடைமேல் சீண்டினாலும் அது பாலியல் வன்கொடுமை தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ள நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு மீண்டும் நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிபதிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவது நீதித் துறையின் மீதான மரியாதையை பெரிதும் குறைக்கும் - குலைக்கும்!

குற்றவாளியின் நோக்கம் என்ன என்பதே இதில் முக்கியமானதும், கருத்தில் கொள்ளத்தக்கதாகவும் இருக்கும்.

ஆடையைத் தொடுவதன் நோக்கம் என்ன என்கிற பொதுப் புத்தியே அதனைத் தெளிவுபடுத்தி விடும். பெண்ணாக இருந்தும் ஒரு நீதிபதி இப்படிக் கூறுவது அதிர்ச்சிக்குரியது.

அண்மைக்காலமாக பாலியல் சீண்டல், தொல்லை என்பது அன்றாட செய்தியாகி விட்டது.

நம் நாட்டுக் கலைத் துறையும் இணைய தளங்களின் போக்கும் இதனை விரைவுபடுத்து கிறதோ என்று கருத வேண்டியுள்ளது.

கல்வியாளர்கள், மருத்துவர்கள், சமூக இயலா ளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தி இதற்கொரு முடிவை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment