17.04.1948 - குடிஅரசிலிருந்து....
கேள்வி : தங்களுக்கும் தோழர் சி.என். அண்ணாதுரை அவர்களுக்கும் ஏதோ அபிப்பிராய பேதம் இருப்பதாகவும், தலைவர்களுக்குள் ஏற்பட்ட அக்கருத்து மாறுபாடு தூத்துக்குடி மாநாட்டிலாவது தீரவேண்டும் என்றும் சிலர் எழுதியும், பேசியும் வருகிறார்களே! இதைப் பற்றிய தங்களின் கருத்தென்ன?
விடை:- இது ஏதோ ஒன்றை எதிர்பார்த்துச் செய்யப்படும் தந்திரப் பிரசாரமே தவிர மற்றபடி, இது கவனிக்கத்தக்கதல்ல. ஏன் என்றால் ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருக்க முடியும். மற்றவர்கள் அக்கட்சியில் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லப்படுபவர்களே தவிர, தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் அபிப்பிராய பேதம் கொண்டவர்களாக இருக்க முடியாது.
இயக்கத்தில் உள்ள எவருக்கும் எனக்கும் அபிப்பிராய பேதம், உண்டு என்றால் அது எங்கள் சொந்த விஷயமாகத்தான் இருக்க முடியுமே தவிர, இயக்கத்தைப் பற்றி அபிப்பிராய பேதம் இயக்கத்தில் இருப்பவர்களுக்குள் இருக்க முடியாது. இயக்கத்தில் தலைவன் என்கிற தன்மையில் என்னோடு மாறுபட்டவர்கள் என்பவர்களுக்கும், இயக்கக் கொள்கையில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் என்பவர்களுக்கும், இயக்கத்தில் இடமிருக்க முடியாது. அப்படி ஒருவர் இருந்து கொண்டு தங்களை இயக்கக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வதும், வேறு ஒருவரால் அப்படிச் சொல்லப்படுவதும், வேறு சொந்தக் கருத்தை லட்சியமாகக் கொண்டதாக இருக்க முடியுமே தவிர, இயக்க சம்பந்தம் பற்றியதாக இருக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்ட அதாவது திராவிடர் கழக இயக்கத்திற்கு ஒரு நல்ல கிளர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டு மக்கள் ஆதரவைப் பெற்று வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற சமயத்தில், சில நபர்கள் பெயர்களை உச்சரித்து, அவருக்குத் தலைவரோடு அபிப்பிராய பேதம், கொள்கையில் அபிப்பிராய பேதம் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுமானால், அது குறுக்கு வழியில் விளம்பரம் தேடிக் கொடுப்பதும், தன்னாலான அளவுக்கு இயக்கத்துக்குத் தொல்லை கொடுப்பதும் ஆன காரியமாய் இருக்கலாம் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து. இப்படிப்பட்ட சில்லறைத் தொல்லைகளையும், சமாளித்து நடந்தேற வேண்டிய நிலை நம் இயக்கத்திற்கு இருந்து வருகிறது என்பதுதான் இதன் கருத்து. இது எந்த இயக்கத்திற்கும் இயற்கையே.
No comments:
Post a Comment