பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

பெண்களை பாதிக்கும் தைராய்டு நோய்

ஆண்களுக்கு இருப்பதை விட பெண்களுக்கு அய்ந்து முதல் எட்டு மடங்கு  அதிகமாக தைராய்டு வருகிறது என்பதும்  தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் வரை அவர்களின் நோய் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

உண்மையில்,  ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது  தைராய்டு கோளாறுகளை சந்திக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.தற்போது உள்ள வாழ்க்கை சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் ஒரு  ஹார்மோன் பிரச்சனையாகவே இந்த தைராய்டு நோய்  உள்ளது.எனவே இந்த தைராய்டு  பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் ஆயுர்வேதத்தில் இதற்கான சிறப்பான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

தைராய்டு என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது எண்டோகிரைன் சிஸ்டம் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒரு பகுதி. நம்  உடலின் பல செயல்பாடுகளை ஒருங்கிணைக்க எண்டோகிரைன் அமைப்பு செயல்படும். அதில் தைராய்டு சுரப்பி, நம்  உடலின் வளர்சிதை மாற்றங்களான இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, செரிமானம் மற்றும் எவ்வளவு விரைவாக கலோரிகளை உடல் பயன்படுத்துகிறது போன்றவற்றை தனது ஹார்மோன்கள் மூலம் கட்டுப்படுத்துகின்றது.

தைராய்டு சுரப்பி ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இதன் செயல்பாடுகள் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணு, திசு மற்றும் உறுப்புகளையும் பாதிக்கும். ஒரு சாதாரண அளவிலான தைராய்டை கழுத்தில் பார்க்க முடியாது, அதை உணரவும் முடியாது. சில நோய் நிலைகளில்  தைராய்டு சுரப்பியில் (கோயிடர்)  மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தைராய்டு கழுத்தில் ஒரு வீக்கம் போல காண முடியும் அல்லது உணர முடியும்.இது உடலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத கோயிடர் முதல், உயிருக்கு ஆபத்தான தைராய்டு புற்றுநோய் வரை எந்த நோயாகவும் இருக்கலாம்.

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு சுரப்பி, டி 3 மற்றும் டி 4 என்று 2 முக்கிய ஹார்மோன்களை உருவாக்குகிறது . இந்த ஹார்மோன்களை உருவாக்க தைராய்டுக்கு போதுமான அளவு அயோடின் தேவை. இங்கு சிறிய அளவில்  உற்பத்தி செய்யப்படும் மற்றொரு ஹார்மோன் கால்சிட்டோனின் (). இது, நம்  ரத்தத்திலுள்ள  கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்தும். இந்த தைராய்டு ஹார்மோன்கள் உருவாவது மூளையில் உள்ள பிட்யூட்டரி  சுரப்பியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால் நம் உடலில் பல பாதிப்புகள் உருவாகின்றன.

தைராய்டு நோய் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,  வளர்இளம் பருவத்தினர் மற்றும் முதியவர்கள் என யாரையும் பாதிக்கலாம். இது பிறக்கும்போதோ,  பெண்களுக்கு பூப்படையும் வயதிலோ, கர்ப்ப காலத்திலோ, குழந்தை பிறந்த பிறகோ அல்லது மாதவிடாய் நின்ற பிறகோ கூட ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு கோளாறுகள், இதய நோய், உயர் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற பிற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஆகையால் மருத்துவரின் அறிவுரை படி ரத்த பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள்  செய்து கொண்டு தக்க சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment