ஜெய்ப்பூர், நவ. 30- தாழ்த்தப்பட்டவர்கள் குதிரையில் வரக்கூடாது என்று கூறி திருமண ஊர்வலத்தில் குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மணமகனை கற்களால் உயர்ஜாதியினர் தாக்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே உள்ளது கெரோடி கிராமம். உயர் ஜாதிப் பிரிவினர் அதிகமாக வசிக்கும் இங்கு, தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தின் வரலாற்றில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட சமூக வாலிபர் ஒருவர், கடந்த 25.11.2021 அன்று இரவு குதிரை மீது மாப்பிள்ளை ஊர்வலம் நடத்தினார். இதற்கு, அந்த கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதிப் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பாதுகாப்பாக சென்றனர். இருப்பினும், ஒரு இடத்தில் ஊர்வலம் வரும்போது திடீரென ஒரு கும்பல் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியது.
நாலாபக்கத்திலும் இருந்தும் 15 நிமிடங்களுக்கு மேல் இடைவிடாமல் கற்கள் பறந்து வந்து தாக்கியதில் காவல்துறையினரும் காயமடைந்தனர். இது தொடர்பாக, 10 பேரை காவல்துறையனிர் இதுவரையில் கைது செய்துள்ளனர்.
வினாத்தாள் வெளியானது உ.பி.யில் ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து
லக்னோ, நவ. 30- வினாத்தாள் வெளியானதால் உத்தரப்பிரதேசத்தில் 28.11.2021 அன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதாக இருந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் மாநிலம் முழுவதும் 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரசுக்கு முறைப்படி காவல்துறையினர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
லக்னோவில் பேட்டியளித்த ஆரம்பக் கல்வி அமைச்சர் சதீஷ் திவிவேதி கூறுகையில், ‘‘வினாத்தாள் வெளியானதால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மூலம் விசாரணை நடத்தப்படும். இன்னும் ஒரு மாதத்தில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். தேர்வு ரத்தானது தெரியாமல் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மய்யங்களுக்கு வந்தவர்கள் தங்கள் தேர்வுக்கான அனுமதி அட்டையைக் காட்டினால் அவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக வீடு திரும்ப அனுமதிக்கப் பட்டுள்ளனர்’’ என்றார்.
No comments:
Post a Comment