முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முயற்சியால்
செந்தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுநிலை
பெற்றதும் மகிழ்ந்ததே தமிழினம் உலகெலாம்!
ஒன்றிய ஆட்சியில் பங்குபெற் றிருந்த
அன்றைய சூழலை நன்றாய்க் கொண்டே
செம்மொழி நிறுவனம் சென்னை நகரில்
செம்மை நிலையில் இயங்கிட வைத்தார்;
கட்டடம் அமையவும் திட்டம் வகுத்தார்;
செம்மொழி கண்ட செம்மல் கலைஞர்
தம்முடைப் பங்காய்ப் பெருநிதி வழங்கிச்
செம்மொழி அறிஞர் விருது நிறுவினார்;
“கலைஞர் செம்மொழி அறிஞர் விருது”
ஆண்டுக்கு ஒருவராய் அறிஞர் பெற்றிட
அருமைத் திட்டம் அவரே வகுத்தார்;
பத்தாண்டுகளாய் உறங்கிக் கிடந்த
அவரது திட்டம் தளபதி ஆட்சியில்
அடைந்ததே மாட்சி! அகமிக மகிழ்ந்தோம்!
அறிஞர் பதின்மரைத் தெரிவு செய்தே
அறிவித்த செய்தி தமிழர் அனைவரும்
அளவிலா மகிழ்வு அடையச் செய்ததே!
மாண்பார் முதல்வர் தளபதி அவர்களே!
நன்றி! நன்றி! வாழிய பெரும!
இன்று புலவர் இனிதாய்ப் போற்றிடப்
பல்வேறு செயல்களால் தமிழ்மறு மலர்ச்சி
மீண்டும் ஏற்பட வழியமைக் கிறீர்கள்!
தமிழ்படித் தோர்க்கே வேலை வாய்ப்பு
தமிழ்வழிக் கல்விக்குச் சலுகையும் சிறப்பும்
உலகமெங்கும் உயர்தமிழ்க் கல்வி
என்றெலாம் ஏற்றம் இன்று காண்கிறோம்!
ஒன்றிய ஆட்சியில் தமிழும் இடம்பெற
ஒல்லும் வகையெலாம் உரிமை முழக்கம்
வெல்லும் காலம் தங்களால் அமையும்!
நன்றி பெரும! உளமார் நன்றி!
விருது பெற்ற பதின்மரில் ஒருவனாய்
கலைஞர் போற்றிய இலக்குவர் மகனாய்
கனிந்த அன்புடன் வாழ்த்தி வணங்கினேன்!
காலம் கொடுத்த கொடையே வாழ்க!
ஞாலம் போற்றிடும் தலைவரே வாழ்க!
- மறைமலை இலக்குவனார்
No comments:
Post a Comment