கனடா நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற தமிழ்நாட்டு பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

கனடா நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற தமிழ்நாட்டு பெண்

நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் பாதுகாப்பாக உணர்வதையே எனது முதல் கடமையாக கருதுகிறேன்.

கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டு அரசாங்கத்தில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், தற்போது கனடாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 

அனிதாவின் தாயார், மருத்துவர் சரோஜ் ராம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை மருத்துவர் சுந்தரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் 1965ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்தனர்.

54 வயதாகும் அனிதா, கனடாவிலுள்ள நோவா ஸ்காட்டியாவில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். தற்போது தனது கணவர் ஜான் மற்றும் தனது 4 குழந்தைகளுடன், ஆண்டாரியோவில் உள்ள ஓக்வில்லி நகரத்தில் வசித்து வருகிறார்.

கல்வியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அனிதா, டால் ஹவுஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டம், டொரன்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் என இதுவரை நான்கு பட்டங்கள் பெற்றிருக்கிறார்.

பன்முகத் திறமை கொண்ட அனிதா, 1994ஆம் ஆண்டு ஆண்டாரியோ பார் கவுன்சில் அதிகாரியாகவும், 1997ஆம் ஆண்டு வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும், 1999ஆம் ஆண்டு குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும் பணி யாற்றினார். 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகத்தின் நெறிமுறைகள் குறித்த திட்டங்களுக்கு கல்வி இயக்குனராக பணியாற்றினார்.

பெரு நிறுவன நிர்வாகம், முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் நிதிச் சந்தை விதிமுறைகள் ஆகியவற்றில் முழுமையான ஆராய்ச்சியை முடித்து, நிபுணத்துவம் பெற்ற அனிதா 2015ஆம் ஆண்டு ஒன்டாரியோ அரசாங்கத்தின் நிதி ஆலோசனை மற்றும் நிதிக் கொள்கையை பரிசீலிக்கும் நிபுணர் குழுவில் நியமிக்கப்பட்டார். பின்பு, 2019ஆம் ஆண்டு ஓக்வில்லி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராகப் பணியாற்றினார்.

கரோனா பரவல் ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் கனடா அரசாங்கத்தின் கொள்முதல் அமைச்சராக அனிதா பணியாற்றியதால், உடனடியாக தடுப்பூசி

களைப் பெறுவதற்காக பல திட்டங்களை தீட்டி பல்வேறு தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்தார். கனடாவின் அனைத்து மக்களுக்கும் தேவையான பரிசோதனைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு (2021) கனடா நாடாளுமன்றத்தில் நடந்த தேர்தலில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா அரசாங்கத்தின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரியும் இரண்டாவது பெண் அனிதா. நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் பாதுகாப்பாக உணர்வதையே எனது முதல் கடமையாக கருதுகிறேன். அவர்களின் மரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாதுகாப்பது அவசியமானதாகும் எனக் கூறி செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment