ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுடில்லி, அக்.16 பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஜெய்ப்பூர் மாணவர் மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார்.

அய்அய்டி, என்அய்டி உள்ளிட்ட ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதலாம். 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்குவதாக இருந்து, கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்வை அய்அய்டி காரக்பூர் நடத்தியது.

இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று (15.10.2021) வெளியாகின. இதில் ஜெய்ப்பூர் மாணவர் மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார் அவர் 360 மதிப்பெண்களுக்கு 348 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மாணவிகள் பிரிவில், ஜேஇஇ மெயின் தேர்வில் காவ்யா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார். அவர் 286 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்வை 1,41,699 பேர் எழுதினர். அதில் 41,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment