வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை
சென்னை,அக்.30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மேலாண்மை ஆய்வுகள் துறை மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இணைந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கு எனும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை இன்று (30.10.2021) காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடந்தது.
டிசம்பர் 3 இயக்கக் காப்பாளர் சாலை மாணிக்கம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஸ்.அண்ணாமலை வரவேற்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் டி.எம்.என்.தீபக் முன்னிலை வகித்து கருத்தரங்கத்தின் நோக்கம், குறிக்கோள்குறித்து எடுத்து ரைத்தார்.
அவர் தமது உரையில்,
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை நாள் என்பதை உணர்த்தும் வகையில் டிசம்பர் 3 இயக்கத்தின் பெயராகக் கொண்டுள்ளோம். 2016ஆம் ஆண்டு சட்டத்தின்படி அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சீனாவில் 1992 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக இந்தியா கையொப்பமிட்டதன் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு சட்டம் உள்ளது.
அறிவியல்படி சமூக நீதியுடன் உரிமைகள் தேவை
இந்த பயிற்சிப்பட்டறை நடத்த உற்றதுணையாக இருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதில் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். ஆனால், மாற்றுத்திறனாளிகளை திவ்யஜன் என்று- கடவுளின் குழந்தைகள் என்று கூறுகிறார்கள். ஆனால் அறிவியல் முறைப்படி சமூகநீதிப்படி மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.
நாட்டுக்கே சமூகநீதியில் வழிகாட்டியாக இருப்பவர் தமிழர் தலைவர். மண்டல் அறிக் கையை நடைமுறைப்படுத்தி சமூகநீதிக்காக அனைத்து வகைகளிலும் பாடுபட்டவர் தமிழர் தலைவர், இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகநீதிக்கான பிரகடனத்தில் முதல் கையொப்பமிட்ட தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு முதல மைச்சரிடம் தமிழர் தலைவர் வலியுறுத்த வேண்டும் என்று கோரினார்.
பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து வேந்தர் சிறப்புரை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப்பட்டறையைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
எஸ்.பாலபாரதி எழுதிய எழுதாப்பயணம் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சந்துருவுக்கு என்னாச்சு ஆகிய நூல்களை டிசம்பர் 3 இயக்கத்தின் காப்பாளர் சாலை மாணிக்கம், வேந்தர் டாக்டர் கி.வீரமணியிடம் வழங்கி சிறப்பு செய்தார்.
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப்பட்டறையைத் தொடக்கிவைத்து சிறப்புரையில் குறிப்பிடுகையில்,
மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கு பயிற்சிப்பட்டறையேவெற்றித் திருவிழா ஆகும். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். ஊராட்சி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றப் பொறுப் பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சமூகநீதிக்கான சரித்திர
நாயகரின் நல்லாட்சி!
இன்று அமைந்துள்ள ஆட்சியே சமூக நீதியின் இன்னொரு பகுதிதான். சமூக நீதியை செயல்படுத்துவதற்குத்தான் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சி அமைந்திருக்கிறது. முன்பிருந்த ஆட்சியைப்போலன்றி இன்றைய திமுக ஆட்சி ஆயிரம் காதுகளுடன் செயல்படும் ஆட்சியாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் போட்டியே போட முடியாது என்பதை மாற்றிக்காட்டியது முதல் வெற்றி.
அடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல. உரிமை.
தந்தை பெரியார் தொடங்கிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் எவரும் பரிதாபப்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதவர்கள். பகுத்தறிவு, சுயமரியாதை உள்ளவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர்தான் மாற்றுத்திறனாளிகள் என்ற சொற்றொடரை உருவாக்கினார். ஊனமுற்றவர் எனும் சொல்லே ஊனப்படுத்துவதாகும். உடற்குறையைப்பற்றி கவலைப்படாமல் சாதாரண மனிதர்களைவிட மாற்றுத்திறன் பெற்றிருக்கிறார்கள்.
ஏமாற்றுத் திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையேதான் போராட்டம்.
காலம் காலமாக தங்களுக்கு மட்டுமே தகுதி, திறமை என்று கூறிவந்தார்கள். அதையே மாற்றியது திராவிட இயக்கம்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உங்களுடன் இணைந்துள்ளது. உங்களில் ஓர் அங்கமாக நாங்கள் இருக்கிறோம்.
உள்ளாட்சி தேர்தலில் 48 பேர் வாய்ப்பு பெற்று, 9 பேர் வெற்றி பெற்றுள்ளீர்கள் நவமணிகள் போல்.
உள¢ளாட்சிக்கு ஆரம்பப்பள்ளிக்கூடம் ஊராட்சிதான். முதலமைச்சர், குடியரசுத் தலைவருக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் கிடையாது. ஊராட்சிதான் வேர். ஜனநாயகத்தில் மக்களாட்சியில் அடிப்படையானது.
உள்ளாட்சி நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்றார் முதலமைச்சர். முன்பு வல்லாட்சியாக இருந்தது.
திராவிடர் கழகம்
உறுதுணையாக இருக்கும்
முன்பு போட்டி போடவே முடியாது என்று இருந்தது மாறியுள்ளது.
உள்ளாட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரியுள்ளீர்கள். திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும்.
கோரிக்கை எனும்போது, வாதாடுவது ஒரு முறை. பின்னர் போராடுவது. போராட்டம் நடத்துவது அடுத்தது.
ஆனால், இன்றைய திமுக ஆட்சியில் வாதாடவும் வேண்டாம். போராடவும் வேண்டாம். ஏனென்றால், இந்த ஆட்சி திராவிட இயக்கத்தின் கூறு. சொன்னாலே போதும்.
மாற்றுததிறனாளிகள் கோருவது சலுகை அல்ல. உரிமை. முழு மனிதனாக இருப்பவன் மாற்றுத்திறனாளியாக ஆகலாம். இளைஞர்கள் முதியவர்கள் ஆகலாம்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என்று யாரும் அலட்சியப்படுத்தக்கூடாது.
உரிய அளவுக்கு அரசுக்கு, முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்வோம்.
உங்கள் கோரிக்கை என்று இல்லாமல் நம்முடைய கோரிக்கையாக, நாம் என்று ஒருங்கிணைத்து சொல்லும் அளவுக்கு இந்த இயக்கம் உறுதுணையாக இருக்கும்.
மகளிர் ஒதுக்கீடு போல், மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டுக்கும் இயக்கம் உறுதுணையாக இருக்கும்.
ஊராட்சி மட்டுமல்ல, சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு வரவேண்டும்.
ஊராட்சி சட்டத்திட்டங்களை படியுங்கள். இந்த பயிற்சிப்பட்டறையை நடத்தும் உங்களுக்கு வாழ்த்துகள்.
உறுதுணையாக என்றும் நாங்கள் இருப்போம். உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வோம்.
இவ்வாறு வேந்தர் உரையில் குறிப்பிட்டார்.
"இந்திய அரசியல் நடைமுறையில் உள்ளாட்சியின் முக்கியத்துவமும், பொறுப்பு, கடமை மற்றும் அதிகாரமும்" எனும் தலைப்பில் தன்னாட்சி அமைப்புகளின் பொதுச் செயலாளர் எஸ்.நந்தகுமார், "உள்ளாட்சி சட்டங்கள்" தலைப்பில் ‘செல்லமே’ இதழ் மூத்த செய்தியாளர் கே.எஸ்.துரைராசு, "மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016: உண்மைகளும், நடைமுறைகளும்" தலைப்பில் பிராவ்டா லா அசோசியேட்ஸ் நிறுவனர், தலைவர் ஆர்.பிரபாகரன், "மாற்றுத் திறனாளிகளின் அரசியலும், பொறுப்புகளும்" தலைப்பில் பேராசிரியர் டி.எம்.என்.தீபக், "தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் முக்கியத்துவம் குறித்த விவாதம்" தலைப்பில் லயோலா கல்லூரியின் சமூக பணி துறை உதவிப்பேராசிரியர் ஃபிரான்சிஸ் ஆகியோர் பயிற்சிப் பட்டறையில் வகுப்பெடுத்தனர்.
நிகழ்வின் முடிவில் டிசம்பர் 3 இயக்க மாநில பொருளாளர் வரதன்பூபதி நன்றி கூறினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பாகிய டிசம்பர் 3 இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பலரும் பெரிதும் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தமிழர் தலைவருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment