ஹெபடைடிஸ் கல்லீரலை பாதிக்கும் நோய். சில வைரஸ்கள் கல்லீரலை மட்டுமே பாதிக்கும். அந்த தாக்கத்தினை வைரல் ஹெபடைடிஸ் என்று குறிப்பிடுவோம். வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்தவும் அதை குணமாக்கவும் கொடுக்கப்படும் சிகிச்சை முறை தான் ஆன்டி வைரல் தெரபி. என்னென்ன வைரஸ் கல்லீரலை தாக்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி விளக்குகிறார் கல்லீரல் நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ்.கரோனா என்பது ஒரு வைரஸ். இது நுரையீரலை தாக்குவதால், மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சினை போன்றவை ஏற்படுகிறது. அதே போல் எச்.அய்.வி என்பதும் ஒரு வைரஸ் கிருமி. இது போன்ற வைரஸ் கிருமிகள் தாக்கும் போது அது நம்முடைய உடலில் பலவிதமான பாதிப்பினை ஏற்படுத்தும். வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க கொடுக்கப்படுவதுதான் ஆன்டி வைரல் தெரபி.
கல்லீரலைப் பொறுத்தவரை எல்லா வைரஸ் கிருமிகளும் அதனை பாதிக்காது. சில வைரஸ் கிருமிகள் மட்டுமே அதனை முழுமையாக பாதிப்படைய செய்யும். அதே சமயம் அந்த பாதிப்பில் இருந்து பாதுகாக்க தற்போது பல மருந்துகள் உள்ளன. இந்த மருந்தினை டாக்டரின் சிகிச்சையின் பேரில் எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமாகலாம்.
கல்லீரலை ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ மற்றும் ஹெபடைடிஸ் எஃப் போன்ற வைரஸ்கள் பாதிப்பினை ஏற்படுத்தும். இதில் ஹெபடைடிஸ் ஏ பாதிப்பிற்கு என தனிப்பட்ட மருந்து எல்லாம் கிடையாது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஆன்டி வைரல் மருந்துகள் உள்ளன. இவை அந்த வைரல் மேலும் கல்லீரலை பாதிக்காமல் கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் பூரணமாக குணமாக்கும். ஹெபடைடிஸ் டி, இ மற்றும் எஃப் வைரசும் கல்லீரலை பாதிக்கும். இதில் ஹெபடைடிஸ் பி, சி, வைரஸ்கள் கொஞ்சம் சீரியசானவை என்பதால், இதற்கு மட்டும் மருந்துகள் உள்ளன. மற்ற ஹெபடைடிஸ் வைரஸ்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் கிடையாது. காரணம் இதனால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மிகவும் குறைவு.
இவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகிவிடுமே தவிர பெரிய அளவில் கல்லீரலை பாதிக்காது. சில சமயம் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்படாது... அதுவே தானாக குணமாகிவிடும். அதே சமயத்தில் மருந்து உட்கொள்ளக்கூடிய வைரஸ்கள் எல்லாம் மருந்தை எடுத்துக் கொண்டால் மட்டுமே குணமாகுமே தவிர அது தானாகவே குணமாகாது.
சிலருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படும், அதற்கான சிகிச்சை முறையினை பின்பற்றி குணமாகிவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. இது சாதாரண வைரஸ் பாதிப்பு தான். ஆனால் அதுவே பி, சி வைரஸ் என்றால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நாளடைவில் கல்லீரல் முழுமையாக பாதிப்படையும். காரணம் இந்த இரண்டு வைரஸ்களும் கல்லீரலில் சிரோசிஸ் மற்றும் புற்றுநோய் உண்டாக்கும். நிறைய நோயாளிகளுக்கு சிகரெட் மற்றும் மது பழக்கம் இருக்காது. ஆனால் அவர்களுக்கு கல்லீரலில் கட்டி, சிரோசிஸ் பாதிப்பு அல்லது இவர்களுக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பாசிடிவ் என்று காண்பிக்கும்.
இந்த மூன்றில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது புற்றுநோயின் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஹெபடைடிசிற்கு மருந்து இருப்பதால், ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் அதனை 100% குணப்படுத்தலாம். அதே சமயம் ஹெபடைடிஸ் பாதிப்பினை ஆய்வு செய்யாமல் அதன் பாதிப்பினை கண்டறிய முடியாது.
ஹெபடைடிஸ் வைரஸ் ரத்தத்தில் தான் கலந்திருக்கும். அதற்கான ரத்த பரிசோதனை செய்யும் போது தான் கண்டறிய முடியும். காரணம் ஹெபடைடிஸ் பி மற்றும் சி பாதிப்பு ஏற்பட்டால் அதன் அறிகுறி ஒருவருக்கு 15 அல்லது 20 வருடங்கள் கழித்து தான் தெரியவரும். அது வரை இந்த வைரஸ் கல்லீரலை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து லிவர் சிரோசிஸ் பாதிப்பு கடைசி நிலையை வந்தவுடன் தான் அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த வைரஸ்களுக்கு ஊசி எல்லாம் கிடையாது. மருந்து மட்டும் தான். அதை டாக்டரின் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொண்டால் எளிதில் குணமாக்கலாம்.
எவ்வாறு கண்டறியலாம்
* ஒருவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்தாலோ அல்லது மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்கள் கட்டாயம் பி அல்லது சி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் விசா எடுக்கும் முன் ஆய்வு செய்ய சொல்கிறார்கள். அந்த சமயத்தில் ரத்த பரிசோதனை செய்யும் போது கண்டறியலாம்.
* ரத்த தானம் செய்யும் போது அவர்களின் ரத்தத்தினை முழுமையாக பரிசோதனை செய்வார்கள். அப்போது கண்டறிய முடியும்.
* பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது, எச்.அய்.வி மட்டுமில்லாமல் ஹெபடைடிஸ் பிரச்சினை குறித்தும் ஆய்வு செய்வார்கள். அதன் மூலம் அவர்களுக்கு வைரசின் பாதிப்பு உள்ளதா என்று தெரிய வரும். கர்ப்பிணி பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்த வைரசின் பாதிப்பு இருந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், கண்டிப்பாக குழந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது. பொதுவாக இந்த வைரஸ் ரத்தம் மூலமாகத்தான் ஒருவர் உடலில் இருந்து மற்றவருக்கு பரவும். சேமிக்கப்பட்ட ரத்தத்தில் வைரசின் பாதிப்பு இருந்து அதை சரியான முறையில் ஆய்வு செய்யாமல் இருந்திருந்தால், அந்த ரத்தம் மற்றவர்களுக்கு செலுத்தப்படும் போது, அவர்களையும் அந்த வைரஸ் பாதிக்கும். ஆனால் இப்போது ரத்த வங்கியில் அனைத்து விதமான ஆய்வுகள் செய்யப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு அவர்களை சிகிச்சையினை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment