நம்மை வருத்திக் கொண்டு போராடி வெற்றி பெற்றதுதான் சமூகநீதி!
கும்பகோணம்: ‘நீட்’ தேர்வு ஒழிக்கப்படவேண்டும் - ஏன்? எதற்கு? கருத்தரங்கத்தில்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
கும்பகோணம், அக்.13 சமூகநீதிக்காக வன்முறையில் இறங்கினாரா, பெரியார்? போராட்டம் - நம்மை வருத்திக் கொண்ட போராட்டம் - தன்னை வருத்திக் கொண்ட போராட்டம்தான் சமூகநீதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 3.10.2021 அன்று காலை 10.30 மணியளவில் கும்பகோணம் ராயாஸ் அனுக்கிரஹா மகாலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘நீட்' தேர்வு ஒழிக்கப்படவேண்டும் - ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் இறந்த பிறகு, அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்த என்னால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டார்.
ஆனால், கலைஞர் அவர்கள் செய்யவேண்டியதை யெல்லாம் செய்து முடித்து, அதற்கப்பாலும் செல்லுவேன் என்று சொல்லக்கூடிய இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்வதைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டு சாகிறேனே என்று கவலைப்பட்டார் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய கடைசி கூட்டத்தில்.
சூத்திரப்பட்டம் நீங்கியது என்று சொல்லி, இன்றைக்கு இந்த மேடையில் நம்முடைய சகோதரர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசினார்களே,
இன்றைக்கு ஒரு ஒடுக்கப்பட்டவன் கோவிலில் மணியாட்டுகிறான். அதனால், என்ன கெட்டுப் போயிற்று?
நாங்கள் எவ்வளவு நாள்களாக கேட்டோம், இதே இடத்தில், பக்கத்தில் கடைசியாக நடைபெற்ற கூட்டத் தில்கூட கேட்டோமே!
என்ன பெரிய மாறுதல்? பெரிய மணியை நம்மாள் கையில் கொடுத்துவிட்டான். இவன் சட்டையைக் கழற் றிப் போட்டுவிட்டு, ‘டங்கு டங்கென்று' வியர்க்க விறு விறுக்க அந்த மணியை அடித்துக் கொண்டிருக்கிறான்.
அதிலும் அந்தப் பயல் கெட்டிக்காரன் - நன்றாக சாப்பிட்டு, ரோடு ரோலராக இருக்கிறவன் கையில் பெரிய மணியைக் கொடுக்காமல், சின்ன மணியை கையில் கொடுத்து ஆட்டச் சொல்கிறார்கள்.
நம்மாள் எலும்பும் தோலுமாக இருக்கின்றவனிடம் பெரிய மணியை கொடுத்து, அவன் மூச்சு வாங்க அடித் துக் கொண்டிருக்கிறான் - இது ஏன் என்று கேட்டோம்.
நந்தன்கள் - உள்ளே மணியாட்டுவார்கள் - நடராஜ அய்யர்கள் எல்லாம் வெளியே நின்று கும்பிடுவார்கள்
நந்தன் கதை என்பது என்ன?
நடந்ததா, இல்லையா? என்பது பிறகு இருக்கட்டும்.
கதைப்படி தீயில் இறங்கிய பிறகு, நந்தா, அப்போ வாவது உள்ளே வா என்று கூப்பிட்டு இருக்கவேண்டும் அல்லவா - நடராஜன், நந்தனை கூப்பிட்டாரா? இல்லையே!
‘‘நந்தியே விலகி இரு!'' என்றார்.
அப்படியென்றால், அங்கே இருந்துதான் நீ பார்க்க வேண்டுமே தவிர, உள்ளே வர முடியாது என்பதுதானே!
நந்தனை, நந்தியை விலகச் சொல்லி, வெளியே நிறுத்திய காலம் போய், பெரியாருடைய புரட்சி, ஸ்டாலின் புரட்சியாக வந்து, நந்தன்கள் வரலாம் - உள்ளே மணியாட்டுவார்கள் - இந்த நடராஜ அய்யர்கள் எல்லாம் வெளியே நின்று கும்பிடுவார்கள் என்கிற புரட்சி இருக்கிறதே, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், ஒரு ஆயுதத்தை எடுக்காமல் செய்தாரே, அதுதான் பெரியாருடைய சாதனை.
தன்னை வருத்திக் கொண்ட போராட்டம்தான் சமூகநீதி!
வன்முறையில் இறங்கினாரா, பெரியார்? இல்லையே! போராட்டம் - நம்மை வருத்திக் கொண்ட போராட்டம் - தன்னை வருத்திக் கொண்டு போராடி வெற்றி பெற்றதுதான் சமூகநீதி.
ஆகவே, ஒரு பெரிய மாற்றம் - அந்தப் பெரிய மாற் றத்தைக் கூடாது என்பதற்காகத்தானே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்கிறது.
ஜாதியைப்பற்றி இங்கே சொன்னாரே, சந்திரசேகரன் உரையாற்றும்பொழுது.
விவேகானந்தர்மீது நம்முடைய இடதுசாரி தோழர் களுக்கே ஒரு மயக்கம். விவேகானந்தர் என்றால், ஒரு பெரிய ஜாதி ஒழிப்பு வீரர் மாதிரி - முற்போக்கு முத்திரை பதித்தவர் என்று.
ஆனால், நடைமுறை உண்மை என்ன என்பதை நன்றாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
எனவே நண்பர்களே, மிகப்பெரிய அளவிற்கு, ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லக்கூடிய ஆபத்து, சாதாரணமான ஆபத்தல்ல!
‘‘நரக மாளிகையின் ரகசிய அறைகள்’’
இந்த புத்தகம் மட்டுமல்ல நண்பர்களே, நேற்றுகூட தஞ்சையில் நான் உரையாற்றும்பொழுது சொன்னேன் - இது ஒரு புதிய புத்தகம் - முதலில் இங்கே வெளியிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கின்ற வர்கள் படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
இது தமிழில் வெளிவந்திருக்கிறது. இதனுடைய மூலம் மலையாள மொழியில். எழுதியவர் சுதிஷ் மின்னி என்பவர். அது தமிழில் மொழி பெயர்க் கப்பட்டு வந்திருக்கிறது.
மலையாளத்தில் அதற்கு என்ன பெயர் என்றால், ‘‘நரக சாக்கியத்தில் உள்ளளவுகள்'' - இதற்கு தமிழில் நேரிடையான தமிழ் வார்த்தை என்றால், ‘‘நரக மாளிகையின் ரகசிய அறைகள்'' என்பதுதான்.
யார் அந்த சுதிஷ் மின்னி என்றால், கண்ணூர் மாவட்டத்தில், அய்ந்து வயதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். நடத்துகின்ற ஷாகாவில் சேர்ந்து, அந்த அமைப்பில் படிப்படியாக பல பொறுப்புகள் பெற்று, படித்து வளர்ந்து, கல்வி ஆசிரியராகி, வேதக் கணிதத்தை சொல்லிக் கொடுத்த முறையில் உள்ளே புகுந்து - கடைசிவரையில் பெரிய பொறுப்புகளில் இருந்து, 25 ஆண்டுக்குள் நாக்பூரில் தலைமை நிலையம் வரை சென்றிருக்கின்றவர். அந்த அமைப்பின் நடைமுறையில் பேச்சுக்கும், நடத் தைக்கும் சம்பந்தமில்லாமல், நேர் எதிரான கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் போன்ற பல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் ஒப்புதல் வாக்குமூலமாக எழுதியிருக்கின்ற நூல்.
தத்துவ ரீதியாக வந்ததுதான் ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' போன்ற நூல்கள்.
ஒரு மேனாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரின், 25 ஆண்டு அனுபவங்களின் ஒப்புதல் வாக்குமூலம்!
ஆனால், இந்தப் புத்தகம் என்பது மிகவும் வித்தி யாசமானது - அது என்னவென்றால், ஒரு மேனாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரின், 25 ஆண்டு அனுபவங்களின் ஒப்புதல் வாக்குமூலம்.
இதுபோன்ற புத்தகங்களை வெளியில் கொண்டு வரவேண்டும்.
இங்கே எப்படி நம்முடைய திராவிட இயக்கங்கள் இருக்கிறதோ, அதுபோல கேரளாவில் இடதுசாரி கம்யூனிஸ்டு நண்பர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கிறது. அப்படி இருக்கின்ற நிலை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து விலகி, மனம் நொந்து, இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோமே - நாம் தெரிந்தே மோசடி செய்கி றோமோ என்ற குற்ற உணர்வு வந்தவுடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைவிட்டு வெளியே வந்தார். பிறகு அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியில் சேர்ப்பதற்கு மிகவும் தயங்கினார்கள். பிறகு அவரைப்பற்றி ஆய்வு செய்து, அவருக்குத் தனியே அனுமதி கொடுத்து, இந்தப் புத்தகத்தை அவர் எழுதி யிருக்கிறார்.
இதில் எழுதியிருக்கின்ற தகவல்களையெல்லாம் பார்த்தீர்களேயானால், அதிர்ச்சி அடையக்கூடிய அளவில் இருக்கிறது. யாராலும் நம்பவே முடியாத அளவிற்கு. ஏனென்றால், வெளியில் பார்ப்பதற்கும், அவர்களுடைய உள்ளார்ந்த திட்டங்களுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே கிடையாது. எந்த இயக்கமும், அதுபோன்ற ரகசிய இயக்கம் அல்ல!
ஆனால், இதுதான் அவர்களுடைய பெரிய பெரிய வித்தைகளாக, வியூகங்களாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். என்ற ஆபத்து!
எனவே, ஆர்.எஸ்.எஸ். என்ற ஆபத்து - அதுதான் அடிப்படையானது.
மாநிலத்தில் பி.ஜே.பி. ஆளுங்கட்சியாக இருக்கிறதா? முதலமைச்சராக ஆர்.எஸ்.எஸ். யாரை முடிவு செய் கிறதோ, அவர்தான் முதலமைச்சர். அவர்கள் நீண்ட கால திட்டங்களைப் போடுவார்கள் - பணத்திற்குப் பஞ்சமே இல்லை.
ஒவ்வொருவரையும் கீழே இருந்து படிப்படியாக அளந்து வைத்திருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன.
ஒரே ஒரு செய்தியை உங்களுக்கு இந்தப் புத்தகத்தில் இருந்து சொல்கிறேன்.
ஆர்.எஸ்.எஸினுடைய தலைமை நிலையம் நாக்பூர். சில முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே அனுப்புவார்கள். அப்படி அனுப்புகின்ற நேரத்தில், மிக முக்கியமான பகுதியை சொல்கிறார்.
பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஓர் அமைச்சர்
இந்தியாவில் இருக்கின்ற பொதுத் தத்துவங்கள், பொதுத் துறையில் இருக்கக்கூடிய சொத்துக்களை எல்லாம் விற்கிறார்கள். ஏற்கெனவே வாஜ்பேயி ஆட்சி யில், பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஓர் அமைச்சரை நியமித்தார்கள். அவர் வெளிப் படையாகவே ‘விற்கிறோம்' என்று சொன்னார்.
‘‘பெரிய பொருளாதாரப் புலிகள்’’
ஆனால், இப்பொழுது இருக்கின்ற பிரதமர் மோடி என்ன வித்தை காட்டுகிறார் என்றால், பொதுத் துறை நிறுவனங்களை விற்க முடிய வில்லையா? பிரித்துப் பிரித்து விற்கிறார். விமான நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்கலாம்; விளையாட்டு மைதானமா? அதில் ஒரு பகுதியை மட்டும் விற்கலாம். அடுத்தபடியாக, பொதுத் துறைகளை விற்க முடியவில்லையா? அடமானம் போட்டுவிடலாம் என்று நினைத்து - வருமானத்தை எப்படி பெருக்கவேண்டும் என்றால், அடமானம் போட்டு பெருக்கலாம் என்று கண்டுபிடித்த ‘‘பெரிய பொருளாதாரப் புலிகள்'' இவர்கள்.
யாருக்கு அடமானம் போடுகிறார்கள் - அம்பானி, அதானி - இந்தப் பெயர்களை ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டு இருக்க முடியாது. ஆனால், இன்றைக்கு எங்கே பார்த்தாலும், அம்பானி, அதானி பெயர்கள்தான்.
இன்னுங்கேட்டால், நேற்று முன்தினம்கூட, ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கி விட்டது என்று தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வெளியானது.
10 நிமிடத்திற்குள் ஒரு மறுப்பு வந்தது. அந்தச் செய்தி உறுதி செய்யப்படாத செய்தி. ஏனென்றால், அதானி வாங்கவேண்டியதை, டாடா வாங்கினால் ஒப்புக்கொள்வாரா? ஆகையால் அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று மீண்டும் செய்தி ஒளிபரப்பினார்கள்.
ஏழைகளில், ஒன்றாம் நம்பர் ஏழை யார் என்றால், இந்தியாவிலேயே அதானிதான்!
அதானி, அவர் ரொம்ப ஏழை. தரித்திர நாராயணன் - ஏழை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என்று புதிதாக கண்டுபிடித்திருக்கிறது ஒன்றிய அரசு. உயர்ந்த ஜாதியில், ஏழைகளாம்? ஏழைகளில் என்ன உயர்ந்த ஜாதி? ஏழைகள் எல்லோருக்கும் உதவி செய்கி றோம் என்று சொல் - உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் என்கிற ஏழைகள் - அந்த ஏழைகளில், ஒன்றாம் நம்பர் ஏழை யார் என்றால், இந்தியாவிலேயே அதானிதான்!
அவருக்கு ஒன்றும் அதிகமான வருமானம் கிடை யாது - ஒரு நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய்தான்!
நம்மாளில் படித்த பட்டதாரி ஒருவரை கூப்பிட்டு, ஆயிரம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று எழுதுங்கள் என்று சொல்லிப் பாருங்கள்; எழுதுவாரா?
அவர் கவுரமாக சொல்லுவார், ‘‘எழுத்தாலே எழுதி விட்டுப் போவோம்; எதற்காக பூஜ்ஜியம் போட வேண்டும்?'' என்பார்.
ஏனென்றால், எத்தனை பூஜ்ஜியம் போடவேண்டும் என்று பல பேருக்கு சந்தேகம்தான்.
கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று தெரியாத ஒரு நாட்டில், ஆயிரம் கோடி ரூபாய் ஒரு நாளைக்கு லாபம் சம்பாதிக்கும் அதானி யார்?
இராமநாதபுரத்தில்கூட பிரித்துக் கொடுத்திருக்கிறார் கள், கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசாங்கம். ஆட்சியில் இருந்தபோது.
அதானியைப்பற்றி நமக்கெல்லாம் தெரியாத ஒரு செய்தி இந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது எனக்குத் தெரிந்தது. அதை உங்களுக்குச் சொல்கிறேன்.
அதானி ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு அடிப்படை வேர் எங்கே இருக்கிறது?
‘‘ஆர்.எஸ்.எஸினுடைய தலைமை நிலையம் நாக்பூர். சில முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே அனுப்புவார்கள். அப்படி என்னை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்.
சங்கத்தின் மிகப்பெரிய செயல் அலுவலகம். நூற்றுக் கணக்கான ஏக்கரில் பரவிக் கிடக்கின்ற சங்க அலுவலகம்.
ஒவ்வொரு சங்க சுயம் சேவகனின் மனதிலும், உயிர்த் துடிப்பாக இருக்கும் டாக்டர் ஜி (ஹெட்கேவார்). மிகப்பெரிய அளவில் நிறைய கட்டடங்கள், பயிற்சி மைதானம் ஆகியவை அமைந்திருக்கின்றன.
அகில இந்திய தலைமையகம். இவையெல்லாமே இந்தியில்தான் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு இந்தி தெரியாது - பக்கத்தில் இருந்தவர்தான் மொழி பெயர்த்துச் சொன்னார்'' என்று சொல்கிறார் கேரள நண்பர்.
‘‘பெரிய அளவிற்கு நான் இன்றியமையாதவன் என்று சொன்னார்கள். பலரை அழைத்து அங்கே தங்க வைத்திருந்தார்கள். குளிரூட்டப்பட்ட அறையில்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிகள் தொடங்க ஆரம்பித்தன.
பைய்யா ஜி தோஷிதான் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த வர்த்தகப் பிரமுகர்கள் அந்த சபையில் வீற்றிருந்தனர். தற்போதைய முக்கிய தொழிலதிபரான அதானியும் அந்த சபையில் இருந்தார். அவர் நிகழ்ச்சி யில் யோகா செய்து காண்பித்தார்.''
ஆக, அதானி ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு அடிப்படை வேர் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். எங்கே அவருக்குப் பாதுகாப்பு இருக் கிறது பாருங்கள் - இதுதான் ஆர்.எஸ்.எஸ்.
முதலாளிகள் என்பவர்களில்கூட யார் அந்த இயக் கத்தை வளர்ப்பார்கள் - யார் அந்த இயக்கத்துக்காரர்கள் என்பதுதான் அவர்களுக்கு மிக முக்கியமானது..
தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்
ஆக, இந்த ஆபத்துகள் எல்லாம் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குப் போகிறது என்று மட்டும் நினைக்கவேண்டாம். சமூகநீதிக்கு மரண அடி - எப்படியென்றால், இட ஒதுக்கீடு தனியார்த் துறையில் கிடையாது. ஆகவேதான், தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.
ஆகவே, இதுபோன்ற தகவல்களையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இதுபோன்ற புத்தகங்களையெல்லாம் படிக்கவேண்டும்; குறிப் பாக நம்முடைய இளைஞர்கள், தாய்மார்கள் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’
இன்றைக்கு உலகத்திலேயே இரண்டே தத்துவங் கள்தான். ஆர்.எஸ்.எஸினுடைய தத்துவம் - வருணா சிரம தர்மத்தைப் பாதுகாப்பது.
எல்லோருக்கும் எல்லாமும் கூடாது; அது தலை யெழுத்து என்பது.
ஒரே வரியில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், சுயமரியாதை தத்துவம். அதைத்தான் சமூகநீதி நாளாக - உறுதிமொழியாக எடுக்க வைத்தார், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment