அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஒன்றிய தேர்வாணையத்தின் மேனாள் உறுப்பினருமான திரு. பாலகுருசாமி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை - சமூகநீதிக்கு எதிராக துரும்பு கிடைத்தாலும் தூணாகப் பெருக்கிக் காட்டும் 'தினமலரில்' 6 பத்தி தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையில் கல்வியாளர்களும் நிபுணர்களும், நிர்வாகிகளும் கொண்ட குழு தனது அறிக்கையைக் கொடுத்துள்ளது என்றால், அதற்குரிய மதிப்பைக் கொடுத்து ஆய்வு செய்யாமல், சாலை ஓரத்தில் காய்த்துத் தொங்கும் மாங்கனியைக் கல்லு கொண்டு அடிக்கும் பேர் வழிபோல விமர்சித்திருப்பது- அவர் படித்த படிப்புக்கும், வகித்த பதவிகளுக்கும் சற்றும் பொருத்தமற்றது.
சமூகநீதி, இடஒதுக்கீடு என்று வரும் போதெல்லாம் எப்பொழுதுமே மேல் ஜாதி மனப்பான்மையுடன் அணுகிக் கருத்துக்களைக் கூறுவது அவரின் வழமையான அணுகு முறையே! அந்த வகையில் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் குழுவினரின் அறிக்கையையும் அணுகி இருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
'நீட்'டுக்கு ஆதரவானவர்கள் எப்பொழுதும் பேசி வரும் - பல நுழைவுத் தேர்வு சுமைகளைக் குறைப்பதுதான் நீட்டின் நோக்கம் என்று கூறுகிறார். இதுதான் முக்கியமா? பல தேர்வுகள் எழுதுவதால் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கக் கூடுமே.
இரண்டாவதாக இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி திட்டங்கள் இருக்கும் போது +2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று கேட்கிறார்.
நாமும் திருப்பிக் கேட்கலாம். இந்தியா முழுவதும் பல்வேறு கல்வித் திட்டங்கள் நிலவும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் 'நீட்' நடத்துவது எந்தவூர் நியாயம்?
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து கொண்டு தான் வந்தது. அதனால் என்ன கெட்டு விட்டது- எந்த வகையில் தரம் குன்றிப் போய் விட்டது? அதற்கான புள்ளி விவரங்கள் உண்டா என்பது முக்கிய கேள்வியாகும்.
'நீட்' தேர்வால் பலன் பெற்றவர்கள் யார்? பலன் பெற முடியாமல் நிராகரிக்கப்பட்டவர்கள் யார்? என்பதுபற்றி 'மெத்தப் படித்த' இந்தக் கல்வியாளர்களுக்குக் கவலையில்லை என்றால், இவர்கள் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதி உடையவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது.
கல்வி நெறிக் காவலர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு போன்றவர் களுக்கு இருந்த பார்வை இவர்களுக்கு இல்லாதது ஏன்?
மேல் தட்டுப் பிறப்பு, மேல்தட்டு சவகாசம் - இவைதான் இவர்களுக்கு இரண்டு கால்களாக இருந்து வந்திருக்கின்றன.
நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு புள்ளி விவரங் களுடன் முதல் தலைமுறையினர் எந்த அளவு பாதிக்கப்பட் டுள்ளனர், அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த அளவுக்குப் பாதிக் கப்பட்டுள்ளனர் என்றெல்லாம் அட்டவணை வெளியிட்டுள்ளதே.
அவை எல்லாம் இவர்களின் கண்களுக்குத் தெரியவே தெரியாதா?
'நீட்'டில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து அதற்கென்றுள்ள பயிற்சி நிறுவனங்களில் பல ஆண்டுகள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே - இதனை மனமுவந்து ஏற்கும் மனநிலையில்தான் இந்த மனிதர்கள் இந்தச் சமூகத்தில் வாழ்கிறார்களா?
71 விழுக்காட்டினர் மறுமுறை மறுமுறை (Repeaters) தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்துள்ளனர் என்று ஆதாரத்தோடு ஏ.கே. ராஜன் நிபுணர் குழு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளதே.
இந்த நிலை நியாயமான ஒன்று என்றுதான் இவர்கள் கூறப் போகிறார்களா? எல்லோராலும் இலட்சக்கணக்கில் செலவிட இயலுமா?
ஏற்கெனவே படித்த குடும்பங்களிலிருந்தும், பணக்காரக் குடும்பங்களிலிருந்தும், மருத்துவம் படித்து டாக்டர்கள் ஆன வர்கள். கிராமப் பகுதிகளில் பணியாற்ற முன்வருவார்களா?
ஏற்கெனவே அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்புக்காக 50 விழுக்காடு இருந்ததே. அதனை ஒன்றிய அரசு ரத்து செய்ததே - இதுபற்றி எல்லாம் இவர்கள் 'திருவாய்' மலர்ந்ததுண்டா?
இந்த நிலை தொடர்ந்தால் கிராமப் பகுதிகளில் பணியாற்ற யார் முன் வருவார்கள்?
சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று - அந்தக் கண்ணோட்டத்தில்தான் நீதிபதி ஏ.கே. ராஜன் நிபுணர் குழு நீட் பிரச்சினையை அணுகி, தக்க புள்ளி விவரங்களுடனும், ஆதாரத்துடனும் அறிக்கை கொடுத் துள்ளார்கள்.
பங்களாவில் குரோட்டன்ஸ் செடிகளின் மத்தியில் வாழும் மேல் தட்டு மனிதர்கள் எப்படி இருப்பார்கள், பிரச்சினைகளை அணுகுவார்கள் என்பதற்கு திரு. பாலகுருசாமிகள் எடுத்துக்காட் டானவர்கள். இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது - அவ்வளவு தான்!.
No comments:
Post a Comment