க.அஷோக்வர்தன் ஷெட்டி
இந்துக் கோயில்களை அரசின் மேற்பார்வையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று சில தரப்பினர்களிடமிருந்து கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. இது வரலாற்றின் படிப்பினைகளை மறப்பதற்கான ஓர் உதாரணமாகும். ஏனெனில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசு, 19ஆம் நூற்றாண்டில் இதே கொள்கையைத்தான் செயல்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து இந்து திருக்கோயில்கள் இன்று வரையில் மீளவில்லை.
திருக்கோயில்களின் ‘பாதுகாவலராக’ அரசு
வரலாற்றுரீதியாக, ‘மதம் மற்றும் அரசைப் பிரித்தல்’ என்ற கருத்து இந்து சமயத்துக்குப் புறம்பானதாகும். இந்து மத மன்னர்கள் கோயில்களைக் கட்டினார்கள். பணம், நகைகள் மற்றும் வருமானம் தரும் விவசாய நிலங்களை நன்கொடையாக வழங்கினார்கள். கோயில் விவகாரங்களை ஒழுங்குபடுத்தினார்கள். கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் ‘சமய நிறுவனங்களின் கண்காணிப்பாளர்’ பற்றிய குறிப்பும் உள்ளது.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்டபோதும், இந்தப் பழமையான பாரம்பரியத்தைத் தொடர்ந்தது. பிரிட்டிஷ் கலெக்டர்கள் திருக்கோயில்களைச் செம்மையாக நிர்வகித்து, சமயப் பண்டிகைகளை உரிய வகையில் நடத்தினர். இந்துக்கள் அவர்களைத் ‘தங்கள் மதத்தின் நட்பான பாதுகாவலர்’ என்று உயர்வாகப் போற்றினார்கள். ஆனால், ஒரு கிறித்துவ அரசு, ‘உருவ வழிபாட்டு முறையை’ ஊக்குவிப்பதை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள கிறித்துவ சமய நெறியினரும் ஆர்வலர்களும் விரும்பவில்லை. அவர்கள் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1833இல் கிழக்கிந்திய கம்பெனியின் சாசனத்தைப் புதுப்பிக்கும்போது, இந்து திருக்கோயில்களின் நிர்வாகத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனி விலக வேண்டும் என பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிபந்தனை விதித்தது.
அரசின் கண்காணிப்பிலிருந்து விடுபட்டதும், நேர்மையற்ற அறங்காவலர்கள், பக்தர்கள் கடவுளுக்கு வழங்கிய காணிக்கைகளைத் தன்வசப்படுத்தினார்கள். கோயில் நிதி, நகைகளை அபகரித்தார்கள். கோயில் நிலங்களைக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு விட்டனர் அல்லது விற்றனர். சில அறங்காவலர்கள் கோயில்கள் மீது தனியார் உரிமையை வலியுறுத்தினார்கள். அறங்காவலர்களின், அர்ச்சகர்களின் பதவிகள் விற்கப்பட்ட பல நிகழ்வுகளும் அரங்கேறின. உத்தரப் பிரதேசத்தில் உள்ள விந்தியாச்சல் கோயிலில், சில அறங்காவலர்கள் முஸ்லிம்களுக்குத் தங்கள் உரிமைகளை விற்றனர். மேலும், நிலையான நிதி ஆதாரமின்மை காரணமாக, கோயில் சடங்குகளும், பூசைகளும் நிறுத்தப்பட்டன. கோயில் வளாகங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. விவசாய நிலங்களின் பாசன வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டன.
கோயில்களைச் சிதைவிலிருந்து காப்பாற்றுவதற்கு, முனைப்பான நிர்வாக மேற்பார்வையை மீண்டும் கொண்டுவருமாறு, இந்து சமயத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். இறுதியில், 1927இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் (HRE) சட்டத்தை மெட்ராஸ் மாகாணம் வெற்றிகரமாக இயற்றியது. இதனால், கோயில்கள் மற்றும் அறநிலையங்களை மேற்பார்வை செய்வதற்கு ஆணையர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது 1951ஆம் ஆண்டு மெட்ராஸ் இந்து சமய மற்றும் அறநிலையங்கள் (HR&CE) சட்டத்தால் மாற்றப்பட்டது. இந்துக் கோயில்கள் மற்றும் மடங்களின் மதச்சார்பற்ற விவகாரங்களை முறைப்படுத்துவதற்கு, ஆணையர் ஒருவர் தலைமையில் அரசுத் துறை ஒன்று உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற ஷிரூர் மடம் வழக்கில் (1954) உச்ச நீதிமன்றத்தின் மறுப்புரைகளைக் கருதிப் பார்த்து, 1959இல் புதிய ‘HR&CE’ சட்டம் இயற்றப்பட்டது. பல மாநிலங்கள் மெட்ராஸின் (தமிழ்நாடு) வழியைப் பின்பற்றின.
சி.பி.இராமசுவாமி ஆணையத்தின் பரிந்துரைகள்
1960 மார்ச் மாதம், சி.பி.இராமசுவாமி தலைமையில் உயர்நிலை இந்து சமய அறநிலைய ஆணையம் ஒன்றை இந்திய அரசு நியமித்தது. இந்துக் கோயில்கள், மடங்கள் மற்றும் அறநிலையங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த பின்னர், 1962, மே மாதத்தில் ஆணையம் ஒரு விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் சட்டம் இல்லாத மாநிலங்களில் (அப்போதைய அஸ்ஸாம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம்) உள்ள கோயில்களின் நிலை ‘வருந்தத்தக்கது’ என்பதும், பல முக்கியமான பொதுக் கோயில்கள் தனியார் சொத்தாக மாறிவிட்டன என்பதும் அதன் முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். அம்மாநிலங்களில் இது தொடர்பாகத் தகுந்த சட்டம் இயற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆணையத்தின் முதல் பரிந்துரை.
மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும், அறநிலையங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத சமத்துவமின்மை குறித்து, இந்துக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட ஒவ்வொரு மதத்தின் சிறப்புப் பிரச்சினைகளைக் கையாள உரிய கலந்தாலோசனை செய்ய வலியுறுத்தி, அதற்குப் பின்னர் அனைத்து மதங்களின் நன்கொடைகளை நிர்வகிப்பதற்காக ஒரே மாதிரியான, சீரான சட்டத்தைச் செயல்முறைக்குக் கொண்டுவர சி.பி.இராமசுவாமி அய்யர் ஆணையம் பரிந்துரைத்தது. 1925இல் சீக்கிய குருத்துவாராக்கள் சட்டம் மற்றும் 1995ஆம் ஆண்டு வக்பு சட்டம் போன்றவை உள்ளன. ஆனால், அவை ‘HR&CE’ சட்டத்தின் அளவுக்கு விரிவான கட்டுப்பாட்டு அதிகாரங்கள் கொண்டவை அல்ல.
திருக்கோயிலின் உபரி நிதியை சமூக, கல்வி மற்றும் இதர நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது மெச்சத்தக்க வகையில் இருப்பினும், அதனை விமர்சித்து மத நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சில பழமைவாதிகள் அடிக்கடி வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
சி.பி.இராமசுவாமி அய்யர் ஆணையம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது. மனு, கவுதமா, சயனா மற்றும் லவுகாக்ஷி பாஸ்கரா போன்ற பண்டைய இந்து சாஸ்திர உரையாசிரியர்களின் மேற்கோள்களைக் காட்டி, மதத் தகுதி நிலையை ஏற்படுத்துகிற செயல்பாடுகள் இரண்டு வகைப்படும் என்று ஆணையம் சுட்டிக்காட்டியது. அவையாவன:
(i) “இஷ்டா: வேத தியாகங்களுடன் தொடர்புடைய பணிகள்
(ii) புர்தா: கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஏழைகளுக்கு அன்னதானம், யாத்ரீகர்களுக்கான வசதிகள், தெப்பக்குளங்கள் மற்றும் நந்தவனப் பூங்காக்கள் போன்றவற்றை அமைப்பது ஆகிய பணிகள். உபரி நிதி மாற்றிப் பயன்படுத்தப்படுவது புர்தா இந்து மதக் கோட்பாட்டுக்கு இணக்கமானதாகவே உள்ளது” என்பதைக் குறிப்பிட்டு, உபரி நிதிகளை வேறு நோக்கத்துக்குப் பயன்படுத்துவதற்கு மெட்ராஸ் மாநிலத்தின் 1959ஆம் ஆண்டு HR&CE சட்டத்தின் 36 மற்றும் 66ஆம் பிரிவுகள்போல மற்ற மாநிலங்களும் இயற்ற வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்தது.
ஏராளமான சிக்கல்கள்
கோயில்களையும் அறநிலையங்களையும் கண்காணிக்கும் பணியிலிருந்து அரசு விலகினால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விமர்சகர்களிடையே சரியான மாற்றுத் திட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து இந்து சமய அரசர்களால் கட்டப்பட்டு, நன்கொடை அளிக்கப்பட்ட பொதுக் கோயில்களை ஆங்கில அரசு செய்ததுபோல பிரதிநிதித்துவமற்ற அமைப்புகளிடம் ஒப்படைப்பது பொறுப்பற்ற செயலாகும். சட்டபூர்வமாக இருக்க வேண்டுமென்றால், அறங்காவலர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்துக்களின் அனைத்துப் பிரிவுகளின் பிரதிநிதிகளாகச் செயல்பட வேண்டும். தொகுதி வரையறை செய்து, இந்துக்களுக்கான தனி வாக்காளர் பட்டியலைத் தயார்செய்து, நியாயமான தேர்தலை நடத்தும் பணிகளை மேற்கொள்வது யார்? சீக்கிய குருத்துவாராக்களை மேற்பார்வையிடும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (SGPC) உறுப்பினர்களின் தேர்தல், மாநிலத் தேர்தல் ஆணையத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுவது இந்து மதத்தினர் அதிக அளவில் அரசைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலை உருவாக்காதா, பக்தி நிரம்பிய, நேர்மையான கோயில் அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் யாவை என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இது குறித்து உருவாக்கப்படும் யாதொரு மாற்று ஏற்பாட்டு முறையும், தற்போது உள்ளதைக் காட்டிலும் குறைந்த அளவிலான மனநிறைவையே நமக்கு அளிக்கும்.
ஒட்டுமொத்த இந்து சமயத்துக்கும் ஒரு சரியான திருக்கோயில் கட்டமைப்பு (ecclesiastical organisation) இல்லாததால், கோயில் நிர்வாகத்தில் தவறுகள் நடந்தால் அதற்கு எதிராகக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே மோதல்கள், சச்சரவுகள் தீர்க்கவும் வழியில்லை. தற்போது இல்லாத திருக்கோயில் கட்டமைப்பை முன்பு இந்து மன்னர்களின் ஆட்சி வழங்கிவந்தது; இன்று இந்து சமய மற்றும் அறநிலையங்கள் (HR&CE) துறை வழங்கிவருகிறது.
மொத்தத்தில், (HR&CE) சட்டங்கள் இந்துக் கோயில்களுக்கு நன்மை தருபவையே ஆகும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் உள்ள 88% கோயில்களின் ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. அரசின் ஆதரவு இல்லாமல் இந்தக் கோயில் களால் ஒரு நாளைக்கு ஒரு பூஜைகூடச் செய்ய இயலாது. மேலும், அரசின் ஆதரவு இல்லாமல் அர்ச்சகர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்கவும்,
கோயில்களின் வளாகத்தை நல்ல முறையில் பழுது பார்க்கவும் இயலாது. (HR&CE) துறையின் செயல்பாடுகளில் சில குறைபாடுகள் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது. இவற்றைச் சரிசெய்ய நல்ல அமைச்சர் மற்றும் அதிகாரிகளும், குடிமைச் சமூகத்தின் ஈடுபாடும், விரைவான நீதித் துறை நடவடிக்கைகளும் தேவை. (HR&CE) துறை இல்லாமல்போனால் பொதுக் கோயில்கள் தனியார் சொத்தாக மாறிவிடக்கூடும் அல்லது அலட்சியம் காரணமாகச் சிதைந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை; இதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ‘தலையீடு செய்யாமை’ என்ற முழக்கத்தைக் கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால், நிர்வாக நடைமுறையில் அது சாத்தியமற்றது.
- க.அஷோக் வர்தன் ஷெட்டி, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்.
தொடர்புக்கு: shetty25@hotmail.com
நன்றி: "இந்து தமிழ் திசை" -10.10.2021
No comments:
Post a Comment