ஹிந்துமதம் ஆபத்தில் உள்ளது என்ற கருத்துக்கு எவ்வித சான்றுகளும் இல்லை. இது கற்பனையான ஒன்று என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் கூறியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத் தேர்தல் மற்றும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது ஹிந்து மதம் பெரும் ஆபத்தில் உள்ளது என்று மோடி உள்ளிட்ட அனைத்து மூத்த பாஜக தலைவர்களும் பேசிக்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ஹிந்து மதம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப் பட்டது.
நாக்பூரில் உள்ள மகனீஷ் ஜபல்பூரே என்பவர் உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒன்றின் மூலம், ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் ஆபத்து என்பதை எப்படி அறிந்துகொண்டீர்கள்? எதன் மூலம் மிரட்டல் வருகிறது? இதுவரை எத்தனை ஹிந்துக்கள் இந்த ஆபத்தில் சிக்கி உள்ளனர்? ஹிந்து மதத்தின் மீதான தாக்குதல் எவ்வகையில் நடத்தப்படுகிறது? என பல கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டுள்ளார்.
இவரது இந்தக் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் பதில் கூறியுள்ளது, அதில் 'ஹிந்து மதத்திற்கு ஆபத்து என்று கூறுவது வெறும் கற்பனை மட்டுமே, அதற்கான எந்த ஒரு சான்றுகளும் தற்போது எங்களிடம் இல்லை. இது ஒரு தேர்தல் மற்றும் பொதுக்கூட்டப் பேச்சு மட்டுமே' என்று பதில்கூறி உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் முறையாகப் பதில் தருவதுண்டா? இல்லை என்பதுதான் யதார்த்தம்.
மதம் தொடர்பான இந்தக் கேள்விக்கு அரசு பொறுப்பேற்றுப் பதில் சொல்வது என்பதே தவறானது.
ஏதோ அரசாங்கத்தின் புள்ளி விவரம் போல பதில் சொல்லக் கூடிய ஒன்றல்ல இந்தக் கேள்வி. ஹிந்து மதத்தைப் பற்றி கேட்கப்பட்டுள்ளது போல இஸ்லாம் மதம் பற்றியோ, கிறித்துவ மதம் பற்றியோ கேள்வி எழுப்பி இருந்தால், இன்றைய பிஜேபி அரசு எந்த மாதிரியான பதிலை அளித் திருக்கும்?
உண்மையைச் சொல்லப் போனால் பசு மாமிசம் பிரச் சினையில் ஆரம்பித்து, குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் எல்லாம் பிஜேபி அரசின் நிலைப்பாடு என்ன என்பது உள்ளூரில் மட்டுமல்ல - உலகளவிலேயே வெளிச்சத்துக்கு வந்த உண்மையாகும்.
பொதுவாக அரசுக்குச் சம்பந்தமேயில்லாத ஒரு பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சகம் பதில் சொல்ல வேண்டிய தில்லை.
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்து அதன் ஹிந்து மனப்பான்மையைத் தான் காட்டும். சமய ஆச்சாரி யார்கள் சொல்ல வேண்டிய பதிலை ஒன்றிய அரசு சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
உண்மையைச் சொல்லப் போனால் ஹிந்து மதத்திற்கு வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை விட உள்ளுக்குள் ளிருந்து வெடிக்கும் புரையோடிப் போன பிரச்சினைகள்தான் அதிகம்.
ஒரு இஸ்லாமிய பையனை ஜெய் சிறீராம் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தியதையும், சொல்ல மறுத்த அந்தப் பையனைக் கொலை செய்ததையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
குடியரசுத் தலைவராக இருக்கக் கூடிய இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது - வெளியிலிருந்து வந்த தடையா? ஹிந்து மதத்துக்குள்ளிருக்கும் புற்று நோயான தீண்டாமையின் விளைவா? இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகள் அலை அலையாகக் கிளர்ந்து எழ அதிக வாய்ப்பு உண்டே!
450 ஆண்டு கால வரலாறுடைய பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் ஆட்சியில் இருப்பதும், அவர்களே இராமனுக்குக் கோயில் கட்டுவதும் எந்த விதமான சிந்தனை? இது ஹிந்து மதத்தின் மீதான மதிப்பை உயர்த்துமா? கீழிறக்கத்திற்குத் தள்ளுமா?
உண்மைகள் இவ்வாறு இருக்க எந்த அடிப்படையில் உள்துறை அமைச்சகம் ஹிந்து மதம் ஆபத்தில் உள்ளது உண்மையல்ல என்று பதில் சொல்கிறது என்ற கேள்வி எழுமா இல்லையா?
பிஜேபி அதிகாரத்திற்கு வந்தது முதல் ஹிந்து மதவாதம் மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் துயரத்தைக் கொடுத்து வரும் பெரு நோயாக மாறி விட்டது என்பது மட்டும் உண்மையே!
No comments:
Post a Comment