மத வழிபாட்டு இடங்களின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

மத வழிபாட்டு இடங்களின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.30- மத வழிபாட்டுத் இடங்களின் விதிமீறல்கள் தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய கட்டுமான அங்கீகாரம் மற்றும் அனுமதியின்றி கட்டப் பட்டுள்ள தேவாலயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஈரோடு தொப்பம்பாளையத்தில் உள்ள பெந்தகோஸ்த் மிஷன் சர்ச் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில், உரிய அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தைப் பயன் படுத்த அனுமதிக்க முடியாது. வழிபாட்டுத் தலங்களில் அனு மதிக்கப்பட்ட அளவை விட கூடுத லான சப்தத்துடன் தடை செய்யப் பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத் தவும் அனுமதிக்க முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித் துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. கட்டட அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டும். உரிய அங்கீகாரமோ அல்லது அனுமதியோ இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இயங்குவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் ஒலி எழுப்புவது போன்ற வற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத வழிபாட்டு இடங்களால் ஏற்படும் இடையூறு களால் ஒரு மனிதன் நிம்மதியாக தூங்கக்கூட முடிவதில்லை.

பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உரிய பாதுகாப்பை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மக்களின் மத ரீதியிலான உணர்வுகளை காரணம் காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பி பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதி மீறல்களை அரசு தீவிரமாகக் கருத வேண்டும். மத வழிபாட்டுத் இடங் களுக்கு கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அமைதியான வாழ்க் கைக்கு எந்தவொரு குந்தக மோ அல்லது இடையூறோ ஏற்படக் கூடாது என்பதை மனதில் வைத்து எச்சரிக்கை உணர்வுடன் முடிவு எடுக்க வேண்டும்.

உருவாக்கப்பட்டுள்ள சட் டங்கள் அமல்படுத்து வதற்காகத் தானேயன்றி அவை புத்தகத்தில் இருப்பதற்காக அல்ல என்பதை அதிகாரிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சட்டத்தை அமல்படுத்துவதில் யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாதுஎன உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

பின்னர் இந்த வழக்கில் தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரை இணைத்த நீதிபதி, கட்டட விதிமீறல் மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் மத வழி பாட்டுத் தலங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், அதிகாரிகளுக்கு முறையான உத் தரவுகளையும், சுற்றறிக்கையையும் பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment